கல்மடு - சொல்லப்படாத கதை:-GTN - போர்நிலவரச் செய்தியாளர்: |
மிகச் சக்திவாய்ந்த குண்டுகளைப் பயன்படுத்தியே இந்தப் பாரிய அணைக்கட்டு தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அணைக்கட்டு குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதன் காரணமாக ஏ-35 வீதியின் ஒரு பகுதியும் பரந்தன் - பூநகரி பிரதான வீதி மற்றும் தர்மபுரம், விஸ்வமடு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நீர் வழிந்தோடி ஆனையிறவையும் சென்றடைந்ததாக ஜீ.ரீ.என்னிற்கு உள்ளிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் இந்தக் குளம் உடைப்பதற்கான திட்டம் புலிகளால் முன்னரே தீட்டப்பட்டதா? அல்லது திடீரென எடுக்கப்பட்ட முடிவா எனக் கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் உண்மை நிலை விஸ்வமடுப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கு திட்டமிட்டு இருந்த படையினர் ஏறத்தாழ 5 ஆயிரம் துருப்புக்களுடன் நேற்று அதிகாலை 5 அல்லது 5.30 அளவில் தாக்குதல்களை ஆரம்பிக்கத் தயாராக இருந்துள்ளனர். இதற்கென கிளிநொச்சி மற்றும் பரந்தன் பிரதேசங்களைக் கைப்பற்றிய படையணியினருடன் அவர்களுக்குத் தலைமை தாங்கிய 3 கேணல் தர அதிகாரிகளும்; களத்தில் நேரடியாக இறக்கப்பட்டனர். கல்மடுக் குளத்தை அண்மித்த பகுதிகள் இவர்களின் தாக்குதல் தயாரிப்புத் தளங்களாக மாற்றப்பட்டு இருந்தன. ஏற்கனவே மூன்று நாட்களாக விஸ்வமடுப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காகப் படையினர் பல்வேறு முனைகளில் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தனர் என்பதனை நேற்று (ஜன24) பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையமும் உறுதிப்படுத்தி இருந்தது. இத்தகைய ஒரு சூழலிலேயே, படையினரால் தாக்குதல் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக அதிகாலை வேளை புலிகளால் இந்தக் குளத்தின் அணை குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது. இந்த நிலையில் படையினரின் தாக்குதல் திட்டத்தை புலிகள் முன்னதாகவே அறிந்திருந்தமை படைத்தரப்பில் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை இந்தக் குளம் உடைக்கப்பட்டமை மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விடுதலைப் புலிகள் மற்றும் அரச தரப்பில் இருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் வெளியிடப்பட்டு இருக்கவில்லை. இருந்த போதும் குளம் உடைக்கப்பட்டமையை ஏற்றுக் கொண்ட இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளம் விடுதலைப் புலிகள் மிகவும் கீழ்தரமான ராணுவ உத்தியைக் கையாண்டு கல்மடுக் குளத்தை உடைத்ததாகவும் இது மக்களுக்கு பெரும் மனிதாபிமானப் பிரச்சினையை ஏற்படுத்தும் எனவும் கவலை வெளியிட்டிருந்தது. எனினும் 'கல்மடுக் குளம் உடைக்கப்பட்டதில் படைத்தரப்பினருக்கு பாரிய அனர்த்தம் ஏற்பட்டு இருக்கலாம் என எதிர்பார்ப்புக்கள் வெளியாகியவண்ம் உள்ளன. அத்துடன் இந்தப் பிரதேசங்களி;ன் பாரிய தாக்குதல் அதிர்வுகள் யாழ் மாவட்டத்தை அண்மித்த பகுதிகளிலும் கேட்ட வண்ணம் இருப்பதாகவும் யாழ் மாவட்டத்திலும் ஆகாய தரை மார்க்கமான ராணுவப் போக்குவரத்துக்கள் மிகவும் அதிகரித்த நிலையில் காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல் குறித்த விபரங்கள் அரச விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து வெளியாகா விட்டாலும் கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் படைத்தரப்பினருக்கு பாரிய அனர்த்தம்; ஏற்பட்டு இருக்கலாம் எனவும் 600ற்கு மேற்பட்ட படையினர் காணாமல் போயிருக்கலாம் எனவும் ஐயம் வெளியிட்டுள்ளன. கூடவே பாரிய ஆயுத தளபாடங்களும் நீரில் சிக்குண்டதாக கூறப்படுகிறது. எனினும் அத்தகைய இழப்புக்கள் எதுவும் இல்லை என படைத்தரப்புக்கள் கூறுகின்ற போதும் கொழும்பில் அமைச்சர்கள் மட்டத்தில் பெரியளவில் பேசப்படும் சம்பவமாக முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன' என ஜீ.ரீ.என் செய்திச் சேவையும் ஏனைய ஊடகங்கள் செய்திகளை வெளியிட முன்னதாகவே கேள்விக்குறியுடன் செய்தியை வெளியிட்டு இருந்தது. ஆனால் இந்தத் குளம் உடைக்கப்பட்டமை குறித்தும் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்தும் ஐரோப்பாவில் காட்டுத் தீபோல் வதந்திகள் பரவத் தொடங்கின. கடந்த 2 வருடங்களாக விடுதலைப் புலிகள் அடைந்து வரும் பின்னடைவில் மனம் சோர்ந்திருந்த அல்லது விரக்தியின் உச்சத்திற்குச் சென்றிருந்த புலம்பெயர் மக்களில் பெரும்பாலானோர் திடீரென நித்திரை விட்டெழுந்து பாரிய வெற்றிக்களிப்புகளில் ஈடுபட்டிருந்தமையையும் காண முடிந்தது. பின்னர் அந்த வெற்றிக் களிப்பு படிப்படியாக காற்றிறங்கியது போல் இறங்கிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது. காரணம் இந்த குள உடைபின் பின்னால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து விடுதலைப் புலிகளோ அரசாங்கமோ எந்தத் தகவல்களையும் வெளியிட்டிருக்கவில்லை. அத்துடன் முன்னரைப் போல் தெற்கில் இருந்து தகவல்களை வெளியிடும் பாதுகாப்புப் பத்தி எழுத்தாளர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறியும் அரசாங்க மற்றும் ஏனைய உள்ளகத் தகவல்களை வெளியிட்டும் வந்த லசந்த விக்கிரமசிங்க கொல்லப்பட்ட நிலையிலும' ஊடகங்களும் எந்தத் தகவல்களையும் வெளியிட்டிருக்கவில்லை. அதனால் அளவுக்கு மீறிப் பரப்பிய வதந்திகளும் உண்மையாகவே வெளியான செய்திகளும் அடியுண்டு போய் எல்லோர் தரப்பும் மீண்டும் சோர் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆனால் நேற்றைய குள உடைப்பும் அதனால் ஏற்பட்ட சேதங்களும் அரசாங்கத் தரப்பை படைத்தரப்பை கடுமையான அசௌகரியத்திற்கு உள்ளாக்கி இருப்பது என்பதே உண்மையானது. அந்த அசௌகரியத்திலிருந்து அதிர்விலிருந்து மீளுவதற்கான அல்லது படைத்தரப்பினருக்கு மீண்டும் மன வலிமையை ஏற்படுத்துவதற்கான உத்தியாக இன்று முல்லைத் தீவு படையினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 1995 வரை முழுமையான கட்டுப்பாட்டில் படையினரின் ஆளுகைக்குட்பட்டிருந்த முல்லைத்தீவு கடந்த 13 வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. கடலை அண்மித்துக் காணப்படும் இந்த நகரத்திலிருந்து விடுதலைப்புலிகள் ஏற்கனவே முற்றாகப் பின் வாங்கியிருந்தனர். குறிப்பாக தம்முடைய வளங்களை பின்னோக்கி நகர்த்தியிருந்தனர். இருந்த போதும் படையினருக்கெதிரான கடுமையான தாக்குதல்களை தொடுத்த வண்ணமிருந்தனர். கிளிநொச்சி பரந்தன் பிரதேசங்களை இலகுவாகக் கைப்பற்றிய படையினர் முல்லைத்தீவை நோக்கிய நகர்வில் கடந்த 3 வாரங்களாக பாரிய அளவில் எதனையும் சாதித்திருக்கவில்லை. மாறாக நேற்று எதிhபாராத பாரிய இழப்பை சந்தித்து அந்த இழப்பின் மேல் இன்று முல்லைத்தீவு நகரத்தைக் கைப்பற்றியுள்ளனர். விடுதலைப் புலிகளால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட கல்மடுக் குளத்தின் நீரின் கன அளவு அதன் வேகம் அது பாய்ந்த சென்ற பிரதேசங்கள் அதன் பரவுகை என்பன எவ்வாறு பாரிய அளவில் படையினரைப் பலி கொண்டிருக்கலாம் என்ற கேள்விகள் பலருடைய மூளைகளையும் துளைத்த வண்ணமுள்ளன. இந்தக் குளத்தின் நீர் கடல் அலை போல் செல்லுமா அணை புரண்டு ஓடுமா நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் படையினரை அடித்துச் செல்லுமா என்ற கேள்விகள் வாதப் பிரதிவாதங்களுக்குட்பட்டுள்ளன. சிலர் கூறுகின்றார்கள் கல்மடுக்குளம் ஒரு சிறிய குளம். அது உடைந்து இவ்வளவு படையினரை பலி கொள்ளுமா? சில ஊடகங்கள் செய்திகளை மிகைப்படுத்தி உயிரை விட்டுக் கொண்டிருக்கும் புலிகளுக்கு ஒக்சிசன் ஏற்றுவதாகக் கூறுகின்றார்கள். விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் இந்தச் செய்தி பொய்படக் கூடாதென பிரார்த்திகின்றனர். மறுபுறம் விடுதலைப் புலிகளின் அழிவை எதிர்பார்த்திருப்போர் இந்தச் செய்தி பொய்ப்பட வேண்டுமென்றே ஆலாய்ப் பறக்கின்றனர். ஆனால் செய்திகள் என்பவை எப்போதும் செய்திகளே. நம்பகத் தன்மையுடைய செய்திகள் என்றும் வதந்திகளாகிய வரலாறு இல்லை. உண்மைச் சம்பவங்களை அதன் வாயிலாக வரும் செய்திகளை மிகைப்படுத்தவும் முடியாது. வதந்திகளாக்கவும் முடியாது. ஆயின் கல்மடுவில் நடந்தது என்ன? ஆயிரக் கணக்கான படையினர் விசுவமடுவையும் ஏனைய முக்கிய பிரதேசங்களையும் கைப்பற்றுவதற்கான யுத்த தயாரிப்பில் ஈடுபட்டிருந்தமை உண்மை. நேற்று அதிகாலை (ஜன 24) தாக்குதலை ஆரம்பிக்கத் தயாராக இருந்தமையும் உண்மை. அதற்கென விசேட படையணிகளும் 3 கேணல்தர அதிகாரிகளும் களமிறக்கப்பட்டிருந்தமையும் உண்மை. ஏதிர்பாராத விதமாக குளத்தின் அணை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டமையினால் நீர் அணை புரண்டு ஓடியதும் உண்மை. ஆனால் அணை உடைந்து புரண்டோடிய நீரினால் மட்டுமா படையினர் கொல்லப்பட்டனர் என்பது பொய்மையாகலாம். காரணம் இந்த நீரில் மின்சாரம் ஊடுவியிருந்ததாக படைத்தரப்பிலிருந்து கிடைக்கும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 600க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என எண்ணிய போது இல்லை அதற்கும் அதிகமாக படைத்தரப்பினருக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். உண்மையில் அணை உடைக்கப்பட்டதனால் வெளிப்பாய்ந்த நீரில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு முயன்ற அணிகளாக இருந்த படையினர் பலர் இங்கு கொல்லப்பட்டிருக்கின்றார்கள். சடலங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. குளத்தில் இருந்து பாய்ந்த நீர் வடிந்தோடுவதற்கும் வற்றுவதற்கும் குறைந்தது 3 நாட்கள் எடுக்கும் என பாதுகாப்புத்தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். உடனடியான மீட்புப் பணிகளில் ஈடபட முடியாத அளவிற்கு கள நிலமை மாற்றப்பட்டிருக்கின்றது. அதனால் மீட்புப் பணிகளுக்கு உடனே செல்ல முடியாத படையினர் அப்பிரதேசங்களுக்கு விடுதலைப்புலிகள் செல்லக் கூடாது என்பதற்காக தொடர் எறிகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். பெருமளவு ஆயுத தளபாடங்கள் இந்த பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்தன. இவற்றில் பெருமளவானவற்றை விடுதலைப்புலிகள் கைப்பற்றியிருப்பதாக ஒரு தகவல் கூறுகின்றது. ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்தப் பிரதேசங்களில் முன்னேறிச் சென்ற அல்லது பல திசைகளில் சிதறுண்ட படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து தம்மை நிலைப்படுத்துவதற்காக சில மைல் தூரம் பின் நோக்கி வந்ததாக கூறப்படுகின்றது. அதனையும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த அனர்த்தத்தில் கிளிநொச்சி பரந்தன் வெற்றியைத் தேடிக் கொடுத்த, அடுத்த தாக்குதலுக்குத் தலைமைதாங்கத் தயாராக இருந்த 3 கேணல் தர அதிகாரிகளின் நிலையும் என்னவென்பது ஐயப்பாடான கவலையளிக்கும் விடயமாகவே இருப்பதாக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. எவை எப்படி இருந்த போதிலும் இந்தப் பாரிய அனர்த்தத்திற்கு விடுதலைப் புலிகளோ அல்லது அரசாங்கமோ உடனடியாக உரிமை கோரப் போவதுமில்லை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆக எதிர்வரும் ஒரு சில தினங்களில் 400 முதல் 500 வரையான படையினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் அரச தரப்பினருக்கு ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே கல்மடுக் குள உடைப்பும் அதனால் ஏற்பட்ட சேதங்களும் உத்தியோகபூர்வமானவையாகப் பதியப்படும். அதுவரை இவை பலருக்கு செய்திகளாக பலருக்கு வதந்திகளாக சிலருக்கு உண்மைகளாக இன்னும் சிலருக்குப் பொய்மைகளாக இருக்கும் என்பதே யதார்த்தம். (நன்றி :globaltamilnews.net) |
No comments:
Post a Comment