|
|
|
தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம் பாக்கத்திலுள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் முன்பாக, நேற்று வியாழக்கிழமை காலை, பத்திரிகையாளரான முத்துக்குமார் அவர்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு விடிவு வரவேண்டும், தமிழ் மக்கள் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழவேண்டும் போன்ற 11 அம்சக் கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து, தீக்குளித்து தன்னுயிரைத் தியாகம் செய்தார். |
இந்த சம்பவத்தை அடுத்து, நூற்றுக் கணக்கான பிரஞ்சுத் தமிழ் மக்கள் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் பாரிஸ் நகரத்திலுள்ள லாச்சப்பல் பகுதியில் ஒன்று கூடி, ஈழத்தமிழ் மக்களுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகி. முத்துக்குமார் அவர்களை நினைந்து, அவரது உயிர்த் தியாகத்திற்கு தலை சாய்த்து அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டிருந்தனர். இதே நேரம் இன்று வெள்ளிக்கிழமை பிரான்சின் பாரிஸ் நகரத்திலுள்ள, உலக அதிசயங்களுள் ஒன்றான ஈகிள் கோபுர முன்றலில் உண்ணாநோன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது. அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசும், இராணுவமும் முனைப்புக் காட்டி நிற்கிறது. இந்த சம்பவங்களை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறும் வகையிலேயே, உலக அதிசயம் முன்பாக உண்ணா நோன்பு நடவடிக்கை ஓர் ஈழத்தமிழ் உணர்வாளரால் மேற்கொள்ளப்படவிருக்கின்றது. |
No comments:
Post a Comment