சிறிலங்கா படையினரால் வன்னியில் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்படுவதனைக் கண்டித்து லண்டனில் இன்று மாபெரும் எழுச்சிப் பேரணி தற்போது நடைபெறுகின்றது.
இப்பேரணியில் ஒரு லட்சத்துக்கும்அதிகமான தமிழ் மக்கள் திரண்டு வந்து தமது எழுச்சியை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். லண்டன் மில் பாங்க் (MILL BANK ) எனும் இடத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நாடாளுமன்ற சுற்று வட்டம் ஊடாக ரெம்பிள் பிளேஸை (TEMPLE PLACE) நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்தும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தைக் கண்டித்தும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். அத்துடன் சிறிலங்கா அரசுக்கு எதிராகவும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தை கண்டிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் உள்ளனர்.
"சிறிலங்கா அரசே தமிழின அழிப்பை நிறுத்து" "எங்களுக்கு தமிழீழமே வேண்டும்"
"தமிழகத்தின் உணர்வுகளை சிறிலங்கா அரசே கொச்சைப்படுத்தாதே"
"உடனடியாக போரை நிறுத்த வேண்டும்"
"ஜி.எஸ்பி. சலுகை என்பது நீண்டகால அபிவிருத்திக்கே அன்றி தமிழின இன அழிப்பிற்கு அல்ல"
"இந்திய அரசே தமிழ் மக்களின் உணர்வை மதி"
"சிறிலங்கா அரசே தமிழ் இன அழிப்பை உடன் நிறுத்து"
"ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்து"
"பி.பி.சியே தமிழ் மக்கள் அழிவை கவனத்தில் கொள்"
"பாடசாலைகளிலும் மருத்துவமனைகளிலும் கோயில்களிலும் குண்டு வீசுவதை நிறுத்து"
உள்ளிட்ட பல முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். அத்துடன், சிறிலங்கா இராணுவத்தின் படுகொலைகளை கண்டிக்கும் வகையில் படங்கள் அடங்கிய ஊர்திகளும் வர்ணச் சித்திரங்களையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்ததுடன் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் படம் தாங்கிய பதாகைகளையும் அமெரிக்க-பிரித்தானிய-ஜப்பானிய தலைவர்களின் வாய்கள் மௌனமாக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கும் பதாகைகளும் சிறிலங்கா வான்படையின் போர் வானூர்திகள் மக்களை பலியெடுப்பது போன்ற பதாகைகளையும் மகிந்த ராஜபக்ச - கோத்தபாய ராஜபக்ச - சரத் பொன்சேகா ஆகியோரை படுகொலையாளிகளாக சித்தரிக்கும் பதாகைகளையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.
அத்துடன், நீதியின் திலகமாக விளங்கும் இந்தியாவின் மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த இந்திய தேசமே சிறிலங்காவின் தென்பகுதியில் இருந்து கொண்டு தமிழின அழிப்பை மேற்கொள்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டதுடன் அதனை பிரதிபலிக்கும் வகையில் காந்தியின் படத்தை தாங்கிய வாசக அட்டைகளையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.
இப்பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட மேலும் பல அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர். இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு லண்டனில் பல்வேறு பாகங்களில் இருந்தும் வருகை தரும் மக்கள் தொடர்ச்சியாக குவிந்து கொண்டிருப்பதால் பேரணி நடைபெறும் வீதி மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது.
No comments:
Post a Comment