Saturday, January 3, 2009

பெண்ணியமும் இஸ்லாமும்

 

image001 

    தோழர் நந்தன் அவர்களின் பின்னூட்டத்திற்க்கு பதிலளிக்கும் பொருட்டு நண்பர் டென்தாரா இஸ்லாத்தில் பெண்ணின் நிலை எவ்வளவு உயர்ந்தது என்று சில பைபிள் வசனங்களை ஒப்பிட்டுக்காட்டியிருந்தார். மெய்யாகவே இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகள் வழங்கியுள்ளதா? ஆண்களுக்கு சமமாய் பெண்களை நடத்துகிறதா? மெய்யாகவே இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியிருக்கிறதா? கௌரவப்படுத்தியிருக்கிறதா?

 

     பொதுவாக இஸ்லாமியவாதிகள் மூன்றுவிதமான சிறப்புகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருப்பதாக குறிப்பிடுவார்கள். ௧)சொத்துரிமை ௨)விவாகரத்துரிமை ௩)ஜிஹாப் எனும் பெண்ணாடை

 

     சொத்துரிமை: பெண்களை பொருளாதார ரீதியில் ஒரு பொருட்டாக மதிக்காதிருந்த காலத்தில் இஸ்லாம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது என்பார்கள். குரானில் பெண்களுக்கு சொத்துரிமை குறித்த வசனங்கள் இருக்கின்றன. ஆனால் எப்படி? ஆணில் பாதி. ஆண் எவ்வளவு பெறுகிறானோ அதில் பாதிதான் பெண்ணுக்கு. குரானின் நான்காவது அத்தியாயம் 11வது வசனம் இப்படிக்கூறுகிறது. "இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்….." ஒரே பெற்றோருக்கு பிறந்த ஆண் பெண் பிள்ளைகளில் பேதம் பார்க்கும் இந்த குரானின் வசனத்திற்கு நிறைய விளக்கங்கள் சொல்லியிருக்கிறார்கள், சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பெற்றொரை பாதுகாக்கும் கடமை ஆண்களுக்குத்தான் உண்டு எனவேதான் ஆணுக்கு இரண்டு பங்கு, சகோதரிகளின் திருமணத்தின் போதும் அதற்குப்பிற‌கும் சகோதரனே அதிகப்பொறுப்பேற்கிறான் எனவேதான் அவனுக்கு இரண்டு பங்கு, குடும்பச்சொத்து வளர்வதற்கு ஆண்களே காரணமாக இருக்கிறார்கள் எனவேதான் அவர்களுக்கு இரண்டு பங்கு. ஆனால் இதுபோன்ற‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ குரான் ஆணுக்கு இர‌ண்டு ம‌ட‌ங்கு கொடுக்க‌ச்சொல்ல‌வில்லை. மேற்கூறிய‌ அந்த‌ வ‌ச‌ன‌ம் இப்ப‌டி முடிகிற‌து. "…..உங்க‌ள் பெற்றோர் ம‌ற்றும் பிள்ளைக‌ளில் உங்க‌ளுக்கு அதிக‌மாக‌ ப‌ய‌ன் த‌ருப‌வ‌ர் யார் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌மாட்டீர்க‌ள். அல்லாஹ் விதித்த‌ க‌ட‌மை. அல்லாஹ் அறிந்த‌வ‌னாக‌வும் ஞான‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்கிறான்" அறிந்த‌வ‌னாக‌வும் ஞான‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்கிற‌ அல்லாதான் க‌டைமையாக‌ விதித்திருக்கிறானேய‌ன்றி ஆண்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு குறித்த‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ அல்ல‌. அதையும் இந்த‌ வ‌ச‌ன‌ம் தெளிவாக‌வே சொல்லிவிடுகிறது, உங்க‌ளுக்கு அதிக‌மாக‌ ப‌ய‌ன் த‌ருப‌வ‌ர் யார் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌மாட்டீர்க‌ள் என்ப‌த‌ன் மூல‌ம். இருந்தாலும் விள‌க்க‌ம் கூறுப‌வ‌ர்க‌ளை கேட்க‌லாம், பெண்க‌ளே பெற்றோரை பாதுகாக்கும் குடும்ப‌ங்க‌ளில், ச‌கோத‌ரிக‌ளின் திரும‌ண‌ங்க‌ளிலும் அத‌ற்குப்பிற‌கும் பெண்க‌ளே பெறுப்பேற்கிற‌ குடும்ப‌ங்க‌ளில், குடும்ப‌ச்சொத்து வ‌ள‌ர்வ‌த‌ற்கு பெண்க‌ள் ப‌ங்க‌ளிக்கின்ற‌ குடும்ப‌ங்க‌ளில் பெண்க‌ளுக்கு இர‌ண்டு ப‌ங்கு கொடுக்க‌லாமா? வேண்டாம் ஆண்க‌ளுக்கும் பெண்க‌ளுக்கும் ச‌ம‌மாக‌ கொடுக்க‌லாமா? பெற்றோரின் சொத்தை பிரிப்ப‌தில் இந்த‌ வித்தியாச‌ம் காட்டும் குரான் க‌ண‌வ‌ன் ம‌னைவி சொத்து விச‌ய‌த்தில் என்ன‌ கூறுகிற‌து?

 

     "உங்க‌ள் மனைவிய‌ருக்கு குழ‌ந்தை இல்லாவிட்டால் அவ‌ர்க‌ள் விட்டுச்சென்ற‌தில் பாதி உங்க‌ளுக்கு உண்டு. அவ‌ர்க‌ளுக்கு குழ‌ந்தை இருந்தால் அவ‌ர்க‌ள் விட்டுச்சென்ற‌தில் கால்பாக‌ம் உங்க‌ளுக்கு உண்டு…..உங்க‌ளுக்கு குழ‌ந்தை இல்லாவிட்டால் நீங்க‌ள் விட்டுச்சென்ற‌தில் கால் பாக‌ம் உங்க‌ள் ம‌னைவிய‌ருக்கு உண்டு. உங்க‌ளுக்கு குழ‌ந்தை இருந்தால் நீங்க‌ள் விட்டுச்சென்ற‌தில் எட்டில் ஒருபாக‌ம் அவ‌ர்க‌ளுக்கு உண்டு…."குரான்4:12 புரிகிற‌தா இந்த‌ வித்தியாச‌ம்? எடுத்துக்காட்டாக‌ க‌ண‌வ‌னுக்கும் ம‌னைவிக்கும் த‌னித்த‌னியே 100ரூபாய் சொத்து இருப்ப‌தாக‌ கொள்வோம். குழ‌ந்தை இல்லாத‌ நிலையில், ம‌னைவி இற‌ந்தால் க‌ண‌வ‌னுக்கு 50ரூபாய் சொத்து கிடைக்கும், க‌ண‌வ‌ன் இற‌ந்தால் ம‌னைவிக்கு 25ரூபாய் சொத்துதான் கிடைக்கும். குழ‌ந்தை இருக்கும் ப‌ட்ச‌த்தில் ம‌னைவி இற‌ந்தால் க‌ண‌வ‌னுக்கு 25ம் க‌ண‌வ‌ன் இற‌ந்தால் ம‌னைவிக்கு 12.50ம் கிடைக்கும். இதில் இன்னொரு விச‌ய‌ம் என்ன‌வென்றால் ஆணுக்கு நான்கு ம‌னைவிவ‌ரை திரும‌ண‌ம் செய்ய‌ அனும‌தி இருப்ப‌தால் க‌ண‌வ‌னிட‌மிருந்து ம‌னைவிக்கு போகும் சொத்து நான்காக‌ பிரியும். ம‌னைவியிட‌மிருந்து க‌ண‌வ‌னுக்கு வ‌ரும் சொத்து நான்கு ம‌ட‌ந்காக‌ உய‌ரும். இது ப‌டிப்ப‌டியாக‌ பெண்க‌ளிட‌முள்ள‌ சொத்தை ஆண்க‌ளுக்கு போய்ச்சேர‌வே வ‌ழிவ‌குக்கிற‌து. இதில் எங்கே இருக்கிற‌து ச‌ம‌த்துவ‌ம்?

 

     இந்த‌ இட‌த்தில் சில‌ர் ஒரு கேள்வி எழுப்ப‌லாம். பெண்க‌ளுக்கு சொத்துரிமை இல்லாத‌ கால‌த்தில் இஸ்லாம் பெண்க‌ளுக்கு சொத்துரிமையை குறைவாக‌வேனும் வ‌ழ‌ங்கியிருக்கிற‌தே இது போற்ற‌ப்ப‌ட‌வேண்டிய‌தில்லையா? இஸ்லாத்திற்கு முன்பு பெண்க‌ளுக்கு சொத்துரிமை இல்லை இஸ்லாம்தான் அதை வ‌ழ‌ங்கிய‌து என்று சொல்வ‌து மோச‌டியான‌து. முகம‌து ந‌பியின் முத‌ல் ம‌னைவி பெய‌ர் க‌தீஜா. ம‌க்கா ந‌க‌ரின் மிக‌ப்பெரும் செல்வ‌ந்த‌ர். அரேபியாவின் ப‌ல‌ப‌குதிக‌ளுக்கும் சென்று வியாபார‌ம் செய்ய‌ ப‌ல‌ வ‌ணிக‌ர்க‌ளை வேலைக்கு அம‌ர்த்தியிருந்த‌வ‌ர். அப்ப‌டி ஒருவ‌ர்தான் முக‌ம‌து ந‌பி. க‌தீஜாவின் செல்வ‌த்தோடு ஒப்பிட்டால் முக‌ம‌து ந‌பி ப‌ர‌ம‌ ஏழை. இவ‌ர்க‌ள் இருவ‌ரும் திரும‌ண‌ம் செய்து ப‌ல‌கால‌ம் க‌ழிந்த‌ பின்புதான் இஸ்லாத்தின் முத‌ல் வேத‌ வெளிப்பாடே வ‌ருகிற‌து. வ‌ர‌லாறு இப்ப‌டி இருக்கையில் எந்த‌ப்பொருளில் இஸ்லாம்தான் இல்லாதிருந்த‌ சொத்துரிமையை பெண்க‌ளுக்கு வ‌ழ‌ங்கிய‌து என்று கூறுகிறார்க‌ள். க‌தீஜா போல‌ பொருளிய‌ல் செல்வாக்குள்ள‌ ஒரு பெண்ணை 1400ஆண்டுக‌ள் க‌ட‌ந்த‌ நிலையில் இன்று காண‌முடிய‌வில்லை என்ப‌தே உண்மை.

 

     இவை எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ சொத்துக்க‌ளை பிரிப்ப‌தை விரிவாக‌ பேசும் அல்லாவுக்கு, முக்கால‌மும் உண‌ர்ந்த‌ எல்லாம் தெரிந்த‌ ஞான‌மிக்க‌ அல்லாவுக்கு த‌னிச்சொத்துடமைதான் உல‌க‌த்தின் அனைத்துப்பிர‌ச்ச‌னைக‌ளுக்கும் ஆணாதிக்க‌த்திற்கும் மூல‌கார‌ண‌ம் என்ப‌து தெரியாம‌ல் போன‌தேனோ? இல்லை இற‌ந்த‌த‌ற்குப்பின்னால் விண்ணில் கிடைக்க‌விருப்ப‌தாக‌ த‌ன்னால் ந‌ம்ப‌வைக்க‌ப்ப‌ட்டிருக்கும் சொர்க்க‌த்தை த‌னிச்சொத்துரிமையை ஒழித்து ம‌னித‌ன் உயிருட‌ன் இருக்கும்போதே ம‌ண்ணிலேயே பெற்றுவிட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌வா?

 

     விவாக‌ர‌த்துரிமை: பிடிக்காத‌ ம‌னைவியை விவாக‌ர‌த்து செய்ய‌முடியாம‌லும், வேறு திரும‌ண‌மும் செய்ய‌முடியாம‌லும் கொடுமைப்ப‌டுத்துவ‌தும் கொலை செய்வ‌தும் ந‌ட‌ந்து கொண்டிருக்கும் இந்த‌ நாட்க‌ளில், பெண்க‌ளுக்கேகூட‌ அந்த‌ உரிமையை வ‌ழ‌ங்கி பெண்க‌ளின் வாழ்வில் க‌ண்ணிய‌த்தையும் ம‌ல‌ர்ச்சியையும் ஏற்ப‌டுத்திய‌து இஸ்லாம். பெண்ணிய‌ம் ப‌ற்றி பேசும்போதெல்லாம் இஸ்லாமிய‌வாதிக‌ள் த‌வ‌றாம‌ல் எடுத்துவைக்கும் வாத‌மிது. இது மெய்தானா? ஆண்க‌ளுக்கு த‌லாக் என்றும் பெண்க‌ளுக்கு குலாஉ என்றும் இர‌ண்டுவித‌மான‌ விவாக‌ர‌த்துமுறைக‌ளை இஸ்லாம் சொல்கிற‌து. ஆண் த‌ன் ம‌னைவியை பிடிக்க‌வில்லையென்றால் மூன்றுமுறை த‌லாக் என்ற‌ வார்த்தையை சொல்லிவிட்டால் விவாக‌ர‌த்து ஆகிவிட்ட‌தாக‌ப்பொருள். இதை ஒரே நேர‌த்தில் சொல்ல‌ முடியாது, கால‌ இடைவெளிவிட்டு ஒவ்வொரு முறையாக‌ சொல்ல‌வேண்டும். முத‌ல் இர‌ண்டு முறை த‌லாக் சொன்ன‌பிற‌கு சில‌ நிப‌ந்த‌னைக‌ளுக்கு உட்ப‌ட்டு விரும்பினால் மீண்டும் சேர்ந்து கொள்ள‌லாம். ஆனால் மூன்று முறை கூறிவிட்டால் சேர‌முடியாது(ஆனால் மூன்று முறை அல்ல‌ முத்த‌லாக் என்ற‌ ஒற்றை வார்த்த‌யிலேயே ப‌ல‌ பெண்க‌ள் வாழ்க்கையிழ‌ந்து விர‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ப‌துதான் ந‌டைமுறை) இதை ஆண் த‌ன் குடும்ப‌த்திற்குள்ளாக‌வே முடித்துக்கொள்ள‌முடியும். ஆனால் பெண் குலாஉ முறையில் க‌ண‌வ‌னை விவாக‌ர‌த்து செய்ய‌வேண்டுமென்றால் ஊர்த்த‌லைவ‌ரிட‌ம்(அல்ல‌து நீதிம‌ன்ற‌ம்)

முறையிட்டு பெற்றுக்கொண்ட‌ ப‌ண‌த்தை திரும்ப‌க்கொடுத்துவிட்டு விவாக‌ர‌த்தைப் பெற‌வேண்டும். ஏற்க‌ன‌வே நான்கு ம‌னைவிவ‌ரை வைத்துக்கொள்ள‌ (கூடுத‌லாக‌ எத்தைனை அடிமைப்பெண்க‌ள் என்றாலும்) அனும‌தி உள்ள‌ நிலையிலும் ஆண்க‌ளுக்கு கால‌ அவ‌காச‌ம் (மூன்று த‌லாக்)அளிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஆனால் பெண்ணுக்கோ ஊர்த்த‌லைவ‌ரிட‌ம் முறையிட்டு திரும‌ண‌த்தின் போது பெற்ற‌ ப‌ண‌த்தை திரும்ப‌க்கொடுக்க‌ச் ச‌ம்ம‌தித்தால் அந்த‌க்க‌ண‌மே விவாக‌ர‌த்து. அதாவ‌து உரிமை கொடுப்ப‌தைபோல் கொடுத்துவிட்டு விளைவுக‌ளைக்கொண்டு பெண்க‌ளை மிர‌ட்டுகிற‌து. எச்ச‌ரிக்கை க‌ண‌வ‌னை எதிர்த்தால் ம‌ண‌வாழ்வையும் இழ‌ந்து, பெற்ற‌ ப‌ண‌த்தையும் இழ‌ந்து வேறு வாழ்க்கைத்துணையைத்தான் தேட‌வேண்டிய‌திருக்கும். என‌வே க‌ண‌வ‌னுக்கு அஞ்சி ந‌ட‌ந்துகொள். ஆணுக்கோ ம‌னைவிய‌ரும் அடிமைப்பெண்ணும் இருக்க‌ தெவைப்ப‌ட்டால் அடுத்த‌ ம‌ண‌முடிக்க‌ விவாக‌ர‌த்துப்பெற்ற‌ ம‌னைவி திரும்ப‌க்கொடுத்த‌ ப‌ண‌மும் இருக்க‌ எல்லா வ‌ச‌திக‌ளும் ஆணுக்குத்தான், பெண்ணுக்கு எதிர்கால‌ம் குறித்த‌ ப‌ய‌ம் ம‌ட்டும்தான். பெண்க‌ளுக்கான‌ விவாக‌ர‌த்தின் பின்னே ஆணுக்கு அடிமைப்ப‌ட்டுக்கிட‌க்க‌வேண்டும் என்ப‌துதான் ம‌றைமுக‌மாக‌ தொக்கி நிற்கிற‌து. ஆணும் பெண்ணும் அதாவ‌து க‌ண‌வ‌னும் ம‌னைவியும் பிண‌ங்கியிருக்கும் கால‌த்தில் ஆண்விருப்ப‌ப்ப‌ட்டால் ம‌ட்டுமே இணைந்து வாழ‌முடியும். பெண்ணின் விருப்ப‌ம் இந்கே ஒரு பொருட்டில்லை. "இருவ‌ரும் ந‌ல்லிண‌க்க‌த்தை விரும்பினால் அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை திரும்ப‌ச்சேர்த்துக்கொள்ளும் உரிமை ப‌டைத்த‌வ‌ர்க‌ள்…." குரான் 2:228. இதில் என்ன‌ க‌ண்ணிய‌மும் ம‌ல‌ர்ச்சியும் இருக்கிற‌து. ச‌ரி குழ‌ந்தைக‌ள் இருக்கும் நிலையில் விவாக‌ர‌த்தானால் குழ‌ந்தை யாருக்கு சொந்த‌ம்? ச‌ந்தேக‌மில்லாம‌ல் ஆணுக்குத்தான். ஆண்க‌ளுக்குத்தான் வாரிசுரிமையே த‌விர பெண்ணுக்க‌ல்ல‌. ஆணைப்பொருத்த‌வ‌ரை பெண் ஒரு போக‌ப்பொருள் தான். விவாக‌ர‌த்து ச‌ம‌ய‌த்தில் பால்குடி குழ‌ந்தை இருந்தால் குழ‌ந்தை பால் குடிப்ப‌த‌ற்கு ப‌ண‌ம் கொடுக்க‌ச்சொல்லி தாய்மையை இழிவுப‌டுத்துகிற‌து குரான். அத‌னால்தான் குரான் கூறுகிற‌து "உங்க‌ள் ம‌னைவிய‌ர் உங்க‌ளின் விளைநில‌ங்க‌ள், உங்க‌ள் விளைநில‌ங்க‌ளுக்கு நீங்க‌ள் விரும்பிய‌வாறு செல்லுங்க‌ள்" குரான்2:223. த‌ங்க‌ம், வெள்ளி, குதிரை போன்று பெண்க‌ளும் ஆண்க‌ளுக்கு இவ்வுல‌கின் வாழ்க்கை வ‌ச‌திக‌ள். "பெண்க‌ள்,ஆண்ம‌க்க‌ள், திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ த‌ங்க‌ம், வெள்ளியின் குவிய‌ல்க‌ள், அழ‌கிய‌ குதிரைக‌ள், கால்ந‌டைக‌ள் ம‌ற்றும் விளைநில‌ங்க‌ள் ஆகிய‌ ம‌ன‌விருப்ப‌ம் ஏற்ப‌டுத்தும் பொருட்க‌ளை நேசிப்ப‌து ம‌னித‌ர்க‌ளுக்கு க‌வ‌ர்சியாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இவை இவ்வுல‌க‌ வாழ்க்கையின் வ‌ச‌திக‌ள்…." குரான் 3:14 இதுதான் ம‌ண‌வாழ்வில் இஸ்லாம் பெண்ணிற்கு த‌ந்துள்ள‌ உரிமை. இவைஎல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ திரும‌ண‌ங்க‌ள் செய்வ‌த‌ற்கும், அடிமைப்பெண்க‌ளை 'வைத்து'க்கொள்வ‌த‌ற்கும் ஆண்க‌ளுக்கு இஸ்லாம் ஏற்ப‌டுத்தியிருக்கும் நிப‌ந்த‌னை த‌குதி என்ன‌ தெரியுமா? ப‌ண‌ம். உன‌க்கு வ‌ச‌தியிருந்தால் புகுந்து விளையாடு என்ப‌துதான்.ம‌ஹ‌ர் கொடுக்கும் வ‌ச‌தியிருந்தால் திரும‌ண‌ம் இல்லையேல் நோன்புவைத்துக்கொள். இதில் என்ன‌ பெண்ணுரிமை இருக்கிற‌து? முக்கிய‌மான‌ செய்திக்கு வ‌ருவோம். இஸ்லாத்திற்கு முன்னால் பெண்ணிற்கு விவாக‌ர‌த்துரிமையோ ம‌றும‌ண‌ உரிமையோ இருந்த‌தில்லையா? மீண்டும் க‌தீஜா பிராட்டியின் வர‌ல‌ற்றுக்கு திரும்ப‌லாம், முக‌ம‌து ந‌பிக்கு க‌தீஜா முத‌ல் ம‌னைவி அனால் க‌தீஜாவுக்கு முக‌ம்ம‌து ந‌பி…..? மூன்றாவ‌து க‌ண‌வ‌ர். எந்த‌ அடிப்ப‌டையில் இவ‌ர்க‌ள் இஸ்லாம்தான் பெண்ணுக்கு விவாக‌ர‌த்துரிமையும், ம‌றும‌ண‌ம் செய்துகொள்ளும் உரிமையும் அளித்த‌து என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்க‌ள்?

 

     ஜிஹாப் எனும் பெண்க‌ளுக்கான‌ ஆடை(ப‌ர்தா): ஆண்க‌ளின் காம‌ப்பார்வையிலிருந்து பெண்க‌ள் த‌ங்க‌ளை காத்துக்கொள்ள‌ இஸ்லாம் வ‌ழ‌ங்கிய‌ கொடை இந்த‌ ப‌ர்தா எனும் ஆடை என்ப‌து இஸ்லாமிய‌ வாதிக‌ளின் வாத‌ம். அணியும் ஆடைக‌ள் தொட‌ர்பாக‌ ஆண்க‌ளுக்கு குறிப்பிட‌த்த‌குந்த‌ க‌ட்டுப்பாடு எதியும் வ‌ழ‌ங்காத‌ இஸ்லாம் பெண்க‌ளுக்கு அனேக‌ க‌ட்டுப்பாடுக‌ளை விதித்துள்ள‌து. பெற்றோர்க‌ள் க‌ண‌வ‌ன் உட்ப‌ட்ட‌ நெருங்கிய‌ சில‌ உற‌வின‌ர்க‌ளை த‌விர‌ ஏனைய‌வ‌ருக்கு த‌ங்க‌ள் ஆடை அல‌ங்கார‌ங்க‌ளை வெளிப்ப‌டுத்த‌க்கூடாது. இருக்க‌மான‌ ஆடைக‌ளை அணிய‌க்கூடாது. தோலின் நிற‌ம் தெரிய‌க்கூடிய‌ அல்ல‌து தோலின் நிற‌த்திலுள்ள‌ ஆடைக‌ள் அணிய‌க்கூடாது. முக‌ம் முன்கைக‌ள் த‌விர‌ ஏணைய‌ பாக‌ங்க‌ள் அனைத்தும் ம‌றைக்க‌ப்ப‌ட்டிருக்க‌வேண்டும் இப்ப‌டிப்ப‌ல‌. பெண்ணை பாலிய‌ல் ப‌ண்ட‌மாக‌ப்பார்ப்ப‌த‌ன் நீட்சிதான் இது. ஆணின் காம‌ப்பார்வைக்கு நான்கு ம‌னைவிக‌ளையும் கூடுத‌லாக‌ அடிமைப்பெண்க‌ளையும் த‌ந்துவிட்டு அவ‌ன் பார்வையிலிருந்து த‌ப்பிக்க‌ பெண்க‌ளை க‌வ‌ச‌ம‌ணிய‌ச்சொல்வ‌து குரூர‌மான‌ ந‌கைச்சுவை. இப்ப‌டிக்கூறுவ‌த‌ன் மூல‌ம் இன்றைய‌ முத‌லாளித்துவ‌ உல‌கின் பெண்ணை காட்சிப்பொருளாக்கும் சீர‌ளிவுக்க‌லாச்சார‌த்திற்கான‌ ஆத‌ர‌வு என‌ யாரும் த‌வ‌றாக‌ எண்ணிவிட‌லாகாது. பெண்ணின் ஆடையை ஆணின் வ‌க்கிர‌ப்பார்வை தீர்மானிக்க‌லாகாது என்ப‌துதான். முழுக்க‌ முழுக்க‌ ம‌றைத்துவிட்டு ஒற்றை விர‌ல் ம‌ட்டும் தெரிந்தாலும் அதையும் வெறித்துப்பார்க்க‌வைப்ப‌து ஆணின் வ‌க்கிர‌மேய‌ன்றி பெண்க‌ளின் உட‌ல‌ல்ல‌. த‌வ‌று ஆண்க‌ளிட‌ம் த‌ண்ட‌னை பெண்க‌ளுக்கா? பார்வை இருக்க‌ட்டும் கேட்க‌க்கூசும் வார்த்தைக‌ளால் அர்ச்சிக்கிறார்க‌ளே பெண்க‌ள் வெளியில் வ‌ரும்போது காதுக‌ளை ப‌ஞ்சால் அடைத்துக்கொண்டுதான் வ‌ர‌வேண்டும் என்று ச‌ட்ட‌ம் செய்ய‌லாமா? பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ந்தால் உர‌சுவ‌த‌ற்காக‌வே க‌ட‌ந்துபோகிறார்க‌ளே என்ன‌செய்ய‌லாம்? ப‌ர்தாவை இரும்பால் நெய்து கொள்ள‌வேண்டும் அதுவும் உட‌லைவிட்டு அரை அடி த‌ள்ளியிருப்ப‌துபோல் தைத்துக்கொள்ள‌வேண்டும் என‌த்திருத்த‌ம் கொண்டு வ‌ர‌லாமா?

 

     பொதுவாக‌ ஆணின் பாலிய‌ல் வெறி அல்ல‌து அதீத‌ பாலிய‌ல் உண‌ர்வு என்ப‌து ச‌மூக‌த்திலிருந்து வ‌ருவ‌து. உட‌லுற‌வு என்ப‌து இன‌ப்பெருக்க‌த்திற்கான‌து என்ற‌ இய‌ற்கையை தாண்டி அது இன்ப‌மாக‌ நுக‌ர்வாக‌ ஆன‌து தான் பெண்க‌ள் மீதான‌ பாலிய‌ல் கொடுமைக‌ளுக்கான‌ தொட‌க்க‌ப்புள்ளி. எல்லாம் தெரிந்த‌ ஆண்ட‌வ‌ன் இந்த‌ தொட‌க்க‌ப்புள்ளியிலிருந்துதான் அந்த‌க்குற்ற‌த்தை பார்த்திருக்க‌வேண்டும். இந்த‌ தொட‌க்க‌ப்புள்ளியிலிருந்து தான்  தீர்வை தொட‌ங்கியிருக்க‌வேண்டும். ஆனால் ஆணின் காம‌ உண‌ர்வை இன்ப‌ நுக‌ர்வாக‌ அங்கீக‌ரித்துவிட்டு அதிலிருந்து த‌ப்புவ‌த‌ற்காக‌ பெண்க‌ளுக்கு ஆடைக்க‌ட்டுப்பாடு விதிப்ப‌து எந்த‌ வ‌கையில் பெண்க‌ளுக்கு க‌ண்ணிய‌த்தை த‌ரும் என்று ம‌த‌வாதிக‌ள் கூற‌வேண்டும்.

 

            சாட்சிய‌த்தில் பெண் ஆணில் பாதி(2:282), போர்க்கைதிக‌ளோடு உற‌வுகொள்ள‌ அனும‌தி(33:50), ம‌னைவியை அடிப்ப‌த‌ற்கு அனும‌தி(4:34), க‌ண‌வ‌ன் உற‌வுக்கு அழைத்து ஏதாவ‌து கார‌ண‌த்தால் ம‌னைவி ம‌றுத்தால் விடியும் வ‌ரை வான‌வ‌ர்க‌ளால் ச‌பிக்க‌ப்ப‌டுவாள்(புகாரி) போன்று பெண்ணை இழிவுப‌டுத்தும் வ‌ச‌ன‌ங்க‌ள் குரானிலும் ஹ‌தீஸிலும் ஏராள‌ம் உண்டு. இவைக‌ளையெல்லாம் ம‌ற‌ந்துவிட்ட‌ ந‌ண்ப‌ர் டென்தாரா பைபிளின் வ‌ச‌ன‌ங்க‌ளை சுட்டிக்காட்டியுள்ளார். பெண்ணை ஆணாதிக்க‌த்திற்கு ப‌லியாக்கும் பிற்போக்குத்த‌ன‌த்திற்கு எந்த‌ ம‌த‌மும் விதிவில‌க்க‌ல்ல‌. ஆணோ பெண்ணோ ந‌ம்பிக்கை கொண்டு ந‌ல்ல‌ற‌ம் செய்தால் அவ‌ர்க‌ளை ம‌கிழ்ச்சியான‌ வாழ்க்கை வாழ‌ச்செய்வோம். அவ‌ர்க‌ள் செய்து கொண்டிருந்த‌த‌ன் கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ளின் கூலியை அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்குவோம்(16:97) என்ப‌ன‌போன்ற‌ ஆணையும் பெண்ணையும் பொதுவாக‌ பாவிப்ப‌து போன்று தோற்ற‌ம் ஏற்ப‌டுத்தும் வ‌ச‌ன‌ங்க‌ளும் குரானில் உண்டு. ஆண், பெண்ணின் ந‌ல்ல‌ற‌ம் எது என்று பார்த்தால் அங்கே பேத‌ம் ப‌ல்லிளிக்கிற‌து.

 

     பெண்க‌ளுக்கான‌ க‌ண்ணிய‌மும், ம‌திப்பும் காக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால், ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டும். ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால் த‌னியுட‌மை த‌க‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டும். த‌னியுட‌மையை த‌க்க‌வைத்துக்கொண்டு பெண்ணிய‌ம் பேச‌முடியாது. என‌வே டென்தாரா அவ‌ர்க‌ளே (உங்க‌ளின் க‌டைசி வ‌ரியை மீண்டும் கூறுகிறேன்) சிந்தியுங்க‌ள் செய‌ல்ப‌டுங்க‌ள்.

 

http://tinyurl.com/9pzbd4

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails