Friday, December 19, 2008

மொஹாலி டெஸ்ட்:முதல்நாளில் இந்தியா

மொஹாலி டெஸ்ட்:முதல்நாளில் இந்தியா-179/1
இங்கிலாந்து அணிக்கு எதிராக மொஹாலியில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.கம்பீர் 106 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இன்று துவங்கிய இப்போட்டியில் பூவா-தலையா வென்ற இந்திய அணி பேட் செய்ய முடிவு செய்ததைத் தொடர்ந்து துவக்க வீரர்களாக சேவாக்,கம்பீர் களமிறங்கினர்.

சென்னையில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு வித்திட்ட வீரேந்தர் சேவாக்,இன்றைய போட்டியிலும் தனது அதிரடியைத் தொடருவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில்,அவர் ரன் எதுவும் எடுக்காமல் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.

கடந்த சில டெஸ்ட் போட்டிகளாக தொடர்ந்து ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்து வந்த திராவிட்,இன்றைய போட்டியில் 2வது அல்லது 3வது விக்கெட்டுக்கு களமிறக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி இருந்தாலும்,அவர் வழக்கம் போல் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கினார்.

இந்திய அணி 6 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்த நிலையில் ஜோடி சேர்ந்த கம்பீர்-திராவிட் இணை துவக்கத்தில் ஆமை வேகத்தில் ரன் சேகரித்தாலும்,உணவு இடைவேளைக்கு பின்னர் சுமாராக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது.

தேநீர் இடைவேளைக்கு முன்பாகவே திராவிட் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். தேநீர் இடைவேளைக்குப் பின்னர் கௌதம் கம்பீர் தனது 4வது டெஸ்ட் சதத்தை அடித்தார்.

முதல் நாளில் 72 ஓவர்கள் நிறைவடைந்திருந்த நிலையில்,போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தை நிறுத்துவதாக நடுவர்கள் அறிவித்தனர். அப்போது கம்பீர் 106 ரன்கள்,திராவிட் 65 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1229703314&archive=&start_from=&ucat=4&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails