Saturday, January 31, 2009

மீண்டும் இன்று 12 சிறுவர்கள் உட்பட 50 தமிழர்கள் படையினரால் கொலை: 169 பேர் படுகாயம்: சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலயம்" கொலைக் களமாகியது: அவலப்பட்டு மக்கள் சிதறி ஓட்டம்

 
 
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியான சுதந்திரபுரம் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும், உடையார்கட்டு மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலும் 12 சிறுவர்கள் உட்பட 50  தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 169 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சுதந்திரபுரம்
சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய"த்திற்குள் இடம்பெயர்ந்து திரளாகத் தங்கியிருந்த பொதுமக்கள் மீது இன்று சனிக்கிழமை காலை 9:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதே பகுதி மீது, மீண்டும் பிற்பகல் 12:30 நிமிடமளவிலும், மீண்டும் பின்னர் பிற்பகல் 2:00 மணியளவிலும் பொதுமக்களை இலக்க வைத்து சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் 12 சிறுவர்கள் உட்பட 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலில், அப்பகுதி மக்களின் குடியிருப்புக்கள் பெருமளவு அழிந்துள்ளதுடன் உடமைகள் மற்றும் ஊர்திகளும் நாசமாக்கப்பட்டுள்ளன.
உடையார்கட்டு
உடையார்கட்டுப் பகுதி நோக்கி இன்று சனிக்கிழமை காலை 5:30 நிமிடத்தில் இருந்து தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் பீரங்கித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கியும் இன்று காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தேவிபுரம்
தேவிபுரம் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி இன்று காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை ஒரு தமிழர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தேராவில்
தேராவில் பகுதியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி சிறிலங்கா படையினர் இன்று நடத்திய அகோர பீரங்கித் தாக்குதல் நடத்தினர்.
இதில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.
மூங்கிலாறு
மூங்கிலாறு பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி இன்று சிறிலங்கா படையினர் பீரங்கி தாக்குதல் நடத்தினர். இதில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர்.
வலைஞர்மடம்
வலைஞர்மடம் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி இன்று சிறிலங்கா படையினர் பீரங்கி தாக்குதல் நடத்தினர்.
இதில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
கடுமையான பீரங்கித் தாக்குதல் எல்லா இடங்களிலும் தொடர்வதாலும், மக்கள் நாலா பக்கமும் உயிரைப் பாதுகாக்க சிதறி ஓடுவதாலும், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த தமிழர்களின் பெயர் விபரங்களை சேகரிக்க முடியாதிருப்பதாக  தெரிவித்துள்ளனர்

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails