ஈழத்தமிழர்களுக்காக தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ் மகன் முத்துகுமாரின் உடலை தமிழீழத்திற்கு அனுப்புமாறு விடுதலைப் புலிகள் கோரியதாக இன்று நடைபெற்ற முத்துக்குமாரின் இறுதி நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.
எனினும், அவரது உடலை அனுப்பி வைக்க முடியாமையால் தமிழீழத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அவருக்கான நடுகல் ஒன்றை அமைப்பதற்கு அவரது வித்துடலின் சாம்பலை அனுப்பி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இன்று நடைபெற்ற இறுதி நிகழ்வில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டதுடன், மிக நீண்ட நேரம் இடம்பெற்ற இறுதி ஊர்வலம் நள்ளிரவுக்கு சற்று முன்னதாகவே நிறைவு பெற்றது. எனினும் நள்ளிரவு கடந்தும் உணர்ச்சிகர உரைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதேவேளை, மாணவர்களின் உணர்வுகள் கரைபுரண்டு பெரும் எழுச்சியாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில் அதனைத் தணிப்பதற்காக காலைவரையின்றி பாடசாலைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் ஒன்றிணைவதைத் தடுத்து, தமிழகத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக கிளர்ந்தெழும் உணர்வைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையை தி.மு.க கலைஞர் கருணாநிதியின் அரசு எடுத்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment