Monday, January 26, 2009

"மக்கள் எங்கள் மனிதக் கேடயங்களா?... வன்னிக்கு வந்து நிலைமையைப் பாருங்கள்": அனைத்துலக அமைப்புக்களுக்கு நடேசன் பகிரங்க அழைப்பு

"மக்கள் எங்கள் மனிதக் கேடயங்களா?... வன்னிக்கு வந்து நிலைமையைப் பாருங்கள்": அனைத்துலக அமைப்புக்களுக்கு நடேசன் பகிரங்க அழைப்பு
 
"வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" என்று  தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்  பா.நடேசன் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார்.
"எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக சிறிலங்கா அரசாங்கம் இதனைச் சொல்கின்றது" என பா.நடேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் புலிகள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கேட்கப்பட்ட போது,  "எம் மீது அவர்கள் வைப்பது ஒர் அபாண்டமான குற்றச்சாட்டாகும். எமது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எம்முடன் வருகின்றனர். இங்குள்ள மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும்" என தெரிவித்த அவர்,
"இவ்வாறாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுக்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். இங்கு கண்மூடித்தனமாக நிகழும் எறிகணைத் தாக்குதல்களை நிறுத்திவிட்டு அவர்கள் வன்னிக்கு வந்து மக்களின் மனநிலை என்ன என்பதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என அவர்களுக்கு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டாரா என்பது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், "எமது தலைவர் எங்கும் சென்று விடவில்லை. அவரும், எமது போராட்ட இயக்கமும் எமது மக்களுடனேயே இருந்து போராடுகின்றோம்" என அவர் தெரிவித்தார்.
பெரும் இராணுவப் பின்னடைவைக் கண்டுள்ள நிலையில் புலிகள் இயக்கம் ஏன் ஒரு அரசியல் தீர்வைப் பெறக்கூடாது என்பது தொடர்பான ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், "சுதந்திரமான, கெளரவமான ஒரு அரசியல் தீர்வுக்காகவே நாம் போராடுகின்றோம். அது எல்லோருக்குமே நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். எமது மக்களின் அந்தச் சுதந்திரமும் கௌரவமும் உறுதிப்படுத்தப்படும் வரை நாம் போராடியே தீருவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinam.com/full.php?2b44OO44b3aC6DR34d21VoK2a03K4AKe4d2YSmAce0de0MtHce0df1eo2cc0ycYU3e

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails