முல்லைத்தீவை அண்டிய அனைத்துலக கடற்பரப்பில் கனரக ஆயுதங்களுடன் தரித்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் எங்கே சென்றது எனும் அதிர்ச்சியில் சிறிலங்கா அரசாங்கம் உறைந்து போயுள்ளதாக கொழும்பு வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
கனடாவில் இருந்து உக்ரேன் நாட்டுக்கு கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் மூன்று உறுப்பினர்கள் பயணமானார்கள். அங்கு அவர்கள் ஓரேரா விடுதியில் தம்மை பதிவு செய்து கொண்டார்கள்.
விடுதலைப் புலிகளின் பிரதம ஆயுத முகவரான கே.பி என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் அப்போது சுகவீனம் காரணமாக தாய்லாந்தில் தங்கியிருந்தார்.
எனினும் அவர் இந்த குழுவின் இருந்த பிரதி தலைவருடன் தொடர்பில் இருந்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நேரடி தொடர்பும் அவருக்கு உள்ளது. இளங்கோ என்பவரே இந்த கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
கே.பியின் உத்தரவுக்கு அமைவாகவே கனடாவில் இருந்து மூவர் வந்திருந்தனர். எனினும் அவர்களை வெளிநாட்டு உளவு அமைப்புக்கள் தீவிரமான பின்தொடர்ந்தன.
மறுநாள் அவர்கள் உக்ரேனைச் சேர்ந்த ஓய்வுபெற்ற படை அதிகாரி ஒருவரை சந்தித்து கொள்வனவு செய்ய வேண்டிய ஆயுதங்கள் தொடர்பாக பேசினார்கள்.
இவர்களின் ஆயுத பட்டியலில் 122 மி.மீ, 130 மி.மீ, 152 மி.மீ பீரங்கிகள், மோட்டார்கள், கனரக இயந்திர துப்பாக்கிகளுக்கான வெடிபொருட்கள் மற்றும் சிறிய ஆயுதங்கள் என்பன இருந்தன.
மேலும் 60 மற்றும் 70 குதிரைவலு கொண்ட வெளி இணைப்பு இயந்திரங்களையும் கொள்வனவு செய்திருந்தனர்.
ஆயுத விநியோக மையத்திற்கு சென்று அவர்கள் ஆயுதங்களையும் பார்வையிட்டனர். உக்ரேனிய படை அதிகாரி கொள்வனவுக்கான பரிந்துரைகளை மேற்கொண்டார். அதன் பின்னர் விடுதலைப் புலிகள் இரண்டு தவணைகளில் பணத்தை செலுத்தியிருந்தனர்.
கொள்வனவு உறுதியானதும், அதனை கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை அவர்கள் ஆராய்ந்தனர்.
இந்த தகவலை படையினரின் உயர்மட்ட புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
முதலில் விடுதலைப் புலிகள் வானூர்தி ஒன்றை வாடகைக்கு அமர்த்தவே முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அது கைகூடாததனால் அவர்கள் கப்பல் ஒன்றை வாடகைக்கு பெற்று கொண்டனர். அல்லது அது அவர்களின் சொந்த கப்பலாகக் கூட இருக்கலாம்.
உக்ரேனில் உள்ள ஆயுத விநியோக மையத்திற்கு செல்வதற்கு ஏற்றது போல கப்பல் மறுசீரமைக்கப்பட்டு ஆயுதங்கள் ஏற்றப்பட்டு அது சிறிலங்கா நோக்கி புறப்பட்டது.
சிறிலங்கா நோக்கிய பயணத்தின் போது கப்பல் பல தடவைகள் கொடிகளையும், பெயரையும் மாற்றி கொண்டது.
கப்பல் முல்லைத்தீவுக்கு அண்மையான அனைத்துலக கடற்பரப்பை அடைந்து நங்கூரம் பாய்ச்சி நின்றதும் அதில் இருந்த பொருட்கள் 40 மீற்றர் நீளமான றோலர்களில் இறக்கப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று சிறிலங்காவுக்கு தகவல்களை வழங்கியிருந்தது.
அதன் பின்னர், சிறிலங்கா கடற்படையினரும், வான் படையினரும் மேற்கொண்ட இணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது றோலர் கண்டறியப்பட்டது.
விடுதலைப் புலிகள் சிறிய படகுகளிலும் பொருட்களை இறக்கியிருந்தனர். எனினும் கடற்படையினரின் புலனாய்வுத்துறையின் பலவீனம் காரணமாக விடுதலைப் புலிகளின் பிரதான கப்பலை கண்டறிய முடியவில்லை.
No comments:
Post a Comment