|
|
சிறிலங்கா அரசாங்கம் 48 மணி நேர போர் நிறுத்தம் அறிவித்திருப்பதாக ஊடகங்கள் ஊடாக செய்திகளை வெளியிட்டிருந்தது. ஆனால், இன்றும் வழமை போலவே பொதுமக்கள் குடியிருப்புக்கள், சந்தைகள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் எனப் பாராது கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம் சாட்டியுள்ளார். |
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இன்றும் கூட சிறிலங்கா அரச படையினரின் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர் வரை கொல்லப்பட்டும் 60-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தும் உள்ளனர். தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். எனவே, சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது உலகத்தை ஏமாற்றுவதற்கும் தமிழகத்தின் ஏழு கோடி தொப்புள் கொடி உறவுகளின் எழுச்சியை மழுங்கடிப்பதற்கான சூழ்ச்சியின் வெளிப்பாடாகவே நாம் பார்க்கின்றோம். போர் நிறுத்தம் என்று சிறிலங்கா அரசாங்கமானது அறிவித்தபோதிலும் இன்றும் தொடர்ச்சியாக உடையார்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள உலக கத்தோலிக்க திருச்சபையின் தொண்டு நிறுவனமான கியூடெக் நிறுவனத்தின் மீது சிறிலங்கா படையினர் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டதனால் அங்குள்ள உணவுக்களஞ்சியங்கள் எரிந்த வண்ணம் உள்ளன. அத்துடன், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நிலைகொண்டுள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையை அண்மித்த பிரதேசங்களிலும் தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமே உள்ளன. இதனால் அங்குள்ள நோயாளர்கள், மருத்துவர்கள் மிகவும் அச்சமும் பதற்றமும் அடைந்த நிலையில் உள்ளனர். அனைத்துலக சமூகத்தின் ஒத்துழைப்போடு ஏற்படுத்தப்படுகின்ற நிரந்தரமான போர் நிறுத்தமும் அதனுடன் கூடிய அரசியல் பேச்சுவார்த்தையுமே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்தும் என்று தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் நம்புகின்றனர் என்றார் பா.நடேசன். |
No comments:
Post a Comment