உலக மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும் "இப்படிச் சொன்னது ஒரு தமிழ்நாட்டு தமிழறிஞரா? இல்லை! வடநாட்டு அறிஞரா? இல்லவே இல்லை! சொன்னவர் அமெரிக்க மொழியியல் ஆய்வறிஞர் நோவாம் சாம்சுகி ஆவார்! "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று தம் கல்லறையில் எழுதிவைக்கச் சொல்லி உயிர் துறந்த தமிழ்பற்றாளர் யார் தெரியுமா? தமிழகத்தில் பிறந்த தவத்திரு தமிழ்க் குடிமக்களில் ஒருவரோ? இல்லை! "என்னை அடக்கம் செய்த பிறகு கல்லறையின்மேல், 'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று நீங்கள் எழுத வேண்டும்'' என்று 1908ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் ஜி.யூ.போப் தன் விருப்பம் தெரிவித்தார்.
இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து தமிழ் கற்று பாரதியின் வாக்கை தனக்கே சொன்னதாய்க் கருதி வள்ளுவத்தை தம் மொழியில் சொல்லி வைத்த அருமைப் பாதிரியார் ஜி.யு.போப்தான் லண்டன் மாநகரில் தன் கல்லறையில் மேற்சொன்ன வாசகத்தைச் செதுக்கி வைக்கச் சொன்ன தமிழ் மாணவன். இப்படி நம் தமிழை பிறர் மெச்சி உச்சி குளிர வைப்போர் வரிசையில் இன்றைக்கு வாழும் வரலாறாக... பேரா.ஜார்ஜ் எல். ஹார்ட் (Prof.George L.Hart).
தமிழாய்விற்கு அமெரிக்காவிலிருந்து தொண்டு செய்யும் தமிழறிஞர்களுள் பேரா. ஜார்ஜ் ஹார்ட் முக்கியமானவர். அவர் சங்க இலக்கியப் பாடல்களை அருமையான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததோடு அல்லாமல் சங்க இலக்கியப் பாடல்களைச் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிப் பாடல்களோடு ஒப்பிட்டு ஆய்வும் செய்துள்ளார். இவர் பெர்க்கிலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் 1975 முதல் தமிழ்ப் பலகையில் பணியாற்றி வருகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பட்டம் பெற்று 1969 லிருந்து சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தவர். இவர் தமிழ், வடமொழி தவிர கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகளையும் கற்றவர். மலையாளம், தெலுங்கு இலக்கியங்களையும் கற்றவர். தமிழ் செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான தகுதிகள் அனைத்தும் பெற்றது என்று முழக்கமிட்டவர்.
தமிழ்மொழி பழமையான மொழி; தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்கள் நவீன இந்திய மொழிகளின் இலக்கியங்களை விட ஆயிரமாண்டுகள் பழமையானவை. சங்க இலக்கியங்கள் தமிழரின் தனித்தன்மைகளை வெளிப்படுத்தும் இலக்கியங்கள். காளிதாசரின் செவ்வியல் இலக்கியங்களுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழிலக்கியங்கள் தோன்றின. சமஸ்கிருதம் தென்னிந்தியாவில் தாக்கம் செலுத்துவதற்கு முன்னரே தோன்றியவை. எனவே தமிழ் இலக்கியங்கள் (குறிப்பாக சங்க இலக்கியங்கள்) செம்மொழி தகுதி உடையன என்று கூறினார். தமிழ் இலக்கிய மரபுகள் பிராகிருத மொழி இலக்கியங்கள் வழியாகச் சமஸ்கிருத இலக்கியங்களுக்குச் சென்றன என்கிற ஆய்வு முடிவை வெளியிட்டவர். இவரது மனைவி கௌசல்யா ஹார்ட் ஒரு தமிழர். கணவருக்குத் தமிழாய்வில் உதவிகள் செய்து வருகிறார். இவரும் பெர்க்கிலி பல்கலையில் தமிழ்த்துறையில் பணியாற்றி வருகிறார்.
"பேரா. மறைமலை அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழை உயர் தனிச் செம்மொழியாக்க வேண்டும் என்று 11,ஏப்ரல்,2000ம் ஆண்டில்"தமிழ் ஒரு செம்மொழி என நிறுவ நான் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருப்பது எனக்கு விந்தையாக இருக்கிறது. இது இந்தியா ஒரு நாடு என்பதையும் இந்து மதம் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்று என்பதையும் நிரூபிக்க வேண்டும் என்பதுபோல் இருக்கிறது.
உலகின் பெருமை வாய்ந்த செவ்வியல் மொழி தமிழ் என்பது இத்துறையில் ஞானம் உள்ளவர்கட்கு ஐயம் திரிபற வெளிப்படை. தமிழின் செம்மொழித் தகுதியைப் புறக்கணிப்பது இந்தியப் பண்பாட்டுப் பெருமையின் அதன் வளத்தின் சக்தி வாய்ந்ததும் மையமெனத் தக்கதுமான சிறப்பை இழப்பதுமாகும். தமிழின் செம்மொழித் தகுதி என்பது தமிழின் பெருமையோடு நிற்பதன்று: அது மொழி வளர்ச்சியில் இந்தியப் பண்பாடு எட்டியுளள உச்சியின் இன்னொரு சிகரம். நமது பாரத அரசு நிலைநிறுத்த முயலும் இந்தியத்துவத்தின் பெருமைக்கு இன்னொரு மகுடம்." என்று எழுதினார். அந்த முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே சுட்டுக:
http://tamil.berkeley.edu/Tamil%20Chair/TamilClassicalLanguage/TamilClassicalLgeLtr.html
பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் "தமிழ்ப் பலகை" சமீபத்தில் தனது பத்தாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. இந்தியாவில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். கிரேக்க மொழியைப் போலவே தமிழ் வளமான இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் பெற்றுள்ளது. சாதி என்பது சமயப் பழக்க வழக்கமல்ல என்று அழுத்தமாகச் சொல்லும் "தமிழ்ப் பலகை" தலைவர் பேரா.ஜியார்ஜ் ஹார்ட் 1996ல் "தமிழ்ப் பலகை" (Tamil Chair) ஒன்றைப் பெர்க்கிலி பல்கலையில் உருவாக முக்கிய காரணகர்த்தாவானவர். அவருடனான மின்காணலைக் காண செல்வோமா?
? பெர்க்கிலி பல்கலையில் "தமிழ்ப் பலகை" (Tamil Chair) ஒன்றை உருவாக்க நீங்கள் பட்ட சிரமத்திற்கு பலன் அடைந்ததாக அல்லது நோக்கம் நிறைவேறியதாகக் கருதுகிறீர்களா?
1996ல் "தமிழ்ப் பலகை" என்பது ஓர் அறக்கட்டளை. அது பெர்க்கிலியில் எங்களால் நடத்தப்படும் தமிழ்ப் பாடத்திட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு பணத்தை வழங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில், கொடுக்கப்பட்ட பணம் மாநாடுகள், மாணவர்களுக்கான ஆதரவு, மற்றும் சிறப்பு விருந்தினர்களை அழைத்தல் போன்றவற்றிற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. சற்றேறக்குறைய இன்னும் 3 ஆண்டுகளில் நான் ஓய்வு பெற்ற பிறகு, பெர்க்கிலியில் தமிழ்த்துறை (தமிழ் பீடம்) தொடர்ந்திருப்பதை உறுதி செய்யும் முக்கிய நோக்கத்தை இந்த அறக்கட்டளை கொண்டுள்ளது. பெர்க்கிலியில் நாங்கள் மேற்கொள்ளும் தமிழ்த்துறை நடவடிக்கை சிறிதளவாகவே இருந்தாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக அது எங்களின் தென்னாசிய மொழிகள் திட்டத்தின் ஒரு முக்கிய கூறாக இருந்து வந்துள்ளது. கல்வித் துறை சார்ந்த ஒரு திட்டம் நிரந்தரமாக உருவாக்கப்படுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். எங்களின் திட்டத்தின் மையமாகக் கூறாக இருப்பது தமிழ்ப்பீட அறக்கட்டளையாகும். திட்டம் வெளிப்படையாக எல்லோரும் அறியும்படி இருப்பதற்கும் திட்டம் தொடர்வதற்கு மிக அவசியமானதாகவும் இந்த அறக்கட்டளை உள்ளது.
? தாங்கள் அழகுபடுத்திக் கொண்டிருக்கும் பெர்க்கிலி தமிழ் இருக்கை பத்து ஆண்டுகள் பூர்த்தி செய்து விழா எடுக்கும் நிலையில் பெர்க்கிலி தமிழ் இருக்கை போல தமிழர்கள் அதிகம் வாழும் நியூயார்க், சிகாகோ போன்ற பிற பல்கலையிலும் தமிழ் இருக்கை அமைய தங்கள் ஆலோசனை என்ன?
உலகில் உள்ள வளமிக்க மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. அதனிடம் (மற்ற நவீன இந்திய மொழிகளைப் போல் அல்லாமல்) உண்மையிலேயே செம்மையான இலக்கியப் பாரம்பரியம் உள்ளது என்பதுடன் முக்கியமான விரிவடைந்து வரும் நவீன இலக்கியமும் உள்ளது. கிட்டத்தட்ட 7 கோடி மக்களால் பேசப்படும் மொழி அது. இருந்தாலும் கூட அது மறைக்கப்பட்ட பொக்கிஷமாகவே உள்ளது. தங்களின் பாரம்பரியம் எவ்வளவு வளமையானது என்பதை ஒரு சில தமிழர்கள் மட்டுமே அறிந்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு வெளியே மேலை நாடுகளில் கிட்டத்தட்ட அதனைப் பற்றி யாருக்கும் தெரியாது. வட அமெரிக்காவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை அல்லது தமிழ்ப்பீடத்தை அமைப்பது உண்மையில் பெரிய செயல்தான். டொறோன்டோவில் 3 லட்சம் தமிழர்கள் (பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்கள்) உள்ளனர். அவர்கள் நிச்சயமாக ஒரு விரிவான தமிழ்த் துறையை தமிழ்ப் பீடத்தை டொறோன்டோ பல்கலைக்கழகத்தில் அமைத்து அதற்கான நிதியை நிச்சயம் அவர்களால் வழங்க முடியும். வட அமெரிக்காவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை அமைத்து அவற்றிற்கு வளமூட்டுவது பெரும் பயன்மிக்க சாதனையாக இருக்கும்.
? பெர்க்கிலியில் வருடம்தோறும் நடத்தி வரும் தமிழ் விழாவில் தமிழ் அறிஞர்களளைப் பங்கேற்கச் செய்வதுண்டா?
நாங்கள் நடத்தும் மாநாட்டில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். தமிழ் மொழியில் ஆர்வம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கலந்து கொள்வதை நாங்கள் வரவேற்கிறோம்.
? தமிழ் மொழிக்கு ஏன் "செம்மொழி" தகுதி வழங்கவேண்டும் என்று 7 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருந்தீர்கள். இப்போது தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைத்திருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?
உண்மை என்ன என்றால், எந்த ஒரு நவீன தென்னாசிய மொழிகளைப் போல் அல்லாமல், தமிழ் மொழியின் மேல் உண்மையான செம்மை வாய்ந்த இலக்கியம் உள்ளது. தென் ஆசியாவின் மற்ற எந்த நவீன மொழியிடமும் சங்க இலக்கியம் போன்று ஒன்றும் இல்லை, சங்க இலக்கியம் தன் சொந்த மரபுகளைக் கொண்டுள்ளதுடன் (சமஸ்கிருதத்தில் காணப்படவில்லை) கடன் வாங்கிய சொற்கள் மிகக் குறைந்த விழுக்காட்டிலேயே உள்ளது. இதைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை ஏன் எனில் வானம் நீல நிறமானது என்ற எல்லோருக்கும் தெரிந்த உண்மையைக் கூறுவது போலத்தான் இருக்கும். எவ்வித பகுத்தறிவுக் கேள்விக்கும் அப்பாற்பட்டு, தமிழ் மொழியிடம் உண்மையான செம்மை வாய்ந்த இலக்கியம் உள்ளது.
இந்திய அரசாங்கம் இந்த உண்மையை இறுதியில் உணர்ந்து கொண்டு முடிவு செய்தது நல்ல செயல்தான். இருந்தாலும் இந்த முடிவு அரசியல் அடிப்படையில் பெரிதும் தீர்மானிக்கப் பட்டதாகத் தெரிகிறது. கன்னட மொழியின் தொடக்ககால இலக்கியம் அதன் மரபுகளையும், சொற்களையும் சமஸ்கிருதத்திலிருந்து பெற்றது என்ற போதும், இந்திய அரசாங்கம் தற்போது கன்னட மொழியையும் ஒரு செம்மொழியாக அறிவிக்க உள்ளது. அதனிடம் வளமான பாரம்பரியம் உள்ளது என்றாலும் அது ஆங்கிலம் அல்லது பிரஞ்சு மொழியை விட செம்மையான மொழியல்ல. இந்தியாவில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
? ஹார்வார்டில் இயற்பியல் படிக்கப் போய் தமிழ் படிக்க நேர்ந்தது குறித்துச் சொல்லுங்களேன்?
வேதியில் மற்றும் இயற்பியலிலிருந்து சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் துறைக்கு பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொடுத்த பல ஆண்டுகள் கழித்து மாறினேன். இப்படி மாறுவதற்கு இயற்பியல் பேராசிரியடம் கையொப்பம் நான் பெறவேண்டும். அவரிடம் என் திட்டத்தைச் சொன்ன போது நான் வேடிக்கையாகச் சொல்கிறேன் என்று நினைத்தார். ஆனால் என்னிடம் திறன்கள் இப்பினும், அவை மொழிகளைக் கற்றுக் கொள்வதில்தான் இருந்தன.
சமஸ்கிருதத்தின் மேல் நான் மிகவும் ஆழமாக ஆர்வம் கொண்டிருந்தேன். நான் ஏற்கனவே பல இந்தோ-ஐரோப்பிய மொழிகளைக் கற்றிருந்தேன். ஆகவே அவற்றுடன் தொடர்புடைய சமஸ்கிருத மொழியின் அமைப்பு முறை வளர்ச்சி குறித்து நான் வியப்புடன் கூடிய ஆர்வத்தைக் கொண்டிருந்தேன். அதன் பிறகு, நான் தமிழ் மொழியின்பால் ஈர்க்கப்பட்டேன். சமஸ்கிருதத்தைப் போலவே தமிழிடமும் மிகவும் பழமையான வளம் மிக்க இலக்கியம் இருக்கிறது.
நான் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கியதும், நான் அதன் மொழியியல் அமைப்பு முறை, சொற்றொடரியல் ஆகியவை குறித்து, அவை இந்தோ-ஐரோப்பிய முறை சார்ந்ததல்ல, என்பதால் ஈர்க்கப்பட்டேன். மற்றொன்றையும் நான் சொல்ல விரும்புகிறேன், சமஸ்கிருதத்தை விட தமிழ்தான் கணினிக்கு அதிகமான அளவில் பொருத்தமுள்ள மொழி. ஏனெனில், சமஸ்கிருதத்தில் மிகவும் சிக்கல் மிக்க இலக்கண முறை உள்ளதுடன் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விதிவிலக்குகளையும் கொண்டுள்ளது. சமஸ்கிருத மொழியின் அசாதாரணமான சிக்கல் தன்மையை விலக்கி ஆண்டது பாணினியாரின் பெரும் சாதனையாகும். அதனை அவரால் அறிவியல்பூர்வமாகச் செய்ய முடிந்தது என்பதால் அம்மொழியை இலக்கண வாய்ப்பாட்டு முறையில் தலைசிறந்ததாக ஆக்கி விடவில்லை. திராவிட மொழிகள் நேர்த்தியான, சீரான அமைப்பு முறையைக் கொண்டுள்ளன. (தமிழ் மொழியில் எண்களை எண்ணிப்பாருங்கள் அதே வேளையில் இந்தியிலும் எண்ணிப்பாருங்கள்).
? கணினியில் தமிழில் எழுத மென்பொருள் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது எதனால்? என்னவிதமான மென்பொருளை உருவாக்கினீர்கள்? தற்போது அந்தமென்பொருளை எவராவது பயன்படுத்துகிறார்களா?
தமிழுக்காக ஒருங்குறியீடு முறை செயல்படுத்தப்பட்டதுதான் இதன் தொடர்பில் ஏற்பட்ட அதிக முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும். இது தொடர்ந்து உருவாகி வரும் ஒன்று. தமிழுக்கு பல மாறுபட்ட (லிசா மற்றும் மெக்கின்டோஷில் நாங்கள் 70களில் உருவாக்கியது உட்பட) குறியீடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இணைய தளமும் வெவ்வேறான எழுத்துருக்களையும் எழுத்துக் குறியீட்டு முறையையும் பயன்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு ஆங்கில இணைய தளமும் மாறுபட்ட, அஸ்கி குறியீட்டு முறை அல்லாத எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன என்ற தோரணையில் இதுவும் செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன். முழுமையான எழுத்து ஒருங்குறியீடு முறையீடு இன்றி, கணினியில் தமிழ் பயன்பாடு பரவலாக இருக்காது.
? பெர்க்கிலி தமிழ் இருக்கையில் தமிழ் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு தமிழ்த்துறையில் ஏதும் சாதனை செய்திருக்கிறார்களா?
பெர்க்கிலி பல்கலை மணிக்கூண்டு... எங்களின் அறக்கட்டளை பல மாணவர்களுக்கு ஆதரவளிக்க எங்களுக்கு உதவியுள்ளது. காலப்போக்கில், நாங்கள் அளித்த ஆதரவின் வழி பலர் பயன் அடைந்ததுடன் அவர்கள் தங்களின் படிப்பையும் முடித்துக் கொண்டுள்ளனர்.
? 30 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எழுதிய நூலில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை இன்றைய நிலையில் உங்கள் கோணத்தில் பார்க்கும் போது இப்படி எழுதியிருக்கலாமோ என்று தோன்றியதுண்டா?
எனது அடிப்படைக் கருத்துக்களை நான் திருத்திக் கொள்ளவில்லை. மொழிபெயர்ப்புகள் நன்றாகவும் தடைகளற்ற சுமூக ஓட்டத்துடன் இருக்கும் என்று நம்புகிறேன். நான் மொழிபெயர்க்கும் போது இங்கும் அங்குமாக சில தவறுகளைச் செய்தேன். தமிழ் போன்ற மொழியை ஒருவர் பயிலும் போது, அதன் நுட்பங்களைக் காலப்போக்கில் இயல்பாக ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை மேம்படும். என்னுடைய முக்கிய பகுத்தாய்வின் முடிவு என்னவென்றால், தொடக்ககாலத் தமிழ் இலக்கியமும் மகாராஷ்டிர பிரகிருதியும் தென்னிந்திய இலக்கியப் பாரம்பரியங்களுக்கு, பல மரபுகளும் உட்பட, அதிகப் பங்களித்துள்ளன. இந்தக் கருத்துக்களை சமஸ்கிருதம் கடன் வாங்கிக் கொண்டதுடன் அனைத்து இந்தியக் கலாசாரத்தின் ஓர் கூறாக ஆகி விட்டது. பருவமழைக் காலத்தின் போது பிரிந்திருத்தல், மற்றும் தூது விடு கவிதை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
? தமிழகத்தில் இருக்கும் சாதி-மதங்களை உங்கள் பார்வையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதில் நான் என்ன சொல்ல? என் இந்திய நண்பர் ஒருவர் அண்மையில் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தார். அவர் அங்கு தலித்துகளுடன் பணியாற்றினார். அங்குள்ள பிள்ளைகள் அவரின் மனதில் ஆழமாகக் கவர்நத்துள்ளனர். அவர்கள் அசாத்திய அறிவு கொண்டுள்ளவர்களாகவும், கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவர்களாகவும் திறன் மிக்கவர்களாகவும் இருப்பதை அவர் கண்டார். ஆனால் நவீன இந்தியாவில் அரசியலும் சமூகக் கருத்துக்களும் அவர்களின் தற்போதைய நிலையை இழக்கச் செய்ய செயல்படுகின்றன. சாதி மறைந்து வரவில்லை, அரசியலுக்கு அது மையப்பொருளாக இப்போது அது வலுவடைந்து வருவதாகவே தெரிகிறது. பகுதறிவுக்குப் புறம்பான சாதி, என் நண்பர் பணியாற்றிய தலித்மக்களின் பிள்ளைக் கட்டுப்படுத்துவது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்று. மனித ஆற்றலையும் திறன்களையும் விரயப்படுத்துவதற்கு அது வழிவிடுகிறது. சாதி என்பது சமயப் பழக்க வழக்கமல்ல என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். அது சமூகப் பழக்க வழக்கம் சார்ந்தது. தமிழ் நாட்டில் எல்லா சமயங்களிலும் சாதி பாகுபாடுகள் இருப்பதைக் காணலாம்.
? வடமொழி இலக்கியத்திற்கு சரியான மாற்று இலக்கியம் தமிழில்தான் உள்ளது என்று நீங்கள் அதிக வேகத்துடன் சொல்வது குறித்து கொஞ்சம் விளக்க முடியுமா?
என்னுடைய கருத்து என்னவென்றால் சமஸ்கிருதமும் தமிழும் ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாக உள்ளன. தொடக்ககால தமிழின் தனித்தன்மை வாய்ந்த அம்சங்களில் ஒன்று என்னவென்றால் சமூக ஏணியில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் கருத்து நிலைப்பாட்டு அடிப்படையிலேயே பேசுகிறது. சமஸ்கிருதம் மேல்தட்டு மக்களின் மொழி (அதன் பெயரே "பண்பட்ட" அல்லது "உயர்ந்த" என்ற பொருள்படும்). அது தென்னாசியா மற்றும் அதற்கு அப்பாலும் (கம்போடியா மற்றும் இந்தோனேசியாவிலும் அது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது) உள்ள மக்களின் பேசும் மொழியாக ஆகியது, ஆனால் அதன் தொடக்க காலத்திற்குப் பிறகு அது கற்றோரின் மொழியாக மாறியது. அதனிடம் மிகப்பெரிய இலக்கியங்கள் உள்ளன. சமணம் மற்றும் மகாயான புத்தமதம் போன்ற பல மதங்களின் அடிப்படைப் பனுவல்களையும் உள்ளடக்கியுள்ளது.
ஆனால் தமிழ் மொழியோ பேச்சு வழக்கில் உள்ள மொழியாக இருந்தது. அதன் இலக்கியம் எப்போதுமே தமிழ் நாட்டு மண்ணில் வேரூன்றியிருந்ததைப் பிரதிபலித்தது. இது அதற்கு வளமையையும் தரத்தையும் கொடுத்தது. சமஸ்கிருதத்தையும் அதன் மேல்மட்டப் போக்கையும் பின்பற்றிய மற்ற இந்திய மொழிகளிடம் நவீன காலம் வரை தமிழிடம் உள்ள கூறுகள் இருக்கவில்லை.
? இதேபோல தமிழ் இலக்கியத்தின் விரிவு கிரேக்க இலக்கியத்தில் கூட கிடையாது என்று ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லியிருக்கிறீர்களே?
கிரேக்க மொழியைவிட தமிழ் வளமான அல்லது விரிவானது என்று நான் கூற வரவில்லை. கிரேக்க மொழியைப் போலவே தமிழ் வளமான இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் பெற்றுள்ளது. பிளாட்டோ, அரிஸ்டோட்டில், ஹெரோடோட்டஸ், துசிடைடஸ் போன்றோர் தமிழில் தொடக்ககாலத்தில் இல்லை. இருந்தாலும் சங்கத் தமிழைப் போல கிரேக்கர்களிடம் ஒன்றும் இல்லை. இரு மொழிகளுமே அதிகவளம் மிக்கவை.
? தமிழ்ப்பண்பாட்டில் நீங்கள் இன்னும் ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டிய விசயங்கள் என்று எதையாவது எண்ணியதுண்டா? தமிழ்ப்பண்பாட்டில் நீங்கள் மிக விரும்புவது எதை என்று குறிப்பாகச் சொல்ல இயலுமா?
சில சங்ககாலப் பாடல்களை நான் அனைவரும் படித்துணரக்கூடிய வழியில், நவீன தற்போதைய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்புகிறேன். மூலத்தைப் படித்தறிந்து கொள்ளும் அளவுக்கு தமிழ் மொழியை அறியாதவர்களுக்கு தமிழ் மொழியின் வளமையை வெளிப்படையாக அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும். தமிழ்ப் பண்பாட்டைப் பொருத்த அளவில் அது இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தியச் சமுதாயமும் பண்பாடும் பல பிரிவுகளைக் கொண்டது. அது தமிழ் நாட்டிற்கும் பொருந்தும். ஒரு பிராமணர் அல்லது ஒரு வேளாளருடன் ஒப்பிடுகையில் ஒரு மீனவரிடம் மிகவும் மாறுபட்ட கலாசாரமும் கருத்தும் இருக்கும். காலனித்துவ ஆட்சிக்குப் பிந்திய பல நாட்டு மக்களைப் போலவே தமிழர்களும் தங்களின் உண்மையான அடையாளத்தைக் காணத் துடிக்கின்றனர்.
அப்படி அதைச் செய்யும் வேளையில் அவர்கள் சில சமயங்களில் தங்களின் வழியை இழந்து விடுகின்றனர். உலகின் முதல் மொழி தமிழ்தான் என கற்பனை செய்கின்றனர், அல்லது இந்து சமவெளி மக்கள் தமிழ் பேசியதாகவும் நினைக்கின்றனர். அவர்கள் செய்த தவறு என்னவெனில், உலகின் மற்ற மாபெரும் இலக்கியங்களைப் போலவே தமிழ் இலக்கியமும் வாழ்வுக்கு மாபெரும் வளமாக அமைந்திருப்பதுடன் வாழ்க்கையை மேலும் வளமாக்குவதுடன் பொருள் நிறைந்ததாகவும் ஆக்குகின்றது என்பதை உணராதிருப்பதுதான்.
தமிழ் மொழியில் உள்ள மாபெரும் படைப்புக்களைப் படித்தறியாமல் தமிழை மட்டும் பேசிக்கொண்டு
வளர்ந்தார்களானால், அவர் தனக்குத் தானே இழப்பை ஏற்படுத்திக் கொள்வதுடன் தனது உலக அனுபவத்தையும் சிறப்பாகப் பெறாமல் போய்விடலாம். தமிழர்கள் அல்லாதவர்கள் அம்மொழியைக் கற்றுக்கொண்டால், அதன் வளமான இலக்கியத்திலிருந்து பெரும் பயன் அடைவார்.
?கம்பன், இளங்கோவடிகள் இவர்கள் இருவரின் படைப்பில் தங்களுக்கு மிகவும் பிடித்தது எது? ஏன்?
கம்பனைப் (கம்ப இராமாயணத்தை) படிப்பதில் நான் பல ஆண்டுகளைக் கழித்துள்ளேன். ஆனால் அதே போல் இளங்கோவைப் (சிலம்பை) படிப்பதில் அவ்வளவாகக் காலத்தைச் செலவிடவில்லை. என்னைப் பொருத்தவரை, இந்திய படைப்பாளர்களில் கம்பனே தலைசிறந்தவன். ஒரு நாகரித்தை, கலாசாரத்தை (சோழர்களின்) முழுமையாக உள்ளடக்கிய ஒரே இந்தியப் படைப்பாளர். அவ்வாறு செய்த மற்ற ஒரே ஒரு இந்தியப் படைப்பு வியாசரின் மகாபாரதமாகும், அது உண்மையில் ஒருவரால் உருவாக்கப்பட்ட படைப்பு அல்ல என்பது தெளிவு. கம்பனின் மொழிப் பயன்பாடு, சந்தம், நாடகப் படைப்பாற்றல் ஆகியவற்றை விவரிக்க இயலாது.
ஆனால், பல வகையில் சங்க இலக்கியங்களுக்குப் பின்னோக்கிச் செல்லும் உலகம் பற்றிய அடிக்கடி மாறுபடும் அவரின் கருத்து, என்னைக் குறிப்பாக அதிக ஆர்வம் கொள்ளச் செய்கிறது. எடுத்துக் காட்டாகச் சொன்னால், ராக்ஷசர்களைப் பற்றி அவரின் அசாதாரணமாக வகையில் எழுத்தோவியமாகக் காட்டுவதைக் கூறலாம். கம்பனைப் படிக்கும் எவரும் இராவணன் அல்லது சூர்ப்பனகைப் பாத்திரங்களை மதித்துப் பாராட்டவும் அவர்கள்பால் பரிவு காட்டவும் தவறுவதில்லை. அவர்கள் சாதாரண மக்களுக்கு பலவீனங்கள் உள்ள மனிதர்களைப் போல சித்தரிக்கப்படுகின்றனர். அறத்தை நிலை நாட்டுவதாக கம்பனின் படைப்பு இருந்தாலும் அது ஒரு துன்பியல் மற்றும் மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் காவியமும் கூட.
? சிலம்பில் நீங்கள் உடன்படாததாகக் கருதுவது எதை?
நவீன கருத்துக்களை பண்டைய இலக்கியப் படைப்புகள் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. உண்மையில், சிலப்பதிகாரத்தில் பெண்கள் நடத்தப்பட்ட விதத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அதேவேளையில் ஆழமான கவிதையையும் மனிதர்களின் நிலை குறித்த ஆழமான பார்வையையும் அது கொண்டிருக்கவில்லை என்று கூற முடியாது.
? அகநானூறு மொழிபெயர்ப்பில் ஈடுபட ஏதும் காரணம் உண்டா? அகநானூறில் தங்கள் சிந்தை சிலிர்க்க வைத்ததை சிலாகித்துச் சொல்ல இயலுமா?
புறநானூறு மனதை ஈர்த்துக் கட்டிப்போடும் படைப்பாகும். அதில் ஒவ்வொரு கவிதையும் என் ஆற்றலுக்குச் சவால் விடுவதாக உள்ளது. தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள பல மரபுகள் பயன்படுத்தப் பட்டுள்ளது. மரபுசார்ந்த, அலுப்புத் தட்டக்கூடிய படைப்பாக அது இல்லாமல் ஆக்குவது என்ன என்றால், ஒவ்வொரு கவிதையிலும் எதிர்பாராத கருத்தைக் கவர்கிற ஒன்றைப் புலவர்கள் சேர்ப்பதுதான். எடுத்துக்காட்டாக, பாடல் 123ல், காவிரிபூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், செல்வம் திரட்டப் பாலைவனத்தைக் கடந்து செல்வதா அல்லது தன் அன்புக்குரியவளோடு இருப்பதா என ஆடவன் தன் மனதோடு சஞ்சலத்துடன் பேசுவதை விவரிக்கிறார்:
Truly, you are pitiful, my heart -- you cannot decide
whether to bring wealth or not, and you are like the flood
that comes in with shrimps and goes out with garlands 10
in the bay where the ocean is entered by the kaviri,
too deep for poles, in the land of the generous Cholas
whose long spears rubbed with ghee have blades
that flash like lightning and whose many shields are like clouds.
நிலவு என
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந்துரை
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங் கடல் ஓதம் போல
ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே
இந்த உருவகம் மறக்க இயலாத ஒன்று.
இறால் மீன்களைக் கரைக்குக் கொண்டு வந்து கடற்கரையில் வீசப்பட்ட மாலைகளை கடலுக்குள் எடுத்துச் செல்லும் கடல் அலைகளுடன் அதுவா இதுவா என மனம் கலங்கும் மனித இதயத்துடன் ஒப்பிடுவதை யார்தான் கற்பனை செய்து பார்த்திருக்க முடியும். இந்த உருவகத்தை இன்னும் மேலும் சிந்தித்துப் பார்த்தீர்களானால் அதில் உள்ளார்ந்து கிடக்கும் நுட்பமான விஷயங்களையும் புரிந்துகொள்வீர்கள்.
No comments:
Post a Comment