இலங்கையில் படையினருக்கும், புலிகளுக்குமிடையே தொடரும் மோதல்களின் காரணமாக அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்து பிரிட்டன் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.எனவே, மக்களின் பாதுகாப்புக் கருதி மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஒன்றைக் கடைப்பிடிப்பது அவசியமாகும் என்று பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லி பேன்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், "இலங்கையில் மோதல்கள் தொடர்ந்து இடம்பெறுவது குறித்து இங்கிலாந்தும், அதன் மக்களும் தீவிர கவலையடைந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இராணுவ முன்னேற்றங்களானது கடுமையான மனிதாபிமான விலை செலுத்தியே எட்டப்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியின் மனிதாபிமான நிலைமை மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் சம்பந்தமாகத் தொடர்ந்து வெளிவரும் அறிக்கை குறித்து நான் தீவிர கவலையடைந்துள்ளேன். கடந்த சில நாட்களாக நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண் கடந்த 14 ஆம் திகதி யுத்த நிறுத்தமொன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார். நான் அந்த அழைப்பை மீளவும் விடுப்பதுடன், உடனடி மனிதாபிமான யுத்த நிறுத்தமொன்றுக்கு இணங்குவதற்கு இரு தரப்பினரும் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். பொது மக்கள் மோதல்கள் நடைபெறும் பிரதேசங்களிலிருந்து நகர வாய்ப்பளிக்கவும், மனிதாபிமான உதவிகள் பாதுகாப்பாக விநியோகிக்கப்படவும் வழிவகுக்கும் வகையில் மோதல்களில் ஈடுபடும் இரு தரப்பினரும் மனிதாபிமான வழிப்பாதையொன்றை ஏற்படுத்தவும், மதிக்கவும் வேண்டும். காயமடைந்த பொதுமக்கள் தமது அத்தியாவசியத் தேவையாகவுள்ள கவனிப்பைப் பெறவேண்டும்.
No comments:
Post a Comment