Friday, January 23, 2009

முல்லைத்தீவு வெறும் ஆயுதப் போர்க்களம் மட்டுமல்ல; உளவியல் போர்க்களமாகவும் உருமாறியிருக்கிறது.

 
 
நாளுக்கு நாள் மோசமாகிக்  கொண்டு வரும் முல்லைத்தீவு களமுனைச் செய்திகள் நெஞ்சத்தை நெருடி நிற்கின்றது என்னவோ உண்மைதான். போர் என்று வந்தாலே இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை என்பது எல்லோரும் அறிந்த விடயம். இருந்தாலும் அந்த மண்ணில் வாழக்கூடிய எமது தொப்புள்கொடி உறவுகள் ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களுக்கும் இலக்காகி...

பச்சிளம் பாலகர் முதலாக வயோதிபர்கள் வரை, வயது வேறுபாடின்றி அரக்கத்தனமான கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகும் போது அதையொரு போர்க்கள நடவடிக்கையாக எம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில். இந்தக் காலப்பகுதி மிகவும் முக்கியமான காலகட்டமாக கருதப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்பது மெல்ல மெல்ல இராணுவ மயமாக்கப்படுகிறது, விடுதலைப் புலிகளின் விமானத்தளம், கடற்புலிகளின் படகுகளைக் கைப்பற்றி விட்டோம் என்றும், சில நம்பமுடியாத புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரீலங்காப் படைகள் கூறும் தகவல்கள்உண்மையானது தானா?

பாதுபாப்பு அமைச்சின் செயலர்  கோத்தபாயவின் தகவல்களுக்கும் ஹெகலிய ரம்புக்வெலவின் கருத்துக்களுக்கும்  சரத் பொன்சேகாவின் தகவல்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாது இருப்பதன் பின்னணியில் இருக்கும் உண்மைதான் என்ன? யாரை ஏமாற்றுவதற்கான முயற்சி? அரசு கூறும் தகவல்கள் உண்மையில்லை என்றால்! இந்தச் செய்திகளை அழகாகவும் மிகுந்த மதிநுட்பமாகவும் வெளியிடுவதில் அரசாங்கத்துக்கு என்ன இலாபம். அரசாங்கத்தின் கூற்றில் எவ்வளவு உண்மையிருக்கும் என்பது எமது கேள்வியாக விரிகிறது!

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அரசு தொடங்கிய வடபோர்முனைப் போரானது முயல் வேகத்தில் தொடங்கி ஆமையின் வேகத்தையும் விட மிகவும் கேவலமான வேகத்தில் முடிந்தது! குறித்த திகதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என சூளுரைத்த பொன்சேகாவுக்கு போதுமடா சாமி போதும் என்றாகி விட்டது புலிகளின் பதில் தாக்குதல்கள்.

அஞ்சுங்கெட்டு அறிவும்கெட்ட மகிந்தருக்கு மயக்கம் வராத குறை! ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னணிப் படைகளுடன், வெளிநாடுகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற இராணுவ வீரர்களையும், விமானப் படைகளையும் இணைத்துக் கொண்டு தொடரப்பட்ட போரானது எவ்வளவு தூரம் வெற்றியை பெற்றுத் தந்தது? ஆளில்லாத கிளிநொச்சி நகரைப் பிடிப்பதும் அங்கு சிங்களத்து தேசியக் கொடியை ஏற்றுவதும்தான் அவர்களின் வெற்றியா? சரி  கிளிநொச்சி நகரைப் பிடிப்பதற்கான உண்மைக்காரணம் என்ன?

கிளிநொச்சி என்பது சர்வதேசங்களுக்கு மிகவும் பழகிப்போன பூமி. பல நாட்டு  இராஜதந்திரிகள் வந்து போன மண், அந்த மண்ணை கைப்பற்றுவதன் மூலம் சர்வதேசங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான தொடர்பை துண்டித்து விடலாம் என்பதுதான் அவர்களின் திட்டம்.

கிளிநொச்சிப் போரைத் தொடங்கியபோது அரசும், மகிந்தரும் கூறிய விடயத்தை ஞாபகப்படுத்திப் பார்ப்பது சிறந்தது, கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதும் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைப்பேன் எனக் கூறிய அரசானது, கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட பின்னரும் கூட, அதுபற்றி எவ்விதமான பேச்சோ,தீர்வோ எதுவுமேயின்றி முல்லைத்தீவுக்கான போரில் முனைப்புக் காட்டுவதன் நோக்கம் என்ன? அவ்வாறு ஒரு தீர்வை வைத்திருக்கும் அரசு ஏன் விடுதலைப் புலிகளை ஓரங்கட்டிவிட்டு தீர்வைத் திணிக்க நினைக்கிறது.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள்தான் என தமிழ் மக்கள் எப்பொழுதே ஆணி அடித்தாற்போல் கூறி விட்டார்களே. அப்படியானால் தமிழர்களுக்கான அரசின் தீர்வு எவ்வாறானதாக இருக்குமென சாதாரண சாமனியனுக்குக் கூட அது புரியும்! ஞாபகமறதி வாறது வழக்கம்தான.; அதற்கு மருத்துவரைத்தான் நாடவேண்டுமே தவிர கிளிநொச்சியை அல்ல!

குரைக்கின்ற நாய் கடிக்காது என்பார்கள். இங்கே ஸ்ரீலங்கா அரசாங்கம் குரைப்பது எதைக் காட்டுகிறது? உண்மையில் இந்தப் போரை வெறும் ஆயுதப் போராக அரசு கருதவில்லை. பதிலாக இதையொரு பிரச்சாரப் போராகவே அரசு கருதுகிறது! உண்மையில் ஆயுதப் போரின் மூலம் கிடைக்கக் கூடிய வெற்றியானது 50%மாக இருக்குமானால், மிகுதி 50% உளவியல் போர் மூலமாக கிடைக்கப் பெறுவதேயாகும்.

வன்னிப் போர்முனையில் அரச படைகள் ஈட்டும் வெற்றியென்பதும் இவ்வாறானதே! மக்களைத் திசைதிருப்பும் இந்த முயற்சியில் ஸ்ரீலங்கா அரசு அதிகமான வெற்றிகளைப் பெறமுடியாது போனாலும், இந்தியா போன்ற நாடுகளில் இந்த யுக்தியானது பல சந்தர்ப்பங்களில் வெற்றியீட்டி இருக்கிறது என்பது மெய்யானதே!

உதாரணமாக சென்ற வாரம் ஸ்ரீலங்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த சிங்சங்கர் மேனன் இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தக் கோருவாரென தமிழகத் தலைவர்களால் அதிகமாக எண்ணப்பட்ட போதும், அங்கு அவர் அந்த விடயம் பற்றி எதுவும் பேசாது, பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கான இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் வழங்குவது பற்றிப் பேசிவிட்டுப் போயிருந்தார் இதன் மூலம் தமிழகத்தின் தணலை அணைக்கலாம் என்பது இந்தியாவின் எண்ணம்?

ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த உளவியல் போரானதுபுலம்பெயர் தமிழர்களிடையே ஒருவித சந்தேகத்தை அல்லது விடுதலைப் புலிகள் பற்றிய தப்பான கண்ணோட்டத்தை உருவாக்குவதற்கே! தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பானது மிகப்பெரிய பங்களிப்பு என தேசியத் தலைவர் அவர்களாலேயே பலமுறை சுட்டிக்காட்டப் பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா அரசுக்கெதிரான பிராச்சாரப் போரையும் இந்த மக்களே முன்னின்று நடத்துகிறார்கள். இதனால் சர்வதேச மட்டத்தில் ஏற்படக் கூடிய நெருக்குவாரங்களை தணிப்பதற்கான முயற்சியாக இந்த உளவியல் போர் கருதப்படுகிறது.

அதே வேளையில் இந்த பின்னணியில் பார்க்கும்போது இந்தப் போரானது வெறுமனே தமிழ் மக்களை நோக்கிய போராகக் கருதமுடியாத சூழலுமுண்டு. காரணம் போரிடும் வலுமிகுந்த இராணுவப் படையணிகள் கிளிநொச்சி முல்லைத்தீவுக் களத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதலினால் கொல்லப்பட்டவர்கள், படுகாயமடைந்தவர்கள், தப்பியோடியவர்களென ஏராளமானோர் அடங்குவர். சிதைந்து போகும் இராணுவ கட்டமைப்பை மேலோங்கச் செய்வதற்காகவும், சிங்கள மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகளிடமும் இருந்து எழக்கூடிய விமர்சனங்களையும் கேள்விகளையும் தணிப்பதற்காகவும், உளவியல் ரீதியாக தமக்குச் சாதகமான முறையில் ஆட்சியை நடத்த இந்தப் போர் உதவலாம்.

அதேவேளை விடுதலைப் புலிகளின் பதுங்கல் என்பது "சாக்ரடீஸ்"சொன்னதைப் போன்று ஒரு சாதனை படைப்பதற்கான பதுங்கலாகவே கருதலாம். இருந்த போதும் நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் நிறையவே உண்டு. அரசின் கண்மூடித்தனமான குண்டு வீச்சு, பொருளாதாரத் தடை,மருத்துவ வசதியின்மை இவை அனைத்தையும் நடத்தும் இந்த அரசின் அடக்குமுறையை மீட்டு வெளியே வர விடுதலைப் புலிகள் நன்கு திட்டமிட்டு சில பின்னகர்வுகளையும், தேவைப்படும் போது  பாய்ச்சலையும் நடத்தலாம்.

ஏனென்றால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களுடன் தொடர்ந்தும்  இருக்கிறார்கள் என்றால் அங்கு ஏதோ இருக்கிறது என்று மட்டும் புரிகிறது.

முல்லைத்தீவை ஸ்ரீலங்கா அரசாங்கம் கைப்பற்றி விடுவதற்கான எந்தச் சூழலும் இல்லை. முல்லைத்தீவை இந்திய இராணுவமும் முற்றுகையிட்டிருந்த போதும் அவர்களால் கூட அங்கு செல்ல முடியாது போனதுதான் வரலாறு.

இது ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் நன்கு தெரியும். இதன் வெளிப்பாடுதான் அண்மையில் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் நடைபெற்ற டோரா அதிவேகப் படகு மூழ்கடிப்பாகும். விடுதலைப் புலிகள் இன்னும் பலமுடன்தான் இருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்களிடன் புதிய பதிய படையணிகள் இருக்கிறது! புதியரக ஆயுதங்கள் இருக்கிறது! புதிய புதிய வியூகங்கள் இருக்கிறது! அது எல்லாவற்றையும் விட நம்பிக்கைக்குரிய எங்கள் தேசியத் தலைவர் அவர்கள் இருக்கிறார்.

எனவேதான் இந்த முல்லைத்தீவுப் போரை ஸ்ரீலங்கா அரசாங்கம் வெறும் ஆயுதப் போராக கருதாமல் உளவியல் போராகவும் கையிலெடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை!


 
 அல்லையூர் சி.விஜயன்  (இத்தாலி)

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d1j0A0ecQG7D3b4F9E84d2g2h3cc2DpY2d436QV3b02ZLu3e

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails