Friday, January 30, 2009

வீரத் தமிழ்மகன்" முத்துக்குமாருக்கு தமிழக தலைவர்கள், பெருந்திரளான மக்கள் அஞ்சலி: பெரும் எழுச்சிப் போர்க்களம்; இறுதி நிகழ்வுகள் நாளை

  •  
 
தமிழீழ மக்களுக்காக, சென்னையில் உள்ள இந்திய மத்திய அரச செயலகத்தின் முன்பாக தன்னையே எரித்து வீரச்சாவடைந்த ஊடகவியலாளர், வீரத் தமிழ் மகன் முத்துக்குமாரின் உடலுக்கு தமிழக தலைவர்கள், பெருந்திரளான மக்கள்  கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.பேரெழுச்சி கொண்ட மக்களின் நிர்ப்பந்தம் காரணமாக, அவரின் புகழுடல் இன்று இறுதி நிகழ்வு செய்ய முடியாமல், நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற இந்த எழுச்சிமயமான இறுதி நிகழ்வுகள் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழீழ மக்கள் மீதான போரை இயக்கும் இந்திய அரசைக் கண்டித்து நேற்று சென்னையில் உள்ள மத்திய அரச செயலகமான சாஸ்திரி பவனுக்கு முன்பாக தீக்குளித்து வீரச்சாவடைந்த வீரத் தமிழ் மகன் முத்துகுமாரின் உடல் பொதுமக்களின் வணக்கத்துக்காக சென்னை கொளத்தூரில் வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 10:00 மணிக்கு பேரணியோடு போய், முடிவில் அவரது புகழுடலை அடக்கம் செய்யலாம் என்பது பொதுவான திட்டமாக இருந்தது.
ஆனால் நேரம் செல்லச் செல்ல ஏராளமான தமிழ் அமைப்பினர், இடதுசாரிகள், புரட்சிகர இடதுசாரித் தோழர்கள், மற்றும் ஆங்காங்கு இருந்து பொதுமக்களும் பெண்களும் உணர்வலைகளால் உந்தப்பட்டு முத்துக்குமாரின் புகழுடல் வைக்கப்பட்டிருந்த மேடைக்கு, அவருக்கு வணக்கம் செலுத்துவதற்காக வந்து சேர்ந்தனர்.
பல்லாயிரம் மக்கள் திரண்ட நிலையில் 10:00 மணிக்கு நடைபெற வேண்டிய இறுதி ஊர்வலத்தை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. தனது மரண சாசனத்தில் முத்துக்குமார் எழுதியிருந்தடி அவரது புகழுடலை வைத்து தமிழீழ ஆதரவுப் போராட்டத்தைக் கூர்மையாக்க வேண்டும் என்பது மாணவர்கள், வழக்கறிஞர்களின் விருப்பம். அந்த விருப்பத்துக்கு எதிராக யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

வைகோ, பழ.நெடுமாறன், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் ஆகியோர் எவ்வளவோ சொல்லியும் மாணவர்களும் வழக்கறிஞர்களும் கேட்க மறுத்து விட்டனர். இதன் விளைவாக முத்துக்குமாரின் புகழுடலை யாரிடமும் கொடுக்க மாட்டோம் என்று அங்கே மாணவர்களும் வழக்கறிஞர்களும் அமர்ந்தனர்.
தற்போது நாளை மாலை 3:00 மணிக்கு ஊர்வலத்துடன் கூடிய இறுதி நிகழ்வினை செய்யலாம் என முடிவு எடுத்திருக்கின்றனர். அந்த வணக்க அரங்கம் ஒரு போர்க்களம் போல் காட்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் ராஜபக்சவின் கொடும்பாவி, ஜெயலலிதாவின் கொடும்பாவியோடு தமிழகத்தின் "இந்து" மற்றும் "தினமலர்" பத்திரிகைகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.அந்தச் சாலையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கலைக்குழுக்கள் சார்பில் தொடர் நாடகங்களும் நடத்தப்பட்டதன. ஒரு பக்கம் முத்துக்குமாருக்கு வணக்கம், இன்னொரு பக்கம் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்கள், இன்னொரு பக்கம் கலை நாடக நிகழ்வுகள் என அந்த இடமே ஒரு எழுச்சியான போர்க்களம் போல் காட்சியளித்தது.

தன்னெழுச்சியாய் இந்தப் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தபோது தமிழகம் முழுக்க கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர், சென்னையில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்குள் நுழைய முனைந்த மாணவர்களும் கைது செய்யப்பட்டனர் என்ற செய்திகள் வந்து சேர்ந்ததும், தங்களின் தோழர்களை விடுதலை செய்யும் வரை தாங்கள் இங்கிருந்து அகலப்போவதில்லை என மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆதலால் மொத்தமாக பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட, சென்னை கொளத்தூர் பிரதேசம் மொத்தமாகச் செயலிழந்து போனது. அதன் பின்னர் - மாணவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

புரசைவாக்கம் வி.எஸ்.பாபு என்கிற அந்தப் பகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர், உணர்வு மேலீட்டால், முத்துக்குமாருக்கு வணக்கம் செலுத்த வந்திருந்தார்.

வணக்கக் கூட்டத்தில் பேசிய அரசியல் கட்சிகளைத் தவிர்த்த அனைவருமே முத்துக்குமார் ஏற்றி வைத்திருக்கும் இந்தத் தீயை அணைத்து விடாதீர்கள், இது மிகப்பெரும் எழுச்சி எனக் குறிப்பிட்டனர்.

குறிப்பாக இயக்குநர் பாரதிராஜா அழுதபடியே - ''உங்கள் கால்களில் விழுந்து கேட்கிறேன். இந்த நெருப்பை ஒவ்வொரு தமிழனின் இல்லங்களிலும் ஏற்றுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்.


http://www.tamilwin.com/view.php?2a0gE9FFe0bd1DpYO30ecb60jV43cc4PZLuS24d2cuWnZd4b33ZVQ6ocd40i0G7Ded0e2Fh2g8ae

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails