Friday, January 30, 2009

தமிழருக்குப் பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை ஐநா சபை

     
 

இலங்கையில் தமிழருக்குப் பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை, என ஐநா சபை கூறியுள்ளது.இலங்கை வன்னிப் பகுதியில் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிராக நடக்கும் கொடூரமான தாக்குதல்களை 48 மணிநேரம் நிறுத்துவதாகவும் அதற்குள் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்கள் வெளியேறிவிட வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்திருந்தார்.

உடனே அந்த அறிவிப்பை இந்திய அரசாங்கம் ஆரத்தி எடுக்காத குறையாக வரவேற்று மகிழ்ந்ததோடு, புலிகள் தங்கள் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றிவிட வேண்டும் என கிட்டத்தட்ட உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து புலிகள் எதுவும் கூறாமல் உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள ஐநா மனிதாபிமான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்டன் விஸ், இலங்கையில் தமிழர்களுக்குப் பாதுகாப்பான பகுதி என்று எதுவுமே இல்லாத நிலையில் அவர்கள் வெளியேறி எங்கே போவார்கள்? எனவே இந்தப் போர் நிறுத்தத்தை புலிகள் ஏற்பதற்கு வாய்ப்புகள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொழும்புவிலிருந்து தொலைபேசி மூலம் பேட்டி அளித்துள்ள கார்டன் விஸ் மேலும் கூறியுள்ளதாவது:

போர் நிறுத்தம் தொடர்பான அழைப்புகளுக்கு புலிகள் தரப்பில் இருந்து பதிலே இல்லை. அப்பாவி மக்களை விடுவிக்க 48 மணி நேரம் கெடு விதித்து இலங்கை அதிபர் அறிவித்துள்ள போர் நிறுத்தத்திற்கு புலிகள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

வன்னித் தமிழர்கள் இந்தப்போர் நிறுத்தத்தை எந்த அளவு வரவேற்பார்கள் என்றும் புரியவில்லை, என்றார்.

இதனிடையே போர் பகுதியில் உள்ள குழந்தைகள் மட்டுமே பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்படுவதாக ஐநா குழந்தைகள் அமைப்பான் யுனிசெப் அதிகாரி ஒருவர் வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் லட்சக்கணக்கான தமிவர்கள் ராணுவத் தாக்குதலில் சிக்கித் தவிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள ஐநா மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, அப்பாவி மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பது இலங்கை அரசின் கடமை, அதை மறந்துவிடக்கூடாது என்று கூறியுள்ளார்.

http://www.nerudal.com/content/view/5890/1/

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails