Monday, January 19, 2009

வெள்ளை மாளிகையில் பதவியேற்கும் கருப்பு அதிபர்:அமெரிக்காவில் புதிய அத்தியாயம் உதயம்!

 
 
lankasri.comஇன்று வாஷிங்டனில் நடக்கும் பிரமாண்டமான விழாவில் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்கிறார்.47-வயதாகும் ஒபாமா அமெரிக்காவின் இளம் அதிபர்களில் ஒருவர்.அமெரிக்காவின் ஹவாயில் உள்ள ஹோனலூலுவில் 1961-ஆக.4ம் தேதி பராக் ஒபாமா பிறந்தார்.

இவரது தந்தை சீனியர் ஒபாமா கென்யாவை சேர்ந்தவர்.தாய் அமெரிக்காவை சேர்ந்த ஆன் டன்ஹம்.இவருக்கு இரண்டு வயதாகும் போதே இவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.10-வயதுவரை இந்தோனேஷியாவில் வசித்தார்.

பின்னர் ஹோனலூலுக்கு திரும்பி தனது தாத்தா வீட்டில் தங்கி பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.பள்ளியில் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரராக திகழ்ந்தார்.லாஸ் ஏஞ்சலிசின் ஆக்சிடென்டல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படித்தார்.1982ம் ஆண்டு ஒபாமாவின் தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார்.தனது தந்தையை ஒபாமா ஒருமுறை மட்டுமே சந்தித்துள்ளார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1983ம் ஆண்டு பொலிட்டிக்கல் சயின்சில் பட்டம் பெற்ற பின்னர் நியூயார்கில் "பிசினஸ் இன்டர்நேஷனல் கார்ப்ரேஷன்", "நியுயார்க் பப்ளிக் இன்ட்ரெஸ்ட் ரிசர்ச் குரூப்" ஆகிய நிறுவனங்களில் இணைந்து பணியாற்றினார்.

1988ல் ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் சேர்ந்தார்.சட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த பின் வழக்கறிஞராக இருந்த போது 1992ல் மிஷல் ஒபாமாவை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சில மாதங்கள் பணிபுரிந்தார்.1993ல் ஒரு சட்ட நிறுவனத்தில் சேர்ந்து மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில் பணியாற்றினார்.

1995ல் அமெரிக்காவில் நிலவும் இன வேறுபாடுகள் குறித்து "டிரீம்ஸ் பிரம் மை பாதர்" என்ற புத்தகத்தை எழுதினார்.இந்த புத்தகம் மூலமாக கிடைத்த பணத்தில் சிகாகோவில் வீடு வாங்கியதாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

1996ம் ஆண்டு இல்லினாய்ஸ் செனட் உறுப்பினராக தேர்வானார்.2005ல் அமெரிக்க செனட்டின் உறுப் பினரானார்.ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வு பெற இவருக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி பெரும் பான்மை பிரதிநிதிகளின் ஆதரவை பெற்று,அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.ஏறத்தாழ ரூ.3-ஆயிரம் கோடிக்கு மேல் தேர்தல் நிதி திரட்டினார்.ஈராக் போர் தொடர்பான புஷ்சின் கொள்கைகளை தனது பிரசாரத்தில் ஒபாமா கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்த உறுதியளித்தார்.கடந்த நவ.4ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது.இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட மெக்கைனை எளிதாக வீழ்த்தி மொத்தமுள்ள 538-இடங்களில் 365-இடங்களை கைப்பற்றினார்.52-சதவீத வாக்குகளை பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட மெக்கைனுக்கு 45-சதவீத வாக்குகளே கிடைத்தன.ஒபாமாவின் பிரமாண்ட வெற்றிக்கு அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சீரழிவே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஒபாமாவின் தந்தை கருப்பினத்தை சேர்ந்தவர்.இவரது தாயார் வெள்ளையினத்தவர்.எனினும் தனது தாயாரின் முன்னோர்கள் அமெரிக்க பழங்குடி மக்களாக இருக்கலாம் என ஒபாமா தெரிவித்துள்ளார்.இவரது தந்தை இஸ்லாமியராக இருந்தாலும்,தாயின் கிறிஸ்தவ மதத்தை ஒபாமா பின்பற்றினார்.எனினும் இளைஞராக இருந்த போது சில ஆண்டுகள் நாத்திக கொள்கைகளில் நாட்டம் கொண்டார்.

ஆணுஆயுத தயாரிப்பை கைவிடும் படி சிரியா மற்றும் ஈரான் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொடர்ந்து ஒபாமா வலியுறுத்தி வருகிறார்.உலகம் முழுவதும் அணுஆயுத உற்பத்தியை நிறுத்த ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் ஆயுதங்களை உருவாக்க பல்லாயிரம் கோடி டாலர் செலவிடப்படுவதாகவும்,தான் அதிபரானவுடன் அதை குறைப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.எண்ணெய் இறக்குமதியை குறைத்து,வேறுவகைகளில் ஆற்றல் உற்பத்தியை பெருக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.ஒபாமாவுக்கு மலியா,ஷாஷா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1232437043&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails