|
|
வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு போரிலிருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்து செல்லும் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்காவின் முப்படையினரும் கடும் தாக்குதலை தொடங்கியுள்ளர். இதில் இன்று அப்பாவி பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர். |
வடமராட்சி கிழக்குப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிறிலங்கா வான், கடல் மற்றும் தரைப்படையினர் கூட்டாக இணைந்து பொதுமக்களை இலக்கு வைத்து செறிவான தாக்குதலை நடத்தினர். இதில் 40 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். கல்லாறு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அப்பாவி பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு தேராவில் பகுதியில் பொது மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பத்து பேர் காயமடைந்தனர். ரமேஸ்குமார் சஞ்சீவன் (வயது இரண்டரை) செல்வராசா தர்சிகா (வயது 15) ஆ.பிரமிலன் (வயது 17) மரியதாஸ் அந்தோனி (வயது 85) பொன்னம்மா (வயது 75) ம.சண்முகலிங்கம் ஆகியோர் காயமடைந்துள்ளனர். மேலும், நான்கு பேரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. காயமடைந்தவர்கள், தற்போது தர்மபுரத்தில் இயங்கிவரும், கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் மற்றைய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரம் தெற்குப் பகுதியில் இன்று காலை முதல் சிறிலங்கா படையினர் இடம்பெயர்ந்த மற்றும் நிலையான பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். வட்டக்கச்சி பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர். சுண்டிக்குளம் பகுதியில் இன்று முற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலிலும் வான்குண்டுத் தாக்குதலிலும் பொதுமக்கள் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தருமபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
http://www.puthinam.com/full.php?2b1VoKe0dAcYA0ecAA4o3b4C6DD4d2f1e2cc2AmS3d424OO2a030Mt3e
No comments:
Post a Comment