மகாத்மாவின் வாழ்விலே...
அகிம்சையும் சத்தியமும் ஆயுதங்கள்
காந்திஜி வெள்ளையனே வெள்ளையேறு என்று முழக்கமிட இந்தியர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மக்கள் காந்தியின் பின்னே அணிவகுத்து நின்றனர்.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இது பற்றிய பேச்சு வந்தது. போராட்டத்தை எந்த வழியில் அடக்கலாம் என்று கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது சர்ச்சில் எழுந்து கீழ்கண்டவாறு கூறினார்.
"இந்த காந்தி துப்பாக்கி ஏந்தி போரிட்டால் நான் பீரங்கியால் நசுக்கி இருப்பேன். பீரங்கி கொண்டு போராடினால் விமானம் கொண்டு அழித்திருப்பேன். ஆனால் அவரோ ஆயுதங்களைப் புறக்கணித்துவிட்டு அகிம்சை, சத்தியம் இவைகளையே ஆயுதமாகக் கொண்டு போராடுகிறார்கள். இவற்றை மழுங்கடிக்கக் கூடிய ஆயுதங்கள் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவரை வெற்றி கொள்ள முடியவில்லை. பணிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. "
சர்ச்சில் இப்படிக் கூறியது அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைத் திகைக்க வைத்தது.
ஜீவாதான் பாரதத்தின் சொத்து
காந்திஜியின் பெயரில் ஜீவானந்தம் (ஜீவா) ஒரு ஆசிரமம் நடத்தி வந்தார். இது காரைக்குடிக்கும் திருப்பத்தூருக்கும் இடையில் உள்ள சிராவயல் எனும் ஊரில் அமைந்திருந்தது.
1927 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்த காந்திஜி தனது பெயரில் நடக்கும் அந்த ஆசிரமத்தைப் பார்க்கச் சென்றார். ஜீவா தனது கையால் நூற்ற நூலை மாலையாக்கிக் காந்திஜிக்கு அணிவித்தார். அதைப் பெற்றுக்கொண்ட காந்திஜி மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
அடுத்து காந்திஜி ஜீவாவைப் பார்த்து, உங்களுக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு ஜீவா பாரதமே என் சொத்துதானே! என்று பதில் கூறினார். இதைக் கேட்டதும் காந்திஜி அசந்து போனார்.
-தேனி.எஸ்.மாரியப்பன்
No comments:
Post a Comment