Tuesday, January 27, 2009

வன்னியில் பெரும் மனிதாபிமான நெருக்கடி - சர்வதேச செஞ்சி்லுவைக்குழு

  
சர்வதேச செஞ்சிலுவைக்குழு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இலங்கையின் வடபகுதியில் தொடரும் மோதல்களில் இரண்டரை லட்சம் மக்கள் சிக்கியுள்ளதாகவும், அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடி ஒன்று உருவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 
விடுதலைப் புலிகளின் இறுதிப் பிரதேசமாகிய ஒரு சிறிய நிலப்பரப்பு மீது இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக நூற்றுக்கணக்கில் இறந்தவர்களினாலும், பெரும் எண்ணிக்கையில் காயமடைந்தவர்களினாலும் வன்னிப்பிரதேசத்தி்ன் வைத்திய நிலையங்கள் யாவும் நிறைந்து வழிகின்றன என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

 
சர்வதேச செஞ்சிலுவைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு:- இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே வன்னியில் மூண்டுள்ள கடும் சண்டைகளையடுத்து, நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள். வசதிகள் குறைந்த, ஆளணி பற்றாக்குறையுள்ள வைத்திய நிலையங்கள் பெரும் எண்ணிக்கையில் காயமடைந்தவர்களினால் நிறைந்து வழிகின்றன.

 
மக்கள் மோதல்களில் சிக்கியிருக்கின்றார்கள். வைத்தியசாலைகளும், அம்புலன்ஸ் வண்டிகளும் எறிகணை தாக்குதல்களுக்கு இலக்காகியிருக்கின்றன. காயமடைந்த சிவிலியன்களை மீட்க முயன்ற உதவிப் பணியாளர்கள் பலரும் காயமடைந்திருக்கின்றார்கள்.சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரின் பணிகள், அங்கு நிலவுகின்ற வன்முறைச் சூழலினால் தடைபட்டிருக்கின்றன என ஜெனீவாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக உள்ள ஜேக் மே டயோ தெரிவித்துள்ளார்.

 
பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பு, வைத்திய கவனிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தேவையாக உள்ளது. பெரும் மோதல்கள் இடம்பெறுகின்ற 250 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான இடத்தில் இரண்டரை லட்சம் பேர் சிக்கியிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒதுங்கியிருப்பதற்குப் பாதுகாப்பான இடமில்லை. அங்கிருந்து தப்பியோடவும் முடியாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.

 
எல்லா சந்தர்ப்பங்களிலும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மதிக்கப்பட்டு சிவிலியன்கள் பாதுகாக்கப்படாவிட்டால், எல்லாம் ஓயும்போது எண்ணற்றவர்கள் பாதிக்கப்பட்டு, மோசமான ஒரு மனிதாபிமான நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. நேரம் ஓடிக்கொண்டிருக்கின்றது. மேலும் இரத்தம் சிந்துவதைத் தடுத்து நிறுத்துவதற்காக உறுதியான முடிவெடுக்க வேண்டிய நேரமாக இருக்கின்றது என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக உள்ள ஜேக் மே டயோ தெரிவித்துள்ளார்.

 
மோதல் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் சுயமாக வெளியேறுவதற்கு அனுமதிப்பதுடன் அதற்கான வசதிகளையும் செய்ய வேண்டும் என மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரையும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு கேட்டுக்கொள்கின்றது. முடிந்த அளவு காலத்தி்ற்கு சர்வதேச செஞ்சிலுவைக்குழு வன்னியில் இருப்பதற்குத் தீர்மானித்துள்ளது. ஆனால், அதனுடைய பிரசன்னத்தையும், அதன் பணிகளையும் இரு தரப்பினரும் மதித்துச் செயற்பட வேண்டும்.

 
வன்னிப்பிரதேசத்தினுள் மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும். சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் கூறுகின்றபடி, மனிதாபிமான பணியாளர்களும், அவர்களது இடங்களும் எறிகணை வீச்சுக்கள், கொள்ளைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். சண்டைகளிலும் மோதல்களிலும் நேரடியாகப் பங்கு கொள்ளாதவர்களின் உயிர்கள் பாதுகாக்க வேண்டும் என இரு தரப்பினரும் வலியுறுத்தப்படுகின்றார்கள்.

 
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா வைத்தியசாலைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் அவசர மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட வேண்டியிருக்கின்றது. நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழு வன்னியில் உள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குத் தனது உதவிகளை வழங்கி வருகின்றது.

 
அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பினருடைய உடன்பாட்டுடன் கடந்த நான்கு மாதங்களாக வன்னியில் நிரந்தரமாக இருந்து செயற்பட்டு வருகின்ற ஒரேயொரு நிறுவனமாகிய சர்வதேச செஞ்சிலுவைக்குழுவானது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails