|
] |
பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும், அவர்களுக்கு உதவியளித்து வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையும் கூரைகளோ அல்லது எதுவித கட்டிடங்களோ அற்ற பாதுகாப்பு வலயம் ஒன்றிற்குள் போகச் சொல்லியபின் அவர்கள் மீது சிறிதும் மனிதாபிமானமற்ற தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் கொழும்பிலுள்ள இன அழிப்பு அரசு..... |
முன்னூற்றுக்கும் அதிகமான மக்களை ஒரே நாளில் கொன்றிருப்பதோடு இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காயப்படுத்தியுமிருக்கிறது" என்று குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திரு நடேசன் அவர்கள் இன்று தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவித்திருப்பதாவது:- புலிகள் மக்களை கேடயங்களாகப் பாவிப்பதாக வரும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுதலித்த திரு நடேசன் அவர்கள், தாம் ஒருபோதுமே மக்களை போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு தடைகளையோ கட்டுப்பாடுகளையோ விதிக்கவில்லை என்று மேலும் கூறினார். ஆனால் பொதுமக்கள் தாமாகவே புலிகள் பின்னால் பாதுகாப்புத் தேடிச் செல்வதாகக் கூறிய அவர், இன அழிப்பு ஆவேசத்துடன் ஆக்கிரமித்துக்கொண்டே வரும் ஒரு இராணுவத்திடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புலிகளின் பின்னால் வரும் பொதுமக்களை தாம் எப்பாடு பட்டாவது காப்பாற்றப் போராடுவோம் என்றும் தெரிவித்தார். ஐநாவும், சர்வதேச சமூகமும், இன அழிப்புப் போர் ஒன்றை எதிர்கொண்டு நிற்கும் சமூகத்திற்கு நடக்கும் அக்கிரமங்களை பார்க்கவோ அல்லது தேடிச் சென்று உதவிகளைச் செய்யும் கடமையிலிருந்தும் தவறி விட்டன என்றும் கூறினார். அரசின் "பாதுகாப்புப் பிரதேசங்கள் மீது நம்பிக்கை கொள்ளாத ஐநா அமைப்புகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் கூட இந்த அகோர தொடர் எறிகணைத் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அடைக்கலம் தேடிக்கொண்டன" என்று அவர் மேலும் தெரிவித்ததோடு, செஞ்சிலுவைச் சங்க ஊழியர் ஒருவர் இத்தாக்குதலில் காயப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். "போர் நடக்கும் பகுதிகளில் இருந்து இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த சிவிலியன்கள் மீது நடைபெறும் அவமானப்படுத்தல்களும், துன்புறுத்தல்களும் எமக்கு அறியக் கிடைத்தன. சிங்கள இராணுவத்தின் கைகளில் அகப்பட்ட மக்களுக்கு தமது உயிர் மீதான உத்தரவாதமோ அல்லது எந்தவித மனித கெளரவமோ கிடைக்கப் பெறவில்லை என்பது நாம் அறிந்ததுதான். இது இன்று நேற்றல்ல, காலம் காலமாக இந்த நாட்டின் இன ஒடுக்குமுறையின் அங்கமாக இவை நடைபெற்று வருகின்றன" என்றும் அவர் கூறினார். "வன்னியில் உள்ள அரச உத்தியோகத்தர்களும், ஏனைய பொதுச் சேவையாளர்களும் இந்தக் குறுகிய பாதுகாப்பு வலயத்தினுள் போகும்படி கொழும்பு அரசினால் வற்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அரசாங்கம் வற்புறுத்தியுள்ளதால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்று முழுதான இயங்காநிலையை அடைந்திருக்கிறது. உடனடியாக வன்னியில் நடைபெறும் இந்த இன அழிப்புப் போரை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தையும், ஐநாவையும் கேட்டுக்கொண்டுள்ள நடேசன், இதன்மூலம் இங்கு நடந்தேறியுள்ள கோரத்தின் முழு அளவையும் உணர்துகொள்ள முடியுமெனவும்,அழிக்கப்பட்டு வரும் மக்கள் கூட்டத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதோடு அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளையும் உடனடியாக ஆரம்பிக்க முடியுமெனவும் தெரிவித்தார். |
http://www.tamilwin.com/view.php?2aIWnJe0dFj0A0ecQG7V3b4F9EM4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e
No comments:
Post a Comment