Saturday, January 31, 2009

"தமிழீழ மக்கள் படுகொலையை இந்தியா தடுக்க வேண்டும்": தன்னையே எரியூட்டிய மதுரை தமிழர்

 
தமிழீழ மக்களை கொன்று குவித்து வரும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திண்டுக்கல் அருகே தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளார். ஆபத்தான நிலையில் அவர் மதுரை அரச மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினரான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலுச்சாமி ரவி (வயது 39) என்பவரே இவ்வாறு தீக்குளித்தவர் ஆவார்.

தனது நான்கு பிள்ளைகளில் ஒருவரக்கு அவர் பிரபாகரன் என்று பெயரிட்டிருக்கின்றார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6:30 நிமிடமளவில் வீட்டில் இருந்து 100 அடி தொலைவில் நடுச்சாலையில் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி ரவி தீக்குளித்தார்.

உடனடியாக அவரை - நிலக்கோட்டை அரச மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் மதுரை அரச மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டார்.

தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பாக அவர் தனது நண்பர்களிடம் அண்மைக்காலத்தில் அடிக்கடி சொல்லி கண்டித்து வந்துள்ளார்.

மதுரை அரச மருத்துவமனையில் வைத்து ரவி செய்தியாளர்களிடம் கூறிய போது:

"இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது எனக்கு வேதனையாக உள்ளது. இந்திய அரசாங்கம் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றது. அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே நான் தீக்குளித்தேன்'' என்றார்.

ரவி தீக்குளித்தது குறித்து அவரின் மனைவி சித்ரா கூறிய போது:

"கடந்த சில நாட்களாகவே எனது கணவர், மனவேதனையில் இருந்தார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்பாக தொலைக்காட்சியில் அடிக்கடி செய்தியை பார்த்துக் கொண்டிருந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது அவருக்கு மிகவும் பிரியம் இருந்ததால் எனது மூத்த மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்திருந்தார்" என்றார்.

மகன் பிரபாகரன் ஊடகவியலாளர்களிடம் கூறிய போது:

"எனது தந்தை ஈழத் தமிழர்கள் தொடர்பாக அடிக்கடி பேசி வருவார். அண்மையில் முத்துக்குமார் இறந்த செய்தியை கேட்டு அவர் மிகுந்த மனவேதனையில் இருந்தார். அது குறித்து அடிக்கடி எங்களிடம் பேசி வந்தார். எனக்கு கூட பிரபாகரன் என்ற பெயரை மிகவும் விருப்பப்பட்டு வைத்தார். இப்போது அவர் ஈழத் தமிழர்களுக்காக உயிரை விடுவதற்கு இந்த முடிவை எடுத்துள்ளார்" என்றார்.

 

http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1233422446&archive=&start_from=&ucat=&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails