மும்பை தாக்குதல் பற்றி ஒரு மாதத்துக்கு முன்பே அமெரிக்கா இரு முறை எச்சரித்து இருந்ததாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அந்த தாக்குதல் பட்டியலில் தாஜ் ஓட்டலும் இடம் பெற்று இருந்தது. நாட்டை உலுக்கிய மும்பை தாக்குதல் பற்றி, ஒரு மாதத்துக்கு முன்பே அமெரிக்க உளவு நிறுவனங்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்து தகவல் அனுப்பி உள்ளன. அதுவும் ஒரு முறை அல்ல, இரண்டு முறை இந்த கடல் வழி தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்ததாக அமெரிக்க தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார். சி.என்.என். டெலிவிஷன் சேனல் இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. `ஏ.பி.சி. நிïஸ் டாட் காம்' என்ற மற்றொரு இணைய தளம், தாக்குதல் பட்டியலில் மும்பை தாஜ் ஓட்டலும் இடம் பெற்று இருந்த தகவலையும் வெளியிட்டுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் விசாரணை பாதிக்கக்கூடாது என்பதற்காக இந்த தகவலை வெளியிட்ட அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை. இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகளும், அமெரிக்கா இரு முறை எச்சரிக்கை விடுத்திருந்த தகவலை உறுதி செய்துள்ளனர். இந்த எச்சரிக்கையை அடுத்து ஓட்டல்கள் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன. ஆனால், உடனடியாக தாக்குதல் எதுவும் நடைபெறாததால், இந்த பாதுகாப்பு பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் இந்திய உளவு நிறுவன அதிகாரிகள், மும்பை தாக்குதலை நடத்திய லஸ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவரின் செயற்கைகோள் போன் உரையாடலை கடந்த நவம்பர் 18-ந்தேதி அன்று இடைமறித்து கேட்ட தகவலையும் அந்த இணைய தளம் வெளியிட்டுள்ளது. அந்த உரையாடலின்போதும் கடல் வழி தாக்குதல் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
மும்பை தாக்குதலின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் சிம் கார்டுகளை அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆராய்ந்ததில் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருந்துள்ள சில தொடர்புகள் பற்றியும் ஒரு செல்போன் அமெரிக்காவில் வாங்கப்பட்ட தகவலும் தெரிய வந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போன்கள், ஏற்கனவே இடைமறித்துகேட்ட உரையாடலின்போது பயன்படுத்தப்பட அதே `துராயா சேட்டிலைட்' ரகத்தை சேர்ந்தவைதான் என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. உளவு நிறுவனங்கள் இதுவரை திரட்டிய தகவல்களில் இருந்து மும்பை தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா இயக்கம்தான் காரணம் என்பது தெளிவாகிவிட்டதாகவும் அமெரிக்காவை சேர்ந்த அந்த அதிகாரி குறிப்பிட்டு இருக்கிறார்.
No comments:
Post a Comment