உலகின் வல்லரசு நாடாகவும், பெரும் பணம் கொண்ட நாடாகவும் கருதப்படும் அமெரிக்காவின் 44ஆவது குடியரசுத் தலைவராக, கருப்பினத்தைச் சேர்ந்தவரான ஒருவர் அந்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவர்தான் பராக் ஹூசைன் ஒபாமா (வயது 47).
ஆப்ரிக்க அமெரிக்கர் என்று அழைக்கப்படும் அங்குள்ள கருப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். புராட்டஸ்டென்ட் கிறித்துவரான ஒபாமாவின் தந்தை கென்யா நாட்டைச் சேர்ந்த கருப்பினத்தவரான பராக் ஒபாமா ஆவார். ஒபாமாவின் தாய் அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளையினத்தவரான ஆன் சோய் டோரா. தனது குழந்தைப் பருவத்தில் இந்தோனேசியாவில் வசித்த ஒபாமா, 12ஆவது வயது முதல் அமெரிக்காவில் தன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். கல்லூரிக் கல்வி முடித்து ஹாவர்டு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். மிச்செலி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட ஒபாமாவுக்கு மாலியா (10வயது), ஷாஷா (7 வயது) என்கிற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஜனநாயகக் கட்சியில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிட்டு 52 சதவிகித வாக்குகளைப் பெற்று ஒபாமா அமெரிக்க அதிபராகி உள்ளார். ஆப்ரிக்க கண்டத்திலிருந்து கருப் பினத்தவர் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டு அவர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்டதே அமெரிக்கா.
உரிமைகள் மறுக்கப்பட்ட கருப்பினத்தவர்களில் பிறந்த ஒபாமா அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நுழை வது வரலாற்றுப் புகழ்வாய்ந்த நிகழ்வு அல்லவா!
போருக்கு எதிரான கருத்துகொண்ட ஒபாமா, ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது தவறு என்று தெரிவித்தார். நம் எதிர்காலம் நம் தலையில் எழுதப்பட்டதல்ல; நம் தலையால் எழுதப்படப் போகிறது. வேற்றுமையை ஒதுக்கி ஒற்றுமையை வளர்ப்போம் என்று கூறிப் பிரச்சாரம் செய்த ஒபாமாவுக்கு அமெரிக்க மக்கள் பெரும் ஆதரவை அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment