Tuesday, January 6, 2009

கிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இடிந்த கட்டடங்கள்; நாய்களும் கால்நடைகளுமே அங்குள்ளன: அங்கு சென்று திரும்பிய செய்தியாளர்

 

  

கிளிநொச்சியை சுற்றியுள்ள பகுதிகள் அச்சம் தரும் வகையில் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அங்கொன்றும் இங் கொன்றுமாகக் காணப்படும் கட்டடங்கள் ஷெல் வீச்சினால் முற்றிலுமாக சிதறடிக் கப்பட்டுள்ளன என இலங்கை இராணுவத்தால் ஞாயிற்றுக்கிழமை அங்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஏ.பி. செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

விடுதலைப் புலிகளின் முக்கிய நகரமாக விளங்கிய கிளிநொச்சியூடாகச் செல்லும் ஏ 9 பாதை முற்றாக வெறிச்சோடிக் காணப்படுகின்றது. சில நாய்கள், கால்நடைகளைத் தவிர வேறு எதனையும் அங்கு காணமுடியவில்லை.

கிளிநொச்சியைக் கைப்பற்றிய இரு நாட்களுக்குப் பின்னர் புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்கு இலங்கை அரசு தமது வெற்றியைக் காண்பிப்பதற்காகப் பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்றது.

கிளிநொச்சியைச் சுற்றியுள்ள பகுதிகள் அச்சம் தரும் வகையில் வெறிச்சோடிக் கிடக்கின்றன. வீதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படும் வீடுகள் ஷெல் வீச்சினால் முற்றாகத் தகர்க்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் நிலக்கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் ஏ 9 வீதியிலும் விடுதலைப் புலிகள் விட்டுச் சென்ற பொறிவெடி நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மீண்டும் மோதல் வெடிப்பதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் காடுகளுக்குள் தப்பிச் சென்றுள்ளனர்.

ஒன்றரை வருடங்களாக சுயாதீன பத்திரிகையாளர்கள் இப்பகுதிக்கு வருவதற்கு அரசு தடை விதித்து வந்தது. தற்போது தனது வெற்றியைக் காண்பிக்க அவர்களை அழைத்து வந்துள்ளது.

விடுதலைப் புலிகளிடம் உள்ள நிலப்பரப்புகள் குறைவடைகின்றன. அவர்களது எண்ணிக்கையும் வீழ்ச்சியடைகின்றது. யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரும் இலக்கை எய்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்கிறார் அங்கு படையினரை வழிப்படுத்தும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்.
கிளிநொச்சி மோதலிற்கு இவரே தலைமை தாங்கினார் என்று கூறப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களிடம் விடுதலைப் புலிகள் அமைத்திருந்த 17 கிலோமீற்றர் நீள பாதுகாப்பு அரண்களை இராணுவத்தினர் காண்பித்தனர்.

ஒன்றரை மீற்றர் அகலமும் 2 மீற்றர் ஆழமும் உள்ள அந்தப் பதுங்குகுழிகள் நீரும் எறிகணைப் பாகங்களும் நிறைந்து காணப்பட்டன.
அதற்குப் பின்னால் 2 மீற்றர் உயரமும் 5 மீற்றர் ஆழமும் கொண்ட மண் அரண்கள் காணப்பட்டன.

கிளிநொச்சியைப் பாதுகாப்பதற்கு விடுதலைப் புலிகள் கடுமையாகப் போராடினர் என டயஸ் தெரிவித்தார். கிளிநொச்சிக்குள் நுழைவது மிகவும் கடினமாக இருந்தது. விடுதலைப் புலிகளின் மண் அரண்களைக் கைப்பற்ற ஒன்றரை மாதம் பிடித்தது என்றார்
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails