விடுதலைப்புலிகளின் நிர்வாகத் தலைநகராக விளங்கும் கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று பிரபாகரன் சபதம் பூண்டுள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே உச்ச கட்ட போர் நடந்து வருகிறது. முக்கிய கடற்படை தளமான பூநகரியை கைப்பற்றிய ராணுவம், விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகராக விளங்கும் கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த நிலையில், விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களான சேனாதிராஜா ஜெனந்த மூர்த்தி மற்றும் சந்திரநேரு ஆகியோர், தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது, கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று, விடுதலைப்புலிகள் சபதம் ஏற்று இருப்பதாக அவர்களிடம் பிரபாகரன் தெரிவித்தார். "பூநகரி பிரதேசத்தில் இருந்து பின்வாங்கிச்சென்றது போர் தந்திர உபாயமே. இன்னும் 3 மாதங்களுக்குள் ராணுவத்துக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல் முன்னெடுக்கப்படும்'' என்றும் பிரபாகரன் கூறி இருக்கிறார். இந்த நிலையில், கிளிநொச்சியில் விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி வருகின்றன. தரை வழியாக ராணுவமும் பீரங்கி தாக்குதல் மற்றும் ராக்கெட் குண்டுகளை வீசுகின்றன. கிளிநொச்சி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள், பொது கட்டிடங்கள், சாலைகள் மீது குண்டுகள் விழுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். பீரங்கி குண்டு, ராக்கெட் குண்டு மற்றும் விமான குண்டு என பலமுனை தாக்குதலில் இருந்து தப்பி காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். குண்டு வீச்சில் சிக்கி, ஏராளமான வீடுகள் சின்னா பின்னமாகி விட்டன. எனினும், தப்பிக்க வழியில்லாமல் ஒரு சிலர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சியில் உள்ள மருத்துவமனை, பள்ளிக்கூடம் ஆகியவற்றின் வழியாக கண்டி செல்லும் சாலையையும் ராணுவம் தகர்த்து விட்டது. இதற்கிடையே முகமலை பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளை விமானப்படை குண்டு வீசி அழித்தது.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=7060&lang=ta&Itemid=52 |
No comments:
Post a Comment