வன்னியிலுள்ள தமிழ் மக்களை வெளியேறுமாறு கோரி 48 மணி நேர அவகாசம் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அங்கிருந்து வெளியேற தயாராக இல்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்த அறிக்கை வருமாறு:-30-01-2009
வன்னி மக்கள் மீது இடம்பெறவுள்ள மனிதப் படுகொலையை தடுத்து நிறுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்
வன்னியிலுள்ள தமிழ் மக்களை வெளியேறுமாறு கோரி 48 மணி நேர அவகாசம் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அங்கிருந்து வெளியேற தயாராக இல்லை.
காரணம் கடந்த காலப்பகுதியில் யாழப்பாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் நடந்த கொடூரங்கள் மக்களுக்கு நினைவில் உள்ளது.
ஐசிஆர்சி, ஐநா அலுவலகர்கள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள், உள்ளுர் மனித உரிமை அமைப்புக்கள் வெளிநாட்டுத் தூதுவர்கள் அனைவரும் பார்த்திருக்க பல்லாயிரக் கணக்கானவர்கள் கடத்தப்பட்டனர் பெண்கள் நூற்றுக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந் நிலையில் மேற்படி தரப்பினரால் மாதாமாதம் அறிக்கைகளை மட்டுமே வெளியிட முடிந்தது. மாறாக இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லாத வன்னியில் ஒருவர் கூட காணாமல் போகவோ கடத்தப்படவோ இல்லை.
கடந்த ஒரு மாதகாலத்தில் வன்னியில் சிங்களப்படைகளது அகோரமான எறிகணைத் தாக்குதலில் வாழ முடியாத நிலையில் முள்ளியவளை தண்ணீருற்று, ஒட்டுசுட்டான், வட்டக்கச்சி, முரசுமோட்டை, வடமராட்சிகிழக்கு ஆகிய பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் செல்ல நிற்பந்திக்கப்பட்டனர். சர்வதேச சமூகம் உள்ளது என்ற நம்பிக்கையிலேயே இந்த மக்களும் அங்கு சென்றனர்.
இவ்வாறு சென்றவர்களில் ஆயிரக்கணக்கானோர் வவுனியாவுக்கோ அல்லது யாழ்ப்hணத்துக்கோ சென்றடயவில்லை. பெருமளவானவர்கள் இராணுவத்தினரால் சுடப்பட்டு இராணுவத்pதினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குள் வீசப்பட்டுள்ளனர்.
ஒரு தொகுதியினர் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் புலிகளது இராணுச் சீருடை அணிவிக்கப்பட்டு புலிகளது சடலங்கள் என்று கூறி உறவினர்களிடம் உடல்கள் கையளிக்கப்படாமல் புதைக்கப்பட்டுள்ளது.
பெருமளவான பெண்கள் வவுனியாவுக்கு அல்லது யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படுவத்கு முன்னதாகவே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் குறித்த வயதுடய பெண்களும் ஆண்களும் விசாரணைகளுக்காக படையினரால் தினமும் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவ்வாறு கொண்டுசெல்லப்படும் பெருமளவான பெண்கள் பாலியல் வல்லுறவின் பின்னர் முகாமுக்கு அனுப்பப்படுகின்றனர். முகாமிலிருப்பவர்களை தொண்டு நிறுவனங்களோ ஊடகவியலாளர்களோ சென்று பார்வையிட படையினர் அனுமதிப்பதில்லை. முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் வைத்தியசாலைக்கோ, வேறு தேவைகளுக்கோ தனியாக வெளியே செல்லவும் அனுமதிக்கப்படுவதில்லை.
நேற்றய தினம் வன்னியில் இருந்து ஐசிஆர்சி யினரால் காயமடைந்த 153 பேர் வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாரிய காயங்களுக்கு உள்ளானவர்கள். தனியாக தங்களை பராமரிக்க முடியாதவர்கள். இவர்களுக்கு உதவியாக உறவினர்களும் வந்திருந்தனர்.
வவுனியாவிற்கு வந்ததும் உறவினர்கள் அனைவரும் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டு நெலுக்குளம் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் விலங்குகள் போல தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றது.
தமிழ் வைத்தியர்களோ தாதியர்களோ தமது விருப்பம் போல குறித்த நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் தவிக்கின்றனர்.
இவர்களை அழைத்து வந்த ஐசிஆர்சி யினர் அழைத்து வந்ததோடு தமது கடமை முடிந்து விட்டது போன்ற உணர்வுடன் செயற்படுகின்றனர்.
கடந்த 2006ம் ஆண்டு செஞ்சோலை வளாகத்தில் படுகாயமடைந்த 152 மாணவிகளில் இருவர் ஐசிஆர்சி யினரால் அதே ஆண்டு வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
17 வயது மட்டுமே நிரம்பிய அந்த இரண்டு சிறுமிகளும் அன்று முதல் சிறைகளிற்கு கொண்டு செல்லப்பட்டு நீண்டகாலம் சிறைகளில் வாடவேண்டி வந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.
அங்கு காயமடைந்தவர்கள் பாடசாலை மாணவிகள் என்று சம்பவத்தை நேரில் பார்வையிட்ட யுனிசெவ் பிரதிநிதி அறிக்கை விடுத்திருந்தும் கூட அந்த மாணவிகளை விடுவிக்க ஐசிஆர்சி, ஐநா அமைப்புக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்பின்னணியில் வன்னியிலுள்ள மக்கள் அங்கிருந்து வவுனியாவுக்கோ யாழ்ப்பாணத்திற்கோ செல்ல தயாராக இல்லை.
இந் நிலையில் இந்த மக்களை ஆயிரக்கணக்கில் அரச படைகள் இன்னும் சில மணி நேரத்தில் படுகொலை செய்யப் போகின்றார்கள்.
இலங்கை அரசு கொடுத்த 48 மணி நேரம் முடிவதற்குள்ளேயே 28 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே புலம் பெயர்ந்த மக்கள் இலட்சக் கணக்கில் ஒன்று திரண்டு நீங்கள் வாழும் நாடுகளுடாகவும் ஐரோப்பிய ஒன்றியம் ஊடாகவும் இலங்கை அரசின் மீது அழுத்தங்களை பிரயோகித்து தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை தடுக்கவும் உடனடி யத்த நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்தவும் நடவக்கை எடுக்கும்படி அவசர வேண்டுகோள் விடுக்கின்றேன்.
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தாயக உறவுகளின் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியிடப்படுவதற்கே வழிவகுக்கும்.
செ.கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ் தேர்தல் மாவட்டம்



No comments:
Post a Comment