Wednesday, December 17, 2008

ஏழு நாட்டு இராணுவ ஆலோசகர்கள் வன்னிக் களமுனையில்

 


சிறிலங்கா வன்னி மீது பாரிய போரைத் தொடுத்திருக்கும் நிலையில் வன்னிக் களமுனைக்கு சென்று ஏழு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆலோசனைக்கான சந்திப்பில் பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் ஆலோசகர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த திங்களன்று இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

வன்னியின் களமுனைக்கு சென்று நேரடியாகப் பார்வையிட்ட இவர்கள், இந்தப் போரில் ஈடுபட்டுள்ள 57வது படைப்பிரிவு மற்றும் 59வது படைப்பிரிவு ஆகியவற்றின் தலையகங்களுக்கு சென்றும் ஆலோசனைகளை நேரடியாக வழங்கியுள்ளதாக சிறிலங்கா தரப்பு தெரிவித்துள்ளதுடன், களமுனைக்குச் சென்ற படங்களையும் வெளியிட்டுள்ளது.

சமாதானப் பேச்சுக்களின் மூலம் தீர்வொன்றைக் காணவேண்டும் என வலியுறுத்தி வரும் நாடுகள் வன்னிக் களமுனைக்கு சென்று இராணுவத்தினருக்கு ஆலோசனைகளை வழங்கிவருவது சமாதானத்தை நேசிப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா ஒரு தலைப்பட்சமாக போரில் இருந்து விலகியபோது மௌனமாக இருந்த சர்வதேசம், தற்போது அந்நாடு மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பினை நேரடியாக வழங்க முன் வந்தள்ளமையானது இலங்கைத் தீவில் பாரிய மனித அழிவுகளுக்கு வழிவகுக்கும் என மனித உரிமை வாதிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது களமுனையில் படையினர் பாரிய அழிவுகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் கை ஓங்கிவரும் நிலையில், சர்வதேசம் மீண்டும் சிறிலங்காவைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளமையும், அதற்கான முன்னடவடிகையான இந்த ஆலோசகர்களின் பயணம் அமைந்துள்ள குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamilthesiyam.blogspot.com/2008/12/blog-post_17.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails