Friday, January 30, 2009

உறைபனி குளிரையும் புறந்தள்ளி கனடாவை உலுக்கியெடுத்த மனித சங்கிலிப் பேரணி: 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

  
உடனடிப் போர் நிறுத்தம் கோரியும் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு கனடா முயற்சிக்க வேண்டும் எனக் கோரியும் கனடா, ரொறன்ரோவில் நேற்று நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டம் கனடாவின் இன்றைய முக்கிய செய்தியாகவும் ஊடகங்களின் பேசுபொருளாகவும் இடம்பிடித்தது. ஆங்கில ஊடகங்கள் தமது கணிப்பின்படி 80,000 பேர் கலந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா அரசின் காட்டுமிராண்டித்தனத்தையும் தமிழ்மக்கள் மீதான திட்டமிட்ட படுகொலையையும் விவரிக்கும் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கனடாவின் பொருளாதார மையமான ரொறன்ரோ மத்திய நகர்ப் பகுதியில் உள்ள தெருக்களில் குவிந்திருந்து தமது இனத்திற்காக குரல் கொடுத்திருந்தனர்.

பூச்சியத்திற்குக் கீழே பத்து பாகை செல்சியஸ் என்ற குளிர்நிலையையும் அதற்குக் கீழான குளிர்காற்று நிலையையையும் கொண்டிருந்த நேற்றைய நாள் பிற்பகல் 12:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணி வரை 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

பொருளாதார மையத்தை ஊடறுத்துச் செல்லும் சுமார் 15 கிலோ மீற்றர் சுற்றளவையுடைய பிரதான வீதிகளில் ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து நின்றிருந்த மக்கள் போக்குவரத்தை செயலிழக்க வைக்கும் அளவுக்கு பெருமளவில் திரண்டிருந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

முக்கிய கனடிய செய்தி ஊடகங்கள் அனைத்துமே மேற்படி நிகழ்ச்சியை நேரடியாகவே ஒளிபரப்புச் செய்து கனடா முழுவதற்குமே இச்செய்திகளை உடனேயே எடுத்துச் சென்று எமது மக்களின் அவலத்தின் உண்மைப் பக்கத்தைக் கனடாவின் பல்லின சமூகத்திற்குப் புலப்படுத்தின.

மிகவும் அமைதியாகவும் யாருக்கும் பங்கம் ஏற்படாத வகையிலும் மனித சங்கிலியில் கலந்து கொண்டோர் நடந்து கொண்டதாக ஆங்கில ஊடகமொன்றிற்கு குறிப்பிட்ட ரொறன்ரோ நகர காவல்துறை அதிகாரி ஒருவர், தான் கடமையில் நின்ற புரண்ட் வீதி என்றழைக்கப்படும் ஒரு வீதியில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு நிவாரணம் சென்றடைய கனடிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பேச்சுவார்த்தைக்கான தளத்தை அமைப்பதில் காத்திரமாகப் பங்காற்ற வேண்டும் எனவும் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்று கனடிய ஊடகங்களை உலுக்கியெடுத்த இந்நிகழ்வு கனடாவில் சிறிலங்கா அரசாங்கமும் அதன் அடிவருடிகளிலும் செய்து வந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு சாவு மணி அடிப்பதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்திருந்தது.

அத்தோடு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிய உண்மைகளை கனடிய அரசாங்கத்தின் பார்வைக்கும் மக்களின் கவனத்திற்கும் கொண்டுவரும் நிகழ்வாகவும் அமைந்திருந்ததோடு மத்திய அரசின் கவனத்தையும் இந்நிகழ்வு எட்டிப்பிடித்தது.

கனடிய தமிழ் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த முக்கிய அமைச்சர் ஒருவர், இவ்வளவு மக்கள் திரண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தியதைத் தான் மதிப்பதாகவும் கனடிய தமிழர்களின் வலியைப் தான் புரிவதாகவும் தெரிவித்ததோடு இந்த விவகாரம் தொடர்பாக தானும் இதர அமைச்சரவைச் சகாக்களும் கலந்தாலோசித்து கூடிய விரைவில் ஒரு முடிவுக்கு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

http://www.swisstamilweb.com/

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails