இலங்கை இனப்பிரச்சினை
கோவி லெனின்
இப்போது வரைபடத்தை பார்த்தாலும் ஒரு கண்ணீர்த்துளி இந்தியாவின் காலடியில் கிடந்து கருணையை எதிர்பார்ப்பது போன்ற தோற்றத்தில்தான் இருக்கும் இலங்கைத் தீவு. புவியியலின்படி இந்திய நிலப்பகுதியும் இலங்கை நிலப்பகுதியும் பன்னெடுங்காலம் முன்னே இணைந்திருந்தவை என்றும் கடல்கோள்களால் அவை பிரிக்கப்பட்டன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் கூறப்படும் ஏழ்தெங்கம் என்ற நாடுதான், கடலால் பிரிக்கப்பட்டு ஈழம் ஆனது என்று குறிப்பிடுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். தாயின் தொப்புள் கொடியிலிருந்து குழந்தையை தனியே பிரித்தெடுப்பதுபோல கடல் இரு நாடுகளையும் பிரித்துவிட்டது.
இலங்கையில் நீண்டகாலமாகவே தமிழர்கள் வாழ்ந்து வருவதை அந்நாட்டின் வரலாற்று நூலான மகாவம்சம் எனும் நூலிலே தெரிவிக்கிறது. குவெய்னி என்ற தமிழ் அரசி ஆட்சி செய்த காலத்தில் வடஇந்தியாவின் லாலாதேசம் என்ற பகுதியிலிருந்து விஜயன் என்பவர் தலைமையில் கப்பலில் வந்து சேர்ந்தவர்களே பின்னர் சிங்கள இனத்தவர்களாயினர் என்பதை மகாவம்சம் விளக்குகிறது. எல்லாளன் என்ற தமிழ் அரசனது ஆட்சியில் ஒரே குடையின் கீழ் இலங்கை இருந்ததையும் அந்நுகில் விளக்குகிறது. பின்னர், இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெற்ற நாடுதான் இலங்கை.
சுதந்திர இலங்கையில் அமைந்தது பெரும் பான்மையினரான சிங்களர்கள் தலைமையிலான அரசு. சிறுபான்மைத் தமிழர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோணமலை உள்ளிட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசித்து வந்தனர். ஒரே நாட்டில் வாழ்ந்த போதும் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தி வந்தது சிங்கள அரசு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இலங்கை மலைத் தோட்டங்களில் வேலை செய் வதற்காக இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப் பட்டு காலம் காலமாக இலங்கையின் பொருளா தாரத்தை முன்னேற்றிய தமிழர்கள் 10 லட்சம் பேரின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்தது, இலங்கையின் முதல் பிரதமரான சேனநாயகா தலைமையிலான அரசு.
தமிழர் பகுதிகளுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து தமிழ் தலைவர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. ஈழத்தந்தை என்றழைக்கப்படும் செல்வா (செல்வநாயகம்) தலைமையிலான தமிழரசு கட்சி அறவழிப் போராட்டங்களை மேற்கொண்டது. தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற அக்கட்சி 1976ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் இலங்கைத் தமிழருக்கான கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து மாநாடு நடத்தியது. தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் சிங்கள அரசுடன் சேர்ந்திருக்க முடியாது என்றும் தனிநாடு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அந்த மாநாட்டில் அறிவித்தார் செல்வா. இதற்கு தமிழ் மக்களின் ஆதரவைக் கோரினார். 1977-ல் நடந்த தேர்தலில் இலங்கையின் 32 தமிழ்த் தொகுதிகளில் 31-ல் தமிழர் கூட்டணியை வெற்றி பெறவைத்து தனி நாட்டிற்கான தங்கள் ஏற்பளிப் பைத் தெரிவித்தனர் ஈழத் தமிழ் மக்கள்.
செல்வாவைத் தொடர்ந்து அமிர்தலிங்கம் உள் ளிட்ட தலைவர்கள் அறப்போராட்டங்களை மேற்கொண்டனர். ஆனால், இலங்கை அரசு தமிழர் நலனில் அக்கறை செலுத்தவில்லை. தமிழர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வந்ததுடன், தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றி இலங்கையை முழுமையான சிங்கள நாடாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டது. இதனால் கொதித்துப்போன தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
1983ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள வெலிக் கடை சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன், தங்க துரை உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். குட்டிமணி தனது கண்களை தானம் செய்ய பதிவு பண்ணியிருந்தார். தான் இறந்தாலும் தானம் செய்யப்படும் கண்களால் தமிழர்களின் சுதந்திர நாட்டை பார்ப்பேன் என்று அவர் சொல்லியிருந்ததால் அவரது கண்களைத் தோண்டி எடுத்துவிட்டு அவரது உயிரை பறித்தனர் சிங்கள வெறியர்கள். இலங்கை அரசின் ஆதர வுடன் தமிழர்கள் வேட்டையாடப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறையை காவல்துறை ராணுவம் உள்ளிட்டவை மேற் கொண்டன. இலங்கையின் மிகப் பெரியதும் பழைமையானதுமான யாழ்ப்பாணம் நுகிலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
அரசே முன்னின்று நடத்திய படுகொலைகளாலும் வன்முறைகளாலும் இலங்கை மண்ணில் வாழ முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் அகதி முகாம்கள் அமைத்து தரப் பட்டன. இலங்கை ராணுவத்துடன் ஆயுதப் போராட்டம் மேற்கொண்ட தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சிக் களம் அமைக்க அனுமதியளித்தார் அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி.
அவரது மறைவுக்குப்பின் பிரதமரான ராஜீவ் காந்தி இலங்கைப் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டார். ஆனால், இந்த ஒப்பந்தத்தை சிங்கள கட்சிகள் ஏற்கவில்லை. ஒப்பந்தத்திற்குப் பின் இலங்கை சென்ற ராஜீவ் காந்தியை ராணுவ வீரர் ஒருவர் மரியாதை அணிவகுப்பின்போது துப்பாக்கியால் தாக்க முயன்ற சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியடையவைத்தது. ஒப்பந்தத்தின்படி இலங் கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிகாப்புபடை சிங்களர்களின் எதிர்ப்புக்குள்ளானதுடன் தமிழர் களுக்கு எதிராகவே அப்படை போரிட நேர்ந்தது. ஒப்பந்தம் நிறைவேறாமல் தோல்வியடைந்தது.
1991-ல் திருப்பெரும்புதூரில் நடந்த மனிதவெடி குண்டு தாக்குதலில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட இலங்கை பிரச்சினையிலிருந்து ஒதுங்கி நிற்கத் தொடங்கியது இந்தியா. இலங்கையில் ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப் பட்டது. இதன்பின்னர் இலங்கையில் தொடர்ந்து போர்களும் தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத்தின் வன்முறையும் நீடித்தன. போரில் விடுதலைப்புலிகளின் கை ஒரு கட்டத்தில் ஓங்குவதும் பின்னர் சிங்கள ராணுவம் அந்தப் பகுதிகளை மீட்பதுமாக 25 ஆண்டுகால அவலம் தொடர்கிறது. இலங்கைத் தமிழர் பகுதியில் மின்சாரம் கிடையாது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளுக்கும் தட்டுப்பாடு. அரிசி ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. இவையெல்லலாம் போர் ஏற்படுத்திய கொடூர விளைவுகள்.
ஜப்பானும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முயன்றன. நார்வே நாடு மேற்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஏறத்தாழ ஐந்தாண்டு காலத்திற்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற் போதைய அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றபிறகு மீண்டும் போர் தொடங்கியது. விடுதலைப்புலிகள் அமைப்பினர் வான்படை அமைத்து தாக்குதல் நடத்தும் ஆற்றல் பெற்றவராயினர். அவர்களிடம் தரைப்படையும் கடற்படையும் ஏற்கனவே இருக்கிறது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கல்வி நிலையங்கள், காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றை அவர்கள் நிர்வகித்து வருகின்றனர். இப்பகுதிகளை மீட்க பல நாடுகளின் உதவியுடன் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. இப்போரினால் அப்பாவி தமிழ்மக்கள் குண்டுவீச்சுக்கு ஆளாகி தங்கள் உயிரை இழப்பதும் தங்கள் வாழ்விடங்களை இழந்து காட்டுக்குள் பதுங்கி வாழ்வதும் மனித நேயம் உள்ள யாரையுமே கலங்கச் செய்துவிடும்.
இவர்களுக்கு ஐ.நா. அவை, செஞ்சிலுவை சங்கம் போன்றவை உதவ முன்வந்தாலும் இலங்கை அரசு அனுமதிப்பதில்லை. அதனால்தான் இந்தியா உதவி செய்ய வேண்டும் என்ற குரல் தாய்தமிழகத்திலிருந்து கட்சி எல்லை கடந்து ஒலிக்கிறது. அப்பாவி தமிழர்களைக் கொல்லும் இலங்கை அரசுக்கு செய்யப்படும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்டவற்றை செஞ் சிலுவை சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகள் வாயிலாக வழங்கவேண்டுமென்றும் இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு அமைதியான வாழ்க்கைக்கு தமிழ் மக்கள் திரும்புவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்றும் இந்திய அரசை தமிழக முதல்வர் தலைமையில் கூடிய தமிழக அனைத்துக்கட்சிக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்ற தன் நிலைப் பாட்டை இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் அக்கறை மிகுந்த நடவடிக்கைளால் மட்டுமே இலங்கை பிரச்சனையை முடிவுக்கு வரமுடியும்.
No comments:
Post a Comment