சிறிலங்கா அரசாங்கத்தினுடைய விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கிய படையெடுப்பு மாபெரும் மனித உயிர்களைப் பலியெடுத்துள்ளது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிவோண்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இலங்கை இனப்பிரச்சினையானது தீவிர பிரச்சினையாக ஐக்கிய இராச்சியத்திற்கும் அதன் மக்களுக்கும் மாறியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தினுடைய விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கிய படையெடுப்பு மாபெரும் மனித உயிர்களைப் பலியெடுத்துள்ளது.
தொடர்ச்சியாக இலங்கையின் வட பகுதியில் மனிதாபிமான சீரழிவு நிலையையும் மனித உயிர் அழிவுகளையும் நான் மிகுந்த கவனத்தில் எடுத்துள்ளேன். இந்த நிலை கடந்த சில நாட்களில் மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த 14 ஜனவரியில் பிரதமர் ஒரு யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இரு பகுதியினரும் மனிதாபிமான யுத்த நிறுத்தத்தை செய்யுமாறு, நான் இங்கு மீண்டும் அதனை வலியுறுத்துகின்றேன்.
பொதுமக்கள் போர் நடக்கும் பகுதியில் இருந்து விலகிச் செல்வதற்கும் மனிதாபமின உதவிகள் பாதுகாப்பாக அவர்களை சென்றடைவதற்கும் உரிய மனிதாபிமானப் பாதையைத் திறந்து அதனை இரு பகுதியினரும் மதித்து நடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்தோடு, காயமடைந்த மக்களுக்கான மருத்துவ சிகிச்சை உடனடியாகக் கிடைக்க வேண்டும். ஐக்கிய இராச்சிய அரசானது இரு பகுதிகளையும் சர்வதேச மனிதாபிமான விதிகளுக்கு அமைய செயற்படுவதற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கும்.
இலங்கையில் இருக்கும் அனைத்து பகுதி மக்களுக்கும் ஏற்ற நிரந்தரமான அமைதித் தீர்வொன்றை ஏற்படுவதிலேயே எமது நிலைப்பாடு உள்ளது. இந்த சிக்கலான தருணத்தில் அனைத்து பகுதி மக்களுக்கும் உரிய உரிமைகளைப் பெற்றுத்தரக்கூடிய ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் எனத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment