Thursday, December 25, 2008

இரத்தத்தால் எழுதப்படும் வெற்றிகளும் - எழுதப்படாமலே அழிந்துபோகும் மனித அவலங்களும்

 

 

நாட்டின் வரலாற்றிலேயே என்று மில்லாதவாறு இரத்தம் தோய்ந்த ஒரு காலகட்டத்தினுள் புலிகளுக்கெதிரான அரசாங்கத்தின் யுத்தம் சென்று கொண்டிருக்கிறது. எல்லா வகையிலும் அதிகவிலை கொடுத்து மேற்கொள்ளப்படும் இந்த யுத்தம் அனைத்து இளஞ் சந்ததிக்கும் ஒரு மாறாத வடுவாக அமையப் போகிறது.

அதனை காலாநிதி றொகான் எம்.ஜயதுங்க மேற்கொண்ட ஆய்வு வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவ்வாய்வு இராணுவத்துக்குள்ளிருக்கும் பல பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதுவும் குறிப்பாக 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற கடுமையான மோதல்களுக்குப் பின்னர் 6 படைப்பிரிவுகளைச் சேர்ந்த 1200 படையினர் கொல்லப்பட்டதன் பின்னரான நிலைமைகளை, படையினர் முகங்கொண்ட நெருக்கடிகளை அது வெளிப்படுத்துகிறது. 

விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் Post-Traumatic Stress Disorder (PTSD)  என்கிற உளநெருக்கீட்டு நோய் அவர்களைப் பெருமளவில் பாதித்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் மொத்தப் படையினருள் வடக்கு கிழக்கில் மோதலில் ஈடுபட்ட படையினரே இவ்வாறான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

போர் அழுத்தம் தொடர்பான உளவியல் முகாமைத்துவம் என்ற தலைப்பில் இலங்கைப் படையினரிடையே இவ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 2001ஆம் ஆண்டு  வரை 17ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுவாரசியம் என்னவென்றால் அக்காலப்பகுதிவரை அதேயளவான விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது தான். ஏறத்தாழ ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில்.

மோதலில் 2008 ஆம் ஆண்டு இற்றைவரை 9000 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவிக்கிறது. 350 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நான்காவது ஈழப்போரில் இதுவரை 10500 உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 25 வருடகால யுத்தத்தில் ஒரே வருடத்தில் ஆகக் கூடுதலானோர் கொல்லப்பட்டது இவ்வருடத்தில் தான்.

இராணுவம் தனது இழப்புக்கள் பற்றிய விபரங்களையும் புலிகளின் இழப்புக்கள் பற்றிய விபரங்களையும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடுவதில்லை என முடிவு செய்த ஒக்ரோபர் மாதம் வரையானவை தான் இந்தப் புள்ளிவிபரங்கள் என்பதை நாங்கள் ஞாபகத்தில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும்.

எவ்வாறிருந்த போதும் கடந்த மாதம் புலிகளுக்கெதிராக கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக சுற்றிவளைத்து இராணுவம் மேற்கொண்ட கடுமையான மோதலில் இரண்டு தரப்பினரும் பாரிய இழப்புக்களை சந்தித்திருக்கின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே. இம்மோதல்கள் கிளிநொச்சியைச் சூழவும் முகமாலையிலும் இடம்பெற்றிருந்தன.

ஒரு குரூரமான சந்தர்ப்பத்தில் நவ.15 தொடக்கம் 18 வரையான மூன்று நாட்கள் மட்டுமே இடம் பெற்ற மோதலில் 200க்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாக டிபென்ஸ் வாச்இன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் வேறெந்த மாதத்திலும் 200 மேற்பட்ட படையினரை இராணுவம் இழந்திருந்ததாக அரசாங்கம் அறிவித்திருக்கவி;ல்லை.  

வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்புக்கு வந்ததாலும் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக அரசாங்கம் விதித்த காலக்கெடு பல தடவைகள் தவறிப் போனதாலும் நவம்பர் மாதத்தில் அரசாங்கம் வலிந்து மோதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

1994இலிருந்து மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை கிடைக்கக் கூடிய தகவல்களை வைத்துப் பார்க்கும் போது 25 வருடங்களாக நடைபெறும் இந்தப் போரில் இவ்வருடம் தான் இரத்தம் தோய்ந்த காலமாக இருக்கப் போகிறது.

இதற்கடுத்தாக மோசமான காலப்பகுதியாக இருந்தது 1995ஆம் ஆண்டு. அது யாழ்ப்பாணத்தை இராணுவம் மீளக் கைப்பற்றும் போதானதாக இருந்தது. இதன்போது படையினரும் புலிகளுமாக ஏறத்தாழ ஐயாயிரம் பேர் கொல்லப்பட்டனர். நவ 2008இல் மட்டும் இதனிலும் அரைவாசிப் பேர் கொல்லப்பட்டனர். இராணுவத்தின் இழப்புக்கள் ரொக்கெட் வேகத்தில் அதிகரித்தன. ஜனாதிபதி மகிந்த ராஜாபக்சவின் பிறந்த தினமும், அதற்கு சற்றுப் பின்னர் இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல.   

போரால் பெண்களும் குழந்தைகளும் இவ்வாண்டு மிகுந்த துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர். இதில் முக்கியமானது என்னவென்றால் அரசாங்கம் இந்தப் போரில் ஏற்படும் மனித உயிரிழப்புக்களை மறைத்து ஊடகங்கள் எதை வெளியிட வேண்டும் என்று கட்டுப்படுத்துவது தான்.

எவ்வாறிருந்த போதும் அரசாங்கம் படைக்கு ஆட்களைச் சேர்ப்பதற்காக வெளியிடும் விளம்பரங்களில் உள்ளதைப் போல போர் கவர்ச்சிகரமானதல்ல என்பதை வெளியிடப்படாத அந்த அறிக்கை புலப்படுத்துகிறது.

இந்தப்பிரச்சாரத்துள் தமது அன்புக்குரியவர்களை இழந்து ஏங்கும் குடும்பங்களின் துயரம் அமிழ்ந்து விடுகிறது. அத்தோடு படையினரின் மன அழுத்தங்கள் பற்றியும் ஒருபோதும் அது பேசுவதில்லை. 

அவ்வறிக்கை 32 வயதான லான்ஸ் கோப்ரல் ஒருவரின் அனுபவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு படைவீரன் நிலக்கண்ணிவெடியில் அகப்பட்டுச் சாகிறான். ஒரு சிறு காயமும் இல்லாமல் ஒருவாறு இவர் தப்பி விடுகிறார். தன்னுடைய நண்பன் எவ்வாறு அந்தக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டான் என்பதை அவர் நேரடியாகத் தனது கண்களால் கண்டார். பின்னர் அவரிடம் கண்டதெல்லாம் நம்பிக்கையீனம், தன்னைத் தானே வைது கொள்ளல், குற்றவுணர்வு, ஆழ்ந்த துயரம், மரண இழப்பு. அவர் இவற்றால் பீடிக்கப்பட்டவரானார். 

இன்னுமொரு படைவீரர் தனது உற்ற நண்பர் சினைப்பர் தாக்குதலில் கொல்லப்படுவதைக் காண்கிறார். அவர் இறந்து விட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டதும் உடலை புதைத்துவிடுமாறு பணிக்கப்படுகிறார். ஆனால் அந்த உடல் தொடும் போது இன்னமும் கணகணப்பாக இருந்தது. அவரால் நண்பனது உடலைப் புதைக்க முடியவி;ல்லை. இருந்தாலும் உயரதிகாரியின் உத்தரவுக்கிணங்க புதைக்கிறார்.

சில வருடங்களுக்குப் பின்னரும் தான் தனது நண்பனை உயிருடன் புதைத்துவிட்டதாக அவர் தர்க்கபூர்வமற்று வருந்திக் கொண்டிருந்தார் என, அந்த அறிக்கை அப்படைவீரரின் உள நெருக்கடியைப் பற்றிச் சொல்கிறது.

இவ்வறிக்கை படையினரின் இவ்வாறான ஏராளமான உளநெருக்கடிகளைக் குறிப்பிடுகிறது. அவர்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை கீர்;த்தி மிக்கதாக சொல்லப்படுவது போல அறப்போருக்குரியதாக இல்லை.
ஏழு படையினர் எதிரியின் மோட்டார் வந்து விழுந்து வெடித்ததில் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த ஒரு லெப்டினன்ட் மிகவும் உளப்பாதிப்புக்குள்ளானார். ஒரு காலை இழந்த சார்ஜன்ட் மிகுந்த வன்முறையாளனாக மாறினார். 20 வருடங்களாகப் படையில் கடமை புரிந்த ஒரு கப்டன் பின்னர் இந்த சிவில் சமூகத்தில் பொருந்தி வாழ முடியாதவராக ஆளானார்.

இவ்வாறான பல கதைகள் இந்த ஆய்வறிக்கை எங்கும் விரவிக் கிடக்கின்றன. இந்த உதாரணங்கள் எல்லாம் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கானவை. இவை எல்லாமே 2008 ஆம் ஆண்டின் இந்த யுத்தத்தை ஒரு மிக மோசமான யுத்தம் என்று விளக்குபவை. 
களத்தில் படையினர் மிகவும் களைப்புற்றுள்ளனர். நீடித்த யுத்தம் பாரிய அளவில் உள நெருக்கடியால் அவர்களை அவதியுற வைக்கிறது. வடக்கு கிழக்கில் கடமையாற்றும் அல்லது கடமையாற்றிவிட்டு வந்த படையினரே இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இறந்தவர்களின் உடலைக் கையாளுதல், களத்தில் நண்பர் ஒருவரை இழத்தல், நன்கு தெரிந்தவர் கொல்லப்படுவதைப் பார்த்தல் போன்ற பல காரணங்கள் இதற்குக் காரணமாக அமைகின்றன. இது மனநலப்பிரச்சினைகளை அதிகரித்து விடுகிறது.

இது தெற்கில் என்றால் வடக்கில் இந்த 2008 ஆம் ஆண்டில் மட்டும் 14000 கிலோ தொன்கள் நிறையுடைய குண்டுகள் விமானத்திலிருந்து போடப்பட்டுள்ளன என்கிறார் டிபென்ஸ் வாச் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் போரால் உடல் ஊனமானோர் 2100 பேர் இருப்பதாக அரசாங்க செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

உடல்சிதறிப் பலியாகும் மரணங்களையும் தமது அன்புக்குரியவர்களின் இழப்புக்களையும், எந்த நேரமும் வானிலிருந்து குண்டு வந்து விழலாம் என்று அச்சத்துள் வாழ்ந்திருப்போரையும் எதிர்காலமே நிச்சயமற்று ஏங்கும் மக்களையும் உள நெருக்கடி எப்படிப் பாதித்திருக்கும்? எவ்வாறு அவர்களது உள நலம் சிதைந்திருக்கும்?

காணாமல்போன தமது கணவனையொ மகனையோ மகளையோ தேடி அந்த உள்ளங்கள் எவ்வாறு வருந்திக் கொண்டிருக்கும். அது எவ்வாறான உளநெருக்கடியை அவர்களில் உருவாக்கும்?  குறிப்பாக பெண்களதும் சிறுவர்களதும் உளநெருக்கடி எத்தகையதாக இருக்கும் எதிர்காலச்சந்ததியில் என்னென்ன தாக்கங்களை விளைவிக்கும்?
 

சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய தருணமிது!
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails