Thursday, December 11, 2008

இந்திய அரசியலில் முன்னுக்கு வரவேண்டுமென்றால்

இந்திய அரசியலில் முன்னுக்கு வரவேண்டுமென்றால், கட்சித் தலைவரைத் `திருப்தி' செய்யவேண்டும்! அவர் சந்தோஷப்படும்படி நடந்துகொள்ள வேண்டும். மனசாட்சியை ஒதுக்கி வைத்துவிட்டுக் கட்சித் தலைவரின் `கொள்கைகளுக்கு'த் தலையாட்ட வேண்டும்.

எந்த மேடையில் பேசினாலும் தலைவரை வானளாவப் புகழவேண்டும். வழியைப் பற்றிக் கவலைப்படாமல், கட்சி நிதிக்குப் பணம் சேர்த்துத் தரவேண்டும். உங்கள் பிறந்தநாளாக இருந்தாலும், தலைவரின் பிறந்தநாளாக இருந்தாலும் தலைவருக்குப் `பெரிய அளவில்' ரூபாய் நோட்டுக்களாலான மாலையை அவருக்கு அணிவித்து, அவரது `ஆசி'யைப் பெறவேண்டும்.

சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் கட்சித் தலைவரின் `திருவடிகளில்' சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவேண்டும். அவரது கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டால் மிகவும் நல்லது. தலைவரின் திருக்கண் பார்வை உங்கள் மீது படும்போது, அளவற்ற மரியாதையினால் உங்கள் உடல் உங்களையும் அறியாமல் கூனிக்குறுகி நெளிய வேண்டும். அதாவது, அந்த அரசியல் தலைவரின் கண் பார்வை படுவதற்கு நீங்கள் மகத்தான பாக்கியம் செய்திருப்பதாக நீங்கள் உணர்வதை அவருக்கு வெளிப்படுத்தவேண்டும்! பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.

அரசியலில் உறுதியாக வெற்றி பெற இத்தகைய `உன்னதமான' வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்க நம் நாட்டில் பள்ளிகள் இல்லை. ஆதலால், உங்கள் கணவரிடம் சொல்லி இவ்வழிமுறைகளைப் பின்பற்றி இன்று `நல்ல' பதவிகளில் அமர்ந்துள்ள `அரசியல் பட்டதாரிகளிடம்' சீடனாகச் சேர்ந்து கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். எவ்வளவு சீக்கிரம் இதில் தேர்ச்சி பெறுகிறாரோ, அவ்வளவு சீக்கிரத்தில் அவர் எந்த அளவிற்கு உயர்ந்த பதவிகளை அவர் அடைவார் என்பது அவரது `திறமை'யைப் பொறுத்தது. அரசியல் வெற்றிக்கு இது ஒன்றே தக்க `பரிகாரம்' ஆகும்.

நன்றி : குமுதம் ஜோதிடம்
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails