பிரபாகரன் தப்பி விட்டார்?
கொழும்பு, ஜன. 18: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வெளிநாட்டுக்குத் தப்பி இருக்கலாம் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தற்போது பிரபாகரன் இலங்கையில் உள்ளாரா அல்லது வேறு நாட்டுக்குத் தப்பிவிட்டாரா என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது. அவர் தப்பிச் செல்லவும் வழி உள்ளது. ஆனால் அவர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல வாய்ப்பே இல்லை என்று அவர் உறுதியாகக் கூறினார்.
கொழும்பில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனைப் பிடிக்க இந்தியா முனைப்பாக உள்ளது. அதுபோல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளன. எனவே இந்த நாடுகளுக்கு பிரபாகரன் செல்வதற்கு வாய்ப்பில்லை.
அண்மையில் கப்பலில் விடுதலைப் புலிகளுக்காக கடத்தி வரப்பட்ட ஆயுதங்களை தரையிறக்கும்போது அந்தக் கப்பலை இலங்கை விமானப் படை விமானம் குண்டு வீசி அழித்தது. எனவே விடுதலைப் புலிகளால் ஆயுதங்களைக் கடத்தி வரவும் இங்கிருந்து செல்லவும் முடிகிறது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. இதைவைத்துப் பார்க்கும்போது பிரபாகரன் தப்பிச் செல்லவும் வாய்ப்புள்ளது. தற்கொலை படகுகள் சூழ அவர் தப்பிச் செல்ல முயற்சிக்கலாம். இருப்பினும் அவர் தப்பிச் செல்லாதவாறு நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் என்றார் பொன்சேகா.
கிளிநொச்சி மற்றும் யானை இறவை இழந்ததை அடுத்து பிரபாகரன் தற்போது முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக பொன்சேகா முன்பு கூறியிருந்தார்.
விடுதலைப் புலிகளின் நிர்வாக தலைமையகமாக திகழ்ந்த கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் மூத்த தலைவர்கள் அனைவரும் தங்களது முகாமை முல்லைத்தீவுக்கு மாற்றிவிட்டனர் என்று கூறப்பட்டது. முல்லைத் தீவில் நவீன வசதிகள் கொண்ட ரகசிய பதுங்கு குழியில் பிரபாகரன் தங்கியிருக்கிறார் என்றும் செய்தி வெளியானது.
முல்லைத்தீவையும் ராணுவம் சுற்றிவளைத்துவிட்டதால் பிரபாகரன் பிடிபடுவது உறுதி. அவர் விரைவில் பிடிபடுவார் என்று இலங்கை ராணுவத் தரப்பில் கூறப்பட்டு வந்தது. பிரபாகரன் பிடிபடும் நிலையில் அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வந்தது. பிடிபட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை அரசும் தயாராக இருந்தது.
இந்த நிலையில்தான் முல்லைத்தீவிலிருந்தும் அவர் தப்பியிருக்கலாம் என்று ராணுவ தளபதி தற்போது கூறியுள்ளார்.
அதேநேரத்தில் பிரபாகரன் அல்லது விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் யாராவது கடல்வழியாகத் தப்பிச் செல்வதைத் தடுக்க முல்லைத்தீவு கடல் பகுதியை இலங்கை கடற்படை சுற்றிவளைத்துள்ளது.
அதிநவீன படகுகள், ரேடார்கள் மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் மூலம் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். எனவே பிரபாகரனைத் தப்பவிடமாட்டோம் என்று இலங்கை கடற்படை தளபதி திசநாயக தெரிவித்தார்.
No comments:
Post a Comment