தமிழீழத்தை அங்கீகரியுங்கள்; நாமே இந்தியாவின் நண்பர்கள்: இந்திய தூதரகம் முன்பாக அமெரிக்க தமிழர்கள் பேரணி |
|
அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க தமிழர்கள் பெரும் அமைதிப் பேரணியினை நடத்தியுள்ளனர். இதில் தமிழீழத்தை அங்கீகரித்து தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். |
தமிழ்நாடு, தமிழீழம், மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தமிழர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் அமெரிக்க இந்திய தூதரகத்தின் அதிகாரியான ராகுல் ராஸ்கோத்ரா வெளியில் வந்து அமெரிக்க தமிழர் பிரதிநிதிகளுடன் உரையாற்றினார். தனது கருத்தாக எதனையும் அவர் தெரிவிக்காத போதிலும், சொல்லப்பட்ட கருத்துக்களை அவர் பொறுமையாக செவிமடுத்தார். "சிறிலங்கா எப்போதும் இந்தியாவின் நண்பனாக இருந்ததில்லை. அது ஒரு சந்தர்ப்பவாத நாடு. இந்தியா - பாகிஸ்தான் போர்க் காலத்தில், பாகிஸ்தான் வான்படைக்கு எண்ணெய் நிரப்பும் தளமாக சிறிலங்கா அன்று செயற்பட்டது. இப்போதும் அது பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் இராணுவ உறவுகளைப் பேணுகின்றது. அதே நேரம், புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் உதவியையும் பெறுகின்றது. இந்தியாவா அல்லது பாகிஸ்தானா தேவை என்ற நிலை வரும் போது அது பாகிஸ்தான் மற்றும் சீனா பக்கமே போகும். ஆனால், தமிழர்கள் அப்படியானவர்கள் இல்லை" என அமெரிக்க தமிழர் பிரதிநிதிகள் விளக்கிக் கூறினர். "தமிழர்களே இந்தியாவின் இயற்கையான நண்பர்கள். தமிழர்களே இந்தியாவின் இயற்கையான உறவுகள். ஏனெனில், ஒரே வேரிலிருந்து வந்த ஒரே தமிழினம் தான் தமிழ் நாட்டிலும், தமிழீழத்திலும் வாழ்கின்றது. இந்திரா காந்தி இறந்த போது சேர்ந்து அழுதவர்கள் நாங்கள் தான். எம்.ஜி.ஆர் இறந்த போது சேர்ந்த அழுதவர்களும் நாங்கள் தான். ஆனால், அப்போதெல்லாம் சிரித்து மகிழ்ந்தவர்கள் சிறிலங்கா தரப்பினர்." என அமெரிக்க தமிழர் பிரதிநிதிகள் எடுத்துக் கூறினர். "தமிழீழம் அமைவதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு எப்போதும் நல்லது. தமிழர்கள் எப்போதுமே இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டதில்லை. இந்தியாவின் தெற்கில் ஒரு பெரும் காப்பு அரணாக தமிழீழம் எப்போதுமே இருக்கும். அதனால் தமிழீழப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்." என அமெரிக்க தமிழர் பிரதிநிதிகள் இந்திய தூதரக அதிகாரி ராஸ்கோத்ராவிடம் வலியுறுத்தினர். பின்னர் - இதே கருத்துக்களை உள்ளடக்கிய மனு ஒன்று, அமெரிக்காவுக்கான இந்திய தூதுவருக்காகவும், இந்திய பிரதமருக்காகவும் அந்த அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது. அக்கடிதத்தில் - "அமெரிக்க உலகத் தமிழர் அமைப்பு", "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்", "இலங்கையில் அமைதிக்கான அமெரிக்கர்கள்" ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர். சிறிலங்கா படையினருடன் - போர்முனையில் - இந்தியப் படை அதிகாரிகளும் சேர்ந்து செயற்படும் படங்களைத் தாங்கியிருந்த, பேரணியில் கலந்து கொண்ட தமிழர்கள், சிறிலங்காவின் தமிழினப் படுகொலை போருக்கு இந்தியா புரிந்து வரும் உதவியைக் கண்டித்தனர். மகாத்மா காந்தி போல வெள்ளை உடையணிந்து, "ரகுபதி ராகவ ராஜாராம்" என்ற பாடலைப் பாடிய படி, "அமைதியைப் போதித்த அந்த மகான் பிறந்த நாடு, போரை நடத்துவதற்கு அல்லாமல், போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவே பாடுபட வேண்டும்" என பேரணியில் கலந்து கொண்டோர் வலியுறுத்தினர். இந்திய தூதரகத்தின் அதிகாரியான ராகுல் ராஸ்கோத்ரா, அமெரிக்க தமிழர் பிரதிநிதிகளுடன் உரையாடுகின்றார் |
http://www.puthinam.com/full.php?2b1VoKe0d4cYK0ecKA4S3b4C6DV4d2f1e3cc2AmS3d434OO2a030Mt3e
No comments:
Post a Comment