Tuesday, December 30, 2008

ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா
lankasri.comமெல்பர்னில் நடந்து வந்த 2வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி.16 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்ட்ரேலியா தொடரை இழந்துள்ளது.தென் ஆப்ரிக்கா அணி ஆஸ்ட்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்து வந்தது. பூவா தலையா வென்ற ஆஸ்ட்ரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கேட்டிச் 54 ரன்னும், அணித் தலைவர் பாண்டிங் அபாரமாக விளையாடி 101 ரன்னும், கிளார்க் 88 ரன்னும் பிராட் ஹட்டின் 40 ரன்களும் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொல்லும் அளவுக்கு விளையாடவில்லை. இதனால் முதல் இன்னிங்சில் ஆஸ்ட்ரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 394 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்ரிக்கா தரப்பில் ஸ்டெய்ன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நிடினி 2, காலிஸ், மோர்கெல், ஹரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது தென் ஆப்ரிக்கா அணி. அந்த அணியின் தொடக்க வீரர் மெக்கன்ஸி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரரும் அணித் தலைவருமான ஸ்மித் அபாரமாக விளையாடி 62 குவித்து ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து விளையாட வந்த அம்லா (19), காலிஸ் (26), டிவில்லியர்ஸ் (7) ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

ஒரு கட்டத்தில் தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்து தவித்துக் கொண்டிருந்தது. ஆனால் டும்னிக்கின் அபார ஆட்டத்தால் தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 459 ரன்கள் குவித்தது. இது ஆஸ்ட்ரேலிய அணியை விட 63 ரன்கள் அதிகம் ஆகும்.

ஆஸ்ட்ரேலியாவின் பந்து வீச்சை சிதறடித்த டும்னிக் 166 ரன்கள் குவித்தார். இவருக்கு பக்கபலமாக இருந்த ஸ்டெய்ன் 76 ரன்கள் குவித்தார்.

பின்னர் தனது 2வது இன்னிங்சைத் தொடர்ந்த ஆஸ்ட்ரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஹைடன் 23, கேட்டிச் 15 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

பின்னர் அணித் தலைவர் பாண்டிங்கின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்ட்ரேலியா அணி ஓரளவு ரன்கள் எடுத்தது. 99 ரன் எடுத்திருந்தபோது பாண்டிங் மோர்கெல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

பந்து வீச்சாளர் ஜான்சன் 43 ரன்கள் குவித்தார். ஆனால் முக்கிய பேட்ஸ்மென்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது அணியை பாதாளத்துக்கு கொண்டு சென்றது. முடிவில் ஆஸ்ட்ரேலியா அணி 247 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

தென் ஆப்ரிக்கா பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மோர்கெல், காலிஸ் தலா 2 விக்கெட்டும், நிடினி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் ஆஸ்ட்ரேலியா அணி தென் ஆப்ரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 183 ரன்கள் நிர்ணயித்தது.

தொடக்க வீரர் ஸ்மித் அபாரமாக விளையாடி 75 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் மெக்கன்ஸி 59 ரன்னும், அம்லா 30 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர். முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

10 விக்கெட் வீழ்த்திய ஸ்டெய்ன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

16 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணிலேயே ஆஸ்ட்ரேலியா அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails