Monday, January 19, 2009

யுத்தம் முடிவடைந்த பின்னர்தான் அரசியல் தீர்வுக்கான நகர்வாம்! - இந்தியாவிடம் இலங்கை திட்டவட்டமாகத் தெரிவிப்பு

 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முற்றாக நிறைவடைந்த பின்னரே தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை அரசு இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்ச ங்கர் மேனனிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அரசின் இந்த உறுதியான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார் என்று இந்திய நாழிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தைமேற்கொண்ட இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கண்டியில் நடந்த சந்திப்பின் போது இது குறித்து தெரிவிக்கப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான பேச்சுகளில் இவ்விடயமே முக்கியத்துவம்
பெற்றுள்ளது. மாகாணங்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்குவதற்காகத் தனது அர அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமையை இந்தியா கருத்தில் கொண்டுள்ளது என்று புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் பேச்சுகள் மூலமான அரசியல் தீர்வைக் காண்பதற்கான செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென வெளிவிவகாரச் செயலாளர் வலியுறுத்தினார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் உட்பட சகல சமூகத்தினரும் அமைதியுடனும் கௌரவத்துடனும் வாழக்கூடிய அரசியல் தீர்வை ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்பிற்குள் காணவேண்டும் என்றும் சிவ்சங்கர் மேனன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
இலங்கையின் வட பகுதியில் காணப்படும் மனிதாபிமான நிலைவரம் குறித்த இந்தியாவின் கரிசனையையும் மேனன் தெரிவித்தார். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, மேனனின் இலங்கை விஜயம் தொடர்பாக கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பிலும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் பேச்சுகள் மூலமாக அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாணங்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்குவதென இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழியை மேனன் வரவேற்றார் எனவும் உயர்ஸ்தானிகராலய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் மோதலின் காரணமாகப் பொதுமக்களுக்கு உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை மேனன் வலியுறுத்தினார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
a

 

http://www.swisstamilweb.com/

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails