பெங்களூர், அக்.8-
பெங்களூரில் நள்ளிரவு நடந்த விருந்தில் நடிகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சினிமா தயாரிப்பாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நள்ளிரவு விருந்து
பெங்களூரில் உள்ள கம்மனஹள்ளியைச் சேர்ந்தவர் வினோத். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும் இவர் சமீபத்தில் வெளியான `மாதேசா' என்ற கன்னட படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் கோவர்த்தனமூர்த்தி.
நேற்று முன்தினம் இரவு கோவர்த்தனமூர்த்தி பெங்களூரை அடுத்த பாகலூரில் உள்ள தனக்கு சொந்தமான ரெசார்ட் ஒன்றில் மதுபான விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இந்த விருந்துக்கு நடிகர் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் பலரை அழைத்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து இந்த விருந்தில் வினோத், கோவர்த்தனமூர்த்தியின் நண்பர்கள் கலந்து கொண்டனர். நள்ளிரவு 1.30 மணி வரை மதுபான விருந்து நீடித்தது. விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் போதை தலைகேறியதும் ரியல் எஸ்டேட் தொழிலை பற்றி வினோத்திடம் விவாதித்து கொண்டு இருந்தனர்.
நடிகர் சுட்டுக்கொலை
இதில் அவர்களுக்கு இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கோவர்த்தன மூர்த்தி தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வினோத்தை நோக்கி 3 முறை சுட்டார். இதில் வினோத் படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள மணிப்பால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி வினோத் ஆஸ்பத்திரியிலேயே நேற்று காலை 10 மணிக்கு பரிதாபமாக செத்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த சினிமா தயாரிப்பாளர் கோவர்த்தனமூர்த்தியும், மற்றும் அவரது நண்பர்களும் தலைமறைவாகி விட்டனர்.
காரணம் என்ன?
சுட்டுக்கொல்லப்பட்ட வினோத்தும், படத்தயாரிப்பாளர் கோவர்த்தன மூர்த்தியும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனவே தொழில் சம்பந்தமாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவர்த்தன மூர்த்தி மற்றும் அவரது நண்பர்களை வலை வீசி தேடி வருகின்றார்கள்.
பலியான வினோத்துக்கு சமீபத்தில்தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=443269&disdate=10/8/2008
No comments:
Post a Comment