"நாம் ஒருபோதும் எமது மண்ணையும் எமது மக்களையும் விட்டு ஓடப்போவதில்லை" என தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியுள்ளார். லக்பிம நியூஸ் ஆங்கில பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். செவ்வியின் ஒரு பகுதியை இங்கு தருகிறோம்.
"உங்கள் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு செல்லப்போவதாக வதந்தி உலவுகிறது. உங்கள் சகாக்களை விட்டுச் செல்ல நீங்கள் முயற்சிக்கிறீர்களா?" என கேட்கப்பட்டபோது "இவை அனைத்தும் இலங்கை அரச ஊடகங்கள் நடத்தும் முற்றிலும் பொய்யான பிரசாரங்கள் மாத்திரமே. நாம் ஒரு போதும் எமது மண்ணைவிட்டு செல்லமாட்டோம். மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக இறுதிவரை போராடுவோம்" என பிரபாகரன் பதிலளித்துள்ளார்.
நீங்கள் நாளுக்கு நாள் வயதாகி வருகிறீர்கள். ஆனால் ஈழம் இன்னும் கைகூடவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த பிரபாகரன், எமது போராட்டம் ஒரு சுதந்திர போராட்டமாகும். எமது சுதந்திர போராட்டத்திற்கு கால எல்லையோ வயது எல்லையோ கிடையாது எனக் கூறியுள்ளார். கிளிநொச்சியை சில தினங்களில் இராணுவம் கைப்பற்றிவிடும் என்ற கருத்து தொடர்பாக பதிலளிக்கையில் "எமது போராட்ட வரலாற்றில் இதைவிட பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்கும் இலங்கை அரசின் பிரசாரத்திற்கும் முகம் கொடுத்துள்ளோம்.
நாம் யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வன்னி பிரதேசத்திற்கு வந்தபோது எம்மால் மீண்டும் ஒருபோதும் பாரம்பரிய இராணுவமாக செயற்பட முடியாது என இலங்கை அரசுபெரும் பிரசாரம் மேற்கொண்டது. ஆனாலும் அதன்பின் ஓயாத அலைகள் 1, 2 மற்றும் 3 மூலம் முல்லைத்தீவு, ஆனையிறவு மன்றும் வன்னியின் பெரும்பகுதியை கைப்பற்றினோம். தற்போது நாம் விரைவில் கிளிநொச்சியை இழந்துவிடுவோம் என இலங்கை அரசு பிரச்சாரம் செய்கிறது.
எவ்வாறெனினும் கடந்த சில நாட்களில் கிளிநொச்சியில் நடைபெற்ற மோதல்களில் இலங்கை இராணுவம் சந்தித்த பாரிய இழப்புகள் புலிகளின் எதிர்கால வெற்றியை வெளிப்படுத்துகிறது " எனக் கூறியுள்ளார்.
உங்கள் பயங்கரவாத செயற்பாடுகளை விரும்பாததால்தான் சர்வதேச சமூகம் உங்களை கைவிட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் அனைத்தையும் உங்களால் தோற்கடிக்க முடியாது அல்லவா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், எமது போராட்டம் நேர்மையான போராட்டம் என சர்வதேச சமூகம் இப்போது புரிந்துகொண்டுள்ளது. நாம் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. மக்களை இலக்கை வைத்து விமான குண்டுவீச்சுகளை மேற்கொள்வது மற்றும் அவர்களுக்கு பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லையென்றால் மக்களை பாதுகாப்பதற்காகவும் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைகளாகுமா என சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். இதை புரிந்துகொள்ளுமாறு சிங்கள மக்கள் உட்பட முழு சர்வதேச சமூகத்தையும் நாம் கோருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கத்தன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியமை குறித்து தற்போது என்ன நினைக்கிறீர்கள். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரால் உங்கள் இயக்கத்திற்கு பணம் வழங்கப்பட்டதால்தான் அத்தேர்தலை பகிஷ்கரித்தீர்கள் எனக் கூறப்படுகிறது என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கையில், மக்கள் தாமாகவே தேர்தலை பகிஷ்கரித்தனர். மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கிறோம். மக்கள் தேர்தலை பகிரஷ்கரித்தமை தொடர்பாக பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எமது விடுதலைப் போராட்டம் நேர்மையான போராட்டமாகும். பணம், லஞ்சம் மற்றும் பதவி போன்றவற்றினால் அதை ஒழிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.



No comments:
Post a Comment