Tuesday, January 27, 2009

இலங்கையில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

 
 
இலங்கையில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர்கள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து பத்திரிகையாளர்கள் அமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில்,

 
இலங்கை உள்நாட்டுப் போரில் அப்பாவி மக்களும், குழந்தைகளும் கொல்லப்படுவதைக் கண்டித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் சுதந்திரமாக விமர்சனம் செய்த பத்திரிகையாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பகிரங்கமாக நடந்து வரும் இந்தப் படுகொலைகள் பற்றி இலங்கை அரசாங்கம் எந்த விசாரணையையும் செய்ய மறுத்து வருகிறது. இலங்கையில் பத்திரிகையாளர்கள் திடீரென கடத்தப்படுவதும், சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதும், ஊடக அலுவலகங்கள் தாக்கப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

தமிழர், சிங்களவர் என்ற வித்தியாசம் இல்லாமல் போரை எதிர்க்கும், அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களின் வாழ்க்கையே அங்கு கேள்விக்குறியாகி வருகிறது.

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கி, பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி நடக்கும் ஆட்சிக்கு எதிராக, சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails