|
|
சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை மற்றும் வான் தாக்குதல் காரணமாக வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு சென்று மகிந்த அரசாங்கம் அமைத்த நலன்புரி நிலையங்களில் அடைக்கலம் புகுந்த பொதுமக்களில் இளைஞர்களும் பெண்களும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் பற்றைக்காடுகளிலும் மயானங்களிலும் புதைக்கப்படுவதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. |
பெண்கள் பலர் விசாரணைக்காக இரகசிய முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் அவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் பலர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம், பொலநறுவையில் உள்ள மயானங்கள், காட்டுப் பிரதேசங்கள் மற்றும் வவுனியாவில் உள்ள மக்கள் நடமாட்டமற்ற பற்றை பகுதிகள் போன்ற இடங்களிலேயே கொல்லப்படும் இளைஞர்களின் உடலங்கள் புதைக்கப்பட்டுவதாகவும் பெண்களின் உடலங்கள் எரிக்கப்படுகின்றது என்றும் நேரில் கண்ட சிங்கள தொழிலாளர்கள் அனுராதபுரத்தில் உள்ள பிரதேச ஊடகவியலாளர்கள் சிலரிடம் தகவல்களை வெளியிட்டுள்ளனர். கடந்த சில வாரங்களில் மட்டும் 25 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 27 பெண்கள் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளனர் என்றும் அனுராதபுரம் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கின்றார். காணாமல் போன அல்லது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமது உறவுகள் குறித்து வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் கூட முறையிட முடியாது உள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். அப்படி இருந்தும் சில முறைப்பாடுகள் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் ஆணைக்குழு அதிகாரிகளுடன் ஊடகவியலாளர்கள் சிலர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் கருத்துக்கூற மறுப்பு தெரிவித்துள்ளனர். வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் வவுனியா நகருக்கு வெளியே செல்ல முடியாதவாறு படையினர் தடை விதித்துள்ளதாக வவுனியா தகவல்கள் கூறுகின்றன. வவுனியாவில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் நலன்புரி நிலையங்களுக்கு சென்று அவர்களை பார்வையிட முடியாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட பின்னர் 600-க்கும் அதிகமான இளைஞர்கள், பெண்கள் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ஒன்று சிறிலங்காவின் உயர் நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போதைய சிறிலங்கா படைத் தளபதி சரத் பொன்சேகா அப்போது யாழ். மாட்ட கட்டளை அதிகாரியாக கடமையாற்றி இருந்தார் என்பதே அதற்கு காரணமாகும். யாழ். சுண்டிக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமராசாமி அரியாலை சந்தியில் உள்ள படையினரின் சோதனைச் சாவடியில் கைதாகி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போதே செம்மணி புதைகுழி விவகாரம் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது. |
http://www.puthinam.com/full.php?2b1VoKe0dIcYU0ecKA443b4C6Dr4d2f1e3cc2AmS3d434OO2a030Mt3e
No comments:
Post a Comment