|
|
ஆந்திராவில் மாணவிகள் மீது ஆசிட்வீசிய 3 மாணவர்களை போலீசார் நேற்று இரவு "என் கவுண்டர்" மூலம் சுட்டுக் கொன்றனர்.ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தசம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-ஆந்திர மாநிலம் வாரங்கலில் உள்ள "ஹிட்ஸ்" என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருபவர்கள் சுவப்னிகா,பிரனிதா. இதே கல்லூரியில் 6-மாதத்திற்கு முன்பு படித்து வந்தவர் சீனிவாசராவ். இவர் சுவப்னிகாவை ஒருதலையாக காதலித்து வந்தார். சுவப்னிகாவை தன் வலையில் வீழ்த்துவதற்காக சீனிவாசராவ் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுத்தார். ஆனால் சுவப்னிகா சீனிவாசராவை காதலிக்க மறுத்தார்.அவர் அதே கல்லூரியில் படிக்கும் கார்த்திக் என்ற மாணவனுடன் நெருங்கிப் பழகினார்.இது சீனிவாசராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கடந்த அக்டோபர் மாதம் சுவப்னிகாவை தனிமையில் சந்தித்த சீனிவாசராவ் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தினார். ஆனால் சுவப்னிகா "உன்னை எனக்கு பிடிக்கவில்லை" என்று கூறினார். அதற்கு சீனிவாசராவ், "நீ காதலிக்காவிட்டால் உன்னை ஆசிட் வீசி கொலை செய்வேன்" என்று மிரட்டி விட்டு சென்றார்.இதனால் பயந்து போன சுவப்னிகா, சீனிவாசராவின் கொலை மிரட்டல் பற்றி தந்தை தேவேந்தரிடம் தெரிவித்தார்.இதையடுத்து அவர் சீனிவாசராவ் மீது வாரங்கல் போலீசில் புகார் செய்தார். இதையறிந்ததும் ஆத்திரம் அடைந்த சீனிவாசராவ் அக்டோபர் 5-ந்தேதி தேவேந்தரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசராவை கைது செய்தனர்.ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் விடுதலையானார். தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய சுவப்னிகாவை பழி வாங்கத் திட்டமிட்டார். இது பற்றி தனது சகோதரர் சிவப்பிரசாதராவ்,வேறு கல்லூரிகளில் படிக்கும் தனது நண்பர்கள் அரி கிருஷ்ணா,சஞ்சய் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர்கள் சுவப்னிகாவின் முகத்தை ஆசிட் வீசி சிதைத்து விடுவோம் என்று கூறினார்கள்.அதற்கு சம்மதித்த சீனிவாசராவ் வாரங்கலில் உள்ள கெமிக்கல் கடைக்கு சென்று "சல்பி யூரிக்" ஆசிட்டை வாங்கினார். சீனிவாசராவும்,அவரது நண்பர்களும் மாமனூர் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு ஹிட்ஸ் கல்லூரி வந்தனர்.கல்லூரி முடிந்து சுவப்னிகா,தனது தோழி பிரனிதாவின் இரு சக்கர வாகனத்தில் ஏறினார். அப்போது பிரனிதா ஹெல்மட் அணிந்திருந்தார். 2 பேரும் கல்லூரியில் இருந்து சிறிது தூரம் சென்றதும் 4 மாணவர்களும் அவர்களை மோட்டார்சைக்கிளில் விரட்டிச் சென்று வழி மறித்தனர். பின்னர் தயாராக வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சீனிவாசராவ்,அரிகிருஷ்ணா இருவரும் மாணவிகள் மீது வீசினர். இதில் இருவரது முகமும் வெந்து போனது. அலறியபடியே மயங்கி கீழே விழுந்தனர். அவர்களை அந்த வழியாக வந்த பொதுமக்கள் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆசிட்பட்டத்தில் சுவப்னிகாவின் உடல் 60 சதவீத அளவுக்கு வெந்து போனது. இதனால் அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரனிதா ஹெல்மட் அணிந்திருந்ததால் லேசானகாயம் அடைந்தார். இச்சம்பவம் பற்றி அறிந்ததும் ஆந்திராவில் உள்ள மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. "ஆசிட்" வீசிய மாணவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறி தொடர் போராட்டத்தில் குதித்தனர். "பிரஜா ராஜ்யம்" கட்சித்தலைவர் சிரஞ்சீவி,அவரது சகோதரர் பவன்கல்யாண் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிகளைப் பார்த்து ஆறுதல் கூறினார்கள். அவர்கள் கூறும்போது, "மாணவிகள் மீது ஆசிட் வீசியவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும். இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் அரசு தடுக்க வேண்டும்" என்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகள் சுவப்னிகா,பிரனிதாவை பார்க்க நேற்று உள்துறை மந்திரி ஜானாரெட்டி வந்தார். அவரை மகளிர் அமைப்புகளை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு மாணவிகள் மீது ஆசிட் வீசியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தினர். அவர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகே பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் விசுவரூபம் எடுத்ததால் மாணவர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில் 4 மாணவர்களும் மாமனூர் என்ற இடத்தில் பதுங்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருடிய இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக 4 மாணவர்களையும் மாமனூருக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மாணவர்கள் திடீரென தனிப்படை போலீசார் மீது "ஆசிட்" வீசி விட்டு தப்ப முயன்றனர். உடனே போலீசார் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் சீனிவாச ராவ்,அரிகிருஷ்ணா,சஞ்சய் ஆகியோர் மீது குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே 3 மாணவர்களும் பலியானார்கள். தப்பி ஓட முயன்ற சிவபிரசாதராவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதுபற்றி வாரங்கல் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, "தனிப்படை போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால் 3 மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.இதில் அவர்கள் இறந்து போனார்கள்" என்றார். |
No comments:
Post a Comment