|
|
கடந்த மாதம் 26ம் தேதி மும்பை மக்களுக்கு மட்டுமல்ல.ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் கருப்பு நாள்.ஈவு இரக்கமின்றி 200க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை துடிக்க,துடிக்க பயங்கரவாதிகள் கொலை செய்த கோர நாள். வழக்கமாக,இதுபோன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்,விசாரணை,உயர்மட்டக் குழு ஆலோசனை என்ற பெயரில் மெத்தனமாக செயல்படும் மத்திய அரசு,இந்த முறை சுதாரித்துக் கொண்டது. "பயங்கரவாதிகளின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுங்கள்" என மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தாங்களாகவே முன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டது,ஆட்சியாளர்களை அதிர்ச்சி அடையச் செய்து விட்டது.இதனால்,இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்த மத்திய அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது. ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில் தடை: "எங்கு அடித்தால்,;எங்கு வலிக்கும்" என்பதை நன்றாகவே தெரிந்த மத்திய அரசு, அமெரிக்கா மூலம் பாகிஸ்தானை பணிய வைக்க காய் நகர்த்தியது.எப்போதும்,பாக்.,விஷயத்தில் டபுள் கேம் ஆடும் அமெரிக்கா,இந்த முறை இந்தியாவுக்கு பச்சை கொடி காட்டியது. தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கும்,பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தும் ஆதாரங்கள் அமெரிக்காவிடமும்,ஐ.நா.,விடமும் அளிக்கப்பட்டதை அடுத்து,வேகமாக நடவடிக்கைகள் துவங்கின.இதன் காரணமாக,மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜமாயத்-உத்-தவா அமைப்புக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. 1985ல் இந்த அமைப்பு: ஐ.நா.,உத்தரவுப்படி ஜமாயத் அமைப்பின் தலைவரான ஹபீஸ் முகமது சயீத்,லஷ்கர் அமைப்பை சேர்ந்த ஹாகீர் உர் ரகுமான் லக்வி,இந்த அமைப்புகளுக்கு நிதி திரட்டித் தரும் முகமது அஸ்ரப் மற்றும் இந்தியாவில் பிறந்த முகமது அகமது பகாஜிக் ஆகியோரை பாகிஸ்தான் அரசு கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளது.ஜமாயத்-உத்-தாவா தோற்றம்: ஐ.நா.,விதித்த தடையின் மூலம் சர்வதேச நாடுகளின் கவனம்,ஜமாயத்-உத்-தவா அமைப்பின் பக்கம் திரும்பியுள்ளது.கடந்த 1985ல் இந்த அமைப்பு பாகிஸ்தானில் தோற்றுவிக்கப்பட்டது.ஹபீஸ் முகமது சயீது தான் இந்த அமைப்பின் தலைவர்.ஹபீசுக்கு லாகூர் இன்ஜினியரிங் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உண்டு. ஆரம்ப கட்டத்தில் ஜமாயத் அமைப்பு,மர்கஸ் தவாவல் இர்சாத் என அழைக்கப்பட்டது.லஷ்கர் அமைப்பை,பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது.இதையடுத்து,ஜமாயத் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு,அதன் நடவடிக்கைகள் தொடர்ந்தன.லஷ்கர் அமைப்பின் ஒரு அங்கமாகவே ஜமாயத் செயல்பட்டு வந்தது.இது ஒரு அறக்கட்டளை அமைப்பு என்றும் அறிவிக்கப்பட்டது. சர்வதேச நாடுகளை ஏமாற்ற தந்திரம்: ஜமாயத் அமைப்பை அறக் கட்டளை அமைப்பு என நம்ப வைப்பதற்கு புதிய தந்திரங்கள் கையாளப்பட்டன.இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுவதாகவும்,பொதுமக்களுக்கு தேவைப்படும் நிவாரண உதவிகளையும், கல்வி திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டன. கடந்த 2005ல் பாகிஸ்தானில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர்.ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்வதற்காக ஐ.நா.,அமைப்பு அங்கு விரைந்தது.ஆனால்,அதற்கு முன்னதாகவே சிலர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.அவர்களிடம் விசாரித்தபோது,ஜமாயத் அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர். இதனால்,ஐ.நா.,அதிகாரிகளுக்கு ஜமாயத் அமைப்பின் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது.இரட்டை வேடம் பலித்தது;தாங்கள் போட்ட இரட்டை வேடம் ஐ.நா.,விடம் பலித்ததை அடுத்து,ஜமாயத் அமைப் பினர் உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தனர். அமெரிக்காவும்,இந்தியாவும் அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பு என தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.இருந்தாலும்,நேரடியாக நடவடிக்கை எடுக்க ஐ.நா.,தயக்கம் காட்டி வந்தது.வெளி உலகிற்கு தன்னை அறக்கட்டளை அமைப்பாக அடையாளம் காட்டி வந்தாலும்,உண்மையில் லஷ்கர்-இ-தொய்பாவின் மறு வடிவமாகவே இது செயல்பட்டு வந்தது. ஜமாயத் அமைப்புக்கு சுதந்திரம்: ஜமாயத் அமைப்பின் ஒரே தலைவர் ஹபீஸ் மட்டும் தான்.துணை தலைவர்கள் யாரும் இல்லை.முக்கியமான தாக்குதல் நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்,சிலரின் ஆலோசனையை கேட்பதோடு சரி. மற்றபடி முடிவு எடுப்பதெல்லாம் ஹபீஸ் மட்டுமே.ஜமாயத் அமைப்பிற்கு பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் 2,500 அலுவலங்கள் உள்ளன. இந்த அமைப்பின் வங்கிக் கணக்குகளில் வந்து குவியும் நிதிகள் குறித்து பாக்., அரசு கண்டு கொள்வது இல்லை. லஷ்கர் அமைப்பை சேர்ந்தவர்கள் தலிபான் அமைப்பினருக்கு உதவி செய்வதற்காக, ஆப்கன் செல்வது வழக்கம்.அப்போது,அவர்கள் தங்களுடன் ஜமாயத் அமைப்பின் அடையாள அட்டையை கொண்டு செல்வர்.இந்த அட்டையின் உதவியுடன் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் தடையின்றி செல்லலாம். பாகிஸ்தான் அரசு அவர்களுக்கு இந்த சுதந்திரத்தை அளித்திருந்தது.வெளிச்சத்திற்கு வந்த உண்மை: மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பின், ஜமாயத்-உத்-தவா என்ற பெயருக்கு பின்னால் லஷ்கர் அமைப்பு செயல் பட்டு வருவது ஆதாரங்களுடன் ஐ.நா.,வில் நிரூபிக்கப்பட்டது.இதன் காரணமாகவே,தற்போது அந்த அமைப்பை தடை செய்ய ஐ.நா.,உத்தரவிட்டுள்ளது. ஜமாயத் அமைப்பின் இரட்டை வேடம் குறித்து,ஐ.நா.,மனித நேய நடவடிக்கை பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜான் வான்டெமூர்டெல் கூறுகையில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது நாங்கள் நிவாரணப் பணிகளை செய்வதற்காக அங்கு போயிருந்தோம்.அப்போது அங்கு ஜமாயத் அமைப்பினர் நிவாரண முகாம்களை அமைத் திருந்தனர்.மற்றபடி,அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை" என்றார். பாக்.,கை களங்கப்படுத்தும் நடவடிக்கையாம்: ஜமாயத் அமைப் புக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் கூறுகையில், "இந்த தடையை ஏற்றுக் கொள்ள முடியாது.எங்களுக்கும்,பயங்கரவாதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.ஜமாயத் ஒரு அறக்கட்டளை அமைப்பு.எங்களுக்கு தடை விதிக்கப்பட்டது,பாகிஸ்தானை களங்கப்படுத்தும் நடவடிக்கை. தடையை எதிர்த்து சர்வதேச கோர்ட்டுக்கு செல்வோம்.அமெரிக்காவின் டாலர் ராஜ்யம் முடிவுக்குவரும் நேரம் வந்துவிட்டது.அமெரிக்காவும்,இந்தியாவும் எப்போதும் எங்கள் நலனை விரும்பியது இல்லை.அந்த நாடுகளின் நெருக்கடியே தடைக்கு காரணம்" என ஆவேசமாக கூறியுள்ளான். அடுத்து என்ன நடக்கும்?: ஐ.நா.,வின் தடைக்கு பின்,வேறு வழியின்றி பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை எடுத்துள் ளது. ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட ஹபீஸ்,லக்வி உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளது,பாக்.,அரசு.அவர்களின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளதாகவும்,ஜமாயத் அமைப்பின் அலுவலகங்கள் மூடப்பட்டதாகவும் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை,தற்காலிகமாக சர்வதேச நாடுகளை நம்ப வைப்பதற்காக எடுக்கப்பட்ட கண் துடைப்பா அல்லது,உண்மையிலேயே அந்த அமைப்பையும்,தலைவர்களையும் முடக்கும் நடவடிக்கையா என்பதை தற்போது தெரிவிக்க முடியாது என்கின்றனர்,சர்வதேச அரசியல் விமர்சகர்கள். பாகிஸ்தான் அரசு,பயங்கரவாத அமைப்புகள் மீது உண்மையிலேயே கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதை சிறிது காலம் பொறுத்திருந்து தான் கூற முடியும் என்பது அவர்களது வாதம். விபசார தரகருக்கு தொடர்பு? : மும்பையைச் சேர்ந்த விபசார தரகர் ஒருவர் தற்போது,உளவுப் பிரிவு போலீசாரின் பிடியில் வசமாக சிக்கியுள்ளார்.இவர் "கேட்லாக்" என வாடிக்கையாளர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். இரண்டு மாதங்களுக்கு முன் கராச்சியில் இருந்து இவருக்கு 85 லட்சம் ரூபாய் ஹவாலா மூலமாக வந்துள்ளது.இதை போலீசார் தற்போது மோப்பம் பிடித்துள்ளனர்.மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மும்பை தாக்குதல் சம்பவத்துக்கும்,கேட்லாக்கிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. தெற்கு மும்பையில் உள்ள ஓட்டல் ஊழியர் ஒருவர் மூலமாக கேட்லாக்கிற்கு இந்த பணம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.அந்த ஓட்டல் ஊழியரையும் தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.மும்பை தாக்குதல் சம்பவத்துக்காக,இந்த பணம் பயன்படுத்தப் பட்டதா என் பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது" என்றார். |
No comments:
Post a Comment