Sunday, December 7, 2008

மும்பை தாக்குதல்:2-இந்தியர்கள் கைது

 
 
lankasri.comமும்பையில் நவம்பர் 26முதல்29 வரை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்திய செல்போன் "சிம்" கார்டுகளை விற்பனை செய்ததாக 2-இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் காஷ்மீர் மாநிலத்தையும் மற்றவர் மேற்கு வங்கத்தையும் சேர்ந்தவர்கள்.

பயங்கரவாதிகளுடன் இவர்களுக்குள்ள தொடர்பு குறித்து அறிய மும்பை பயங்கரவாத எதிர்ப்புப்படை உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

தாஜ், டிரைடண்ட்,ஒபராய் ஆகிய ஹோட்டல்களிலும் யூதர்களின் குடியிருப்புகளிலும் புகுந்து அட்டகாசம் செய்த பயங்கரவாதிகள் பயன்படுத்திய செல்போன்களில் இருந்த "சிம்" கார்டுகளை ஆய்வு செய்ததில்,அவை கோல்கத்தாவில் விற்பனையானவை என்று தெரிந்தது.

அந்த செல்போன்களை விற்றது யார் என்று தீவிரமாக விசாரணை செய்ததில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ரெஹன்பாரி என்ற பகுதியைச் சேர்ந்த முக்தார் அகமது ஷேக் (35),தெளசீஃப் ரெஹ்மான் (26) ஆகியோர் பிடிபட்டனர்.

முக்தார் அகமது ஷேக் இப்போது கோல்கத்தாவில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு கோல்கத்தாவிலேயே வசிக்கிறார்.அங்கு சால்வை வியாபாரம் செய்கிறார்.அடிக்கடி காஷ்மீர் சென்று வருகிறார்.அவர் செல்போன் சிம் கார்டுகளையும் விற்றுள்ளார். தெளசீஃப் ரெஹ்மான் கோல்கத்தா நகரின் தில்ஜலா ரோடு என்ற பகுதியில் வசிக்கிறார்.

இந்த இருவரும் கோல்கத்தா நகரின் வெவ்வேறு செல்போன் கடைகளில் இருந்து அக்டோபர் 9முதல்11 வரை 22-சிம் கார்டுகளை வாங்கியுள்ளனர். கார்டுகள் வாங்க போலியான முகவரிகளையும் இதர ஆவணங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

தெளசீஃப்பின் இறந்த உறவினரான அஷ்ரஃப் நுமானின் வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டி 13 சிம் கார்டுகளை வாங்கியுள்ளனர். அந்த 13-ல் ஒன்றுதான் மும்பை பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.வேறு சில சிம் கார்டுகளை சிறிதளவு பயன்படுத்திவிட்டு எவர் மூலமோ கொடுத்தனுப்பியிருக்கின்றனர்.

முக்தார் அகமது ஷேக்கை தில்லியில் கைது செய்து கோல்கத்தாவுக்கு அழைத்து வந்துள்ளனர். தெளசீஃப்,ஹெளரா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.மும்பை போலீஸ் அதிகாரிகள் குழு இவர்களிடம் விரிவாக விசாரணை நடத்தும்.சிம் கார்டுகளை திட்டமிட்டே வாங்கியுள்ளனர்.

பயங்கரவாதிகள் யார் என்ற குழப்பம் போலீஸாருக்கு ஏற்பட வேண்டும் என்பதும்,அவர்களின் கவனம் திசை திரும்ப வேண்டும் என்பதும் சதிகாரர்களின் திட்டம்.அவர்களுக்குத் தெரிந்தே இவர்கள் துணை போனார்களா,வேறு ஏதாவது காரணமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

சால்வை வியாபாரம் போன்ற தொழில்கள் உண்மையா அல்லது இவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திரையா என்பதும் போகப்போகத்தான் தெரியும்.

சிம் கார்டுகள் கோல்கத்தா நகரின் பார்க் வீதியிலும் வடக்கு 24-பர்கானா மாவட்டத்தில் உள்ள பஷீர்ஹாட் என்ற இடத்திலும் தெற்கு 24-பர்கானா மாவட்டத்தில் உள்ள சந்தோஷ்பூர் என்ற இடத்திலும் வாங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு சிம் கார்டு விற்றவர்களையும் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

போலியான ஆவணங்களைக் காட்டி சிம் கார்டுகள் வாங்கியதாலும்,வசிப்பிடங்களைவிட்டு வேறு பகுதிகளுக்குச் சென்று வாங்கியதாலும்,இறந்தவரின் வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தியிருப்பதாலும் சிம் கார்டுகளுக்கு வழக்கமாகத் தரப்படும் தொகையைவிட அதிகம் கொடுத்து வாங்கியிருப்பதாலும் இவர்கள் மீது சந்தேகம் வலுக்கிறது.வெறும் அப்பாவித்தனமாக சிம் கார்டுகளை யாருக்கோ விற்றதைப்போலத் தெரியவில்லை.

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails