January 31, 2009
மானத்தமிழன் முத்துக்குமார் மறத்தமிழன் தம்பி பிரபாவின் உருவத்துடன் பயணம் !
தீப ஒளியுடன் திருமகன் திருவீதி ஊர்வலம் !
இக்குனர் அமீர் ஊர்வல வண்டியில் உணர்ச்சிப்பயணம் !
புதுவை இரத்தினதுரை வீரக்கவிபுனைவு !
முத்துக்குமாரின் மரணம் உலகம் முழுவதும் தீ மூட்டியது !
முன்னையிட்ட தீ முப்புரத்திலே !
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே !
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே !
நீயுமிட்ட தீ மூழ்க மூழ்கவே !
ஈழத்தமிழர்களுக்காக நேற்று முன் தினம் சென்னையில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் சென்னை கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து தொடங்கியது. பெரும் எழுச்சியை ஏற்படுத்திய இறுதி ஊர்வலம் லட்சம் மக்கள் பங்கெடுப்பு
கொளத்தூரில் இருந்து உடல் அடக்கம் செய்யப்படும் மூலக்கொத்தளம் என்கிற இடத்துக்கு இந்த ஊர்வலம் 2 மணி நேரமாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதில் பெண்களும், மாணவர்களுமே பெரும் பங்கேற்றுள்ளனர். 3கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் பங்கெடுத்துள்ள இந்த இறுதி ஊர்வலம் நீண்டுள்ளது.
ஊர்வலத்தின் வழிநெடுகிலும் பொதுமக்கள் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைத்து ஊர்வலத்தில் பங்கெடுத்துள்ள தமிழுணர்வாளர்களுக்கு தாகம் தீர்க்கின்றனர். முத்துக்குமார் உடல் செல்லும் வாகனத்தில் இயக்குநர் அமீர் அமர்ந்துள்ளார்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச்சேர்ந்த வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன் உட்பட அரசியல் தலைவர்களும் பாரதிராஜா,சீமான், செல்வமணி உட்பட திரைப்பட உலகினரும் தமிழுணர்வாளர்களும் இலங்கைக்கு துணைபோகும் மத்திய அரசை கண்டித்து ஆவேசமாக கோஷமிட்டபடியே இறுதி ஊர்வலத்தில் செல்கின்றனர்.
முத்துக்குமார் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் உருவம் பதித்த துணி போர்த்தப்படிருந்தது.
பாதி ஊர்வலத்தில் அந்த பிரபாகரன் துணியை எடுத்துவிட்டனர்.
ஒடுக்கப்பட்டோருக்கான அமைப்பினர், இந்த ஊர்வலத்தின் போது இந்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி இந்திய தேசியக்கொடியை எரித்தனர்.
சென்னை மாநகரில் இந்த இறுதி ஊர்வலம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரரில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தமிழுணர்வாளர்கள் பங்கெடுத்துள்ளனர். 3கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் பங்கெடுத்துள்ள இந்த இறுதி ஊர்வலம் நீண்டுள்ளது.
பெரம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஊர்வலம் போன போது பொதுமக்கள் முத்துக்குமாரின் உடல் செல்லும் வாகனத்துக்கு தீப ஒளி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
முத்துக்குமரா!
முகம் தெரியாப்போதினிலும்
செத்துக்கிடக்கின்றாய் எமக்காக,
எனவறிந்து
தேகம் பதறுகிறதே திருமகனே!
உந்தனது,
ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே
நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ
உனக்கு அஞ்சியெழுதும் என்னைச் சுற்றி
நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில்
அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்.
உன் மேனியில் மூண்ட நெருப்பு
உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார்
நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்.
சின்ன அக்கினிக்குஞ்சே!
உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய்
அந்தச்சோதிப்பெரு வெளிச்சம்
எமக்குச் சக்தி தரும்
வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும்.
உன் இறுதி மூச்சு
புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும்.
எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி
உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது.
தம்பி!
வாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன்.
நீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல
எமக்குப்பலம் நல்கும் சக்திக்குமார்
இங்கிருந்து உன் முகத்தைக்காண்கிறேன்.
உன் குரலைக் கேட்கிறேன்.
உன் மூச்சை உள் வாங்குகிறேன்.
இடையில் கடல்கடந்தும் வருகின்றது
உன் சிரிப்பின் ஓசை.
எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்ப
கடலிலே அனுப்பி வையுங்கள்
அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ,
ஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க,
கண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச,
மகனே!
நெருப்பெரியும் தேசத்தை எண்ணி
நெருப்பில் எரிந்தவனே!
உன்நெஞ்சின் உணர்வுகளை வாங்கி
இங்கே உயிர்கள் பிறக்கும்
உன் இறுதி மூச்சை உள்வாங்கி
உயிர்கள் சுவாசிக்கும்
நாளை உயிர் தரித்திருப்போம் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் அற்று வாழ்கின்றனர் ஈழத்தமிழர்
உயிர் அரியும் வலியில் ஈழம் துடிக்கின்றது
ஆயினும் பகைக்கு பணிவிடை செய்யோம் என்றபடி
நிமிர்ந்துள்ளோம் நாங்கள்.
முத்துக்குமார்,
நீ செத்துக்கிடக்கின்றாயாமே எமக்காக
யாராவது அவனின் புனித உடலை
எமக்கு பொதிசெய்து அனுப்ப மாட்டீர்களா?
இந்த வீரமண்ணில் விதைப்பதற்காக
அந்த வித்துடல் வேர் பிடித்து
புதிய தலைமறை ஒன்றைப் பிரசவிப்பதற்காக.
தம்பி!
வார்த்தை ஏதும் வரவில்லையே
உன்னை வனப்புச்செய்து வாசலில் வைப்பதற்காக
தமிழீழம் உனக்காக விழியுடைத்துப் பெருகிறது
உன் கடைசிக்கடிதத்தின் பொருள் உணர்ந்து
நெஞ்சுருகி உன்னைப்பாடுகின்றது தமிழீத்தமிழ்.
நண்பனே!
முகம் தெரியாத எம்.முத்துக்குமார்
உன்னை நெஞ்சில் வைத்து சத்தியம் செய்கின்றோம்.
நீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அவியாது
விண் தொட எழும் - அந்த வெளிச்சத்தில்
நாங்கள் ஒளி பெறுவோம்.
என் பிரிய உறவே!
சென்று வருக
திரும்பி வராவிட்டாலும்
நன்றியென்ற ஓருணர்வை
நாம் சுமந்து நிற்கின்றோம்.
பிரிய தோழனே உனக்கு தமிழீழத்தின் வீரவணக்கம்.
No comments:
Post a Comment