Saturday, October 25, 2008

குஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் !

 

இந்த ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வழக்கமாக நடக்கும் ஜூம்மா நமாஸ் எனப்படும் ஒரு மணிநேரத் தொழுகையில் அப்துல் ஹலீம் உரையாற்றும் போது "அண்டை வீட்டார் பசியோடிருக்கும் போது உங்கள் வயிற்றை நிரப்புவது கூடாது, உங்களுக்கு அருகில் குடியிருப்போர் முசுலீமா, இந்துவா என்றெல்லாம் மதவேறுபாடு பார்க்கக்கூடாது" என்று வந்திருக்கும் மக்களிடம் பேசுகிறார். இதற்கடுத்த நாள் சனிக்கிழமையன்று அகமதாபாத் நகரில் தொடர் குண்டு வெடித்து 53 மக்கள் கொல்லப்படுகின்றனர்.

ஒரு மத அறிஞராக வெளிப்படையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஹலீமை குண்டு வெடித்த மறுநாளே போலீசு அதிரடியாகக் கைது செய்கிறது. மசூதிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஹலீமின் வீட்டைச் சுற்றியிருக்கும் மக்கள் இந்தக் கைதைக் கண்டு அதிர்ச்சியடைகின்றனர். சிறையலடைக்கப்பட்ட ஹலீமை இரண்டு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி முன் நிறுத்திய போலீசு அவர் குண்டு வெடிப்புச் சதிகளில் ஈடுபட்டிருந்த்தாகக் குற்றம் சாட்டியது. இதையே ஊடகங்களும் பரபரப்பாக கண் காது மூக்கு வைத்து அவரைப் பயங்கரவாதியாகச் சித்தரித்தன.

மேலும் அவர் சிமி எனப்படும் தடைசெய்யப்பட்ட இசுலாமிய மாணவர் இயக்கத்துடன் தொடர்புள்ளவர் எனவும், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலுள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர், அகமதாபத் நகரிலுள்ள முசுலீம் இளைஞர்களை தெரிவு செய்து உத்திரப் பிரேதச மாநிலத்திற்கு அனுப்பி பயங்கரவாத பயிற்சி எடுக்க வைத்தவர், அதன் மூலம் 2002 கலவரத்திற்கு பழிவாங்கும் முகமாக அத்வானி, மோடி முதலானவர்களைக் கொல்லுவதற்குத் திட்டம் தீட்டியவர் என்றெல்லாம் குஜராத் அரசு வழக்கறிஞரால் நீதிபதி முன் எடுத்து வைக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டிலிருந்து ஹலீம் தலைமறைவாகி விட்டார் என்றும் போலீசு குற்றம் சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதிலும் துளி கூட உண்மையில்லை என்பதை தெகல்வாக வார ஏடு (9.08.08) புலன் விசாரனை செய்து வெளியிட்டிருக்கிறது. உள்ளூர் காவல் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்க்குள் குடியிருக்கும் ஹலீமை அவ்வட்டார மக்கள் நன்கு அறிவர். அவரைப் பற்றி போலீசுக்கும் நன்கு தெரியும். குண்டு வெடிப்புக்கு முந்தைய நாள் வரை அவர் சிமி இயக்கத்துடன் தொடர்பிலிருந்தவர் என்று போலீசு எப்போதும் கூறியதில்லை.

இந்த ஆண்டு மே மாதம் ஹலீமும் அவரது மதப்பிரிவைப் பின்பற்றுவர்களும் ஒரு கடை முகவரியில் ஆரம்பித்த டிரஸ்ட் சம்பந்தமாக அவருக்கு கடிதம் அனுப்பிய போலீசு அதில் அந்த ட்ரஸ்ட்டில் உள்ளவர்களின் முகவரியைத் தருமாறு கேட்டிருக்கிறது. எந்த வித குற்றப் புகாரும் இல்லாத நிலையிலும் கூட ஹலீம் அந்த ட்ரஸ்ட் சம்பந்தமான விவரங்களை போலீசுக்கு அனுப்பியிருக்கிறார். இதிலிருந்து அவர் தலைமறைவாக இல்லை என்ற உண்மை போலீசுக்கும் தெரிந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் ஹலீம் தான் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து தனது குடும்பத்தினரை போலீசு அச்சுறுத்தியது என்று குஜராத்தின் போலீசு டைரக்டர் ஜெனரலுக்கும், அகமதாபாத் காவல் துறை ஆணையருக்கும் தந்தி அனுப்பியிருக்கிறார். அடக்குமுறைக்குகெதிரான இந்த சட்டப்பூர்வ முயற்சிகளையெல்லாம் ஒரு தலைமறைவு பயங்கரவாதி செய்வாரா என்ன?

அப்துல் ஹலீம் சிறையிலிருப்பதால் வறுமையில் வாடும் அவரது குடும்பம்.

அப்துல் ஹலீம் சிறையிலிருப்பதால் வறுமையில் வாடும் அவரது குடும்பம்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இருமதத்தவர்களையும் அடக்கிய சமூக ஒற்றுமை அமைதிக்கான இயக்கம் என்ற அமைப்பு மதநல்லிணக்க கூட்டம் நடத்துவதற்காக போலீசிடம் அனுமதி வாங்கியபோது அந்த விண்ணப்பத்திலிருந்த முக்கிய சொற்பொழிவாற்றுபவர்களின் பட்டியலில் ஹலீமின் பெயரும் இருந்தது. இதையெல்லாம் சொல்லித்தான் ஹலீமின் அப்பாவித்தனத்தை நீருபிக்க வேண்டுமென்பதில்லை என்கிறார்கள் அவரது நண்பர்கள். தனது குழந்தைகள் மீது ஆணையாக அவர் ஒரு பயங்கரவாதியில்லை, அப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார் ஹலீமின் மனைவி நூர் ஷாபா.

2002 கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உதவி வழங்க ஹலீம் முயிற்சி எடுத்த போதுதான் போலீசின் தொந்தரவுகள் ஆரம்பித்தன. கலவரத்தால் வீடு வாசல், உற்றார் உறவினரை இழந்து அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் சிறார்களுக்காக உதவி பெற ஹலீம் முயன்றார். குவைத்திலிருந்து வந்த இரண்டு இந்திய முசுலீம்களை அவர் அந்த முகாம்களுக்கு அழைத்துச் சென்று உதவி கோரினார். அதற்காகப் பின்னர் கடிதம் எழுதினார். அந்த இரண்டு நபர்களும் பின்னர் டெல்லி போலீசால் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டு டெல்லி நீதி மன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டனர். ஆனால் இந்த வழக்கில் வெடிமருந்து வைத்திருந்த்தாக சாட்சி அளித்தவர்கள் போலீசார் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் மொரதாபாத் வணிகர் ஒருவரை விடுதலை செய்த நீதிமன்றம் அகதிகள் முகாமுக்குச் சென்று குழந்தைகளுக்காக உதவி செய்ய நினைத்ததை குற்றமென வரையறுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

குஜராத்தின் அனாதை முசுலீம் குழந்தைகளுக்காக இவர்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதியதால் ஹலீமும் வேறு ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக் கடிதத்தில் உதவி கேட்டு இடம் பெற்ற வாசகங்கள் எல்லாம் போலிசால் தீவிரவாதத்தின் பொருளாகத் திரிக்கப்பட்டன. இதன் பொருட்டு கைது செய்யப்பட்ட ஹலீம் பின்னர் பிணையில் வந்தார். இவ்வழக்கின்படி குஜராத் குழந்தைகளைத் தீவிரவாதிகளாக்கும் பொருட்டு பயிற்சி முகாமுக்கு அனுப்ப முயன்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்குதான் தற்போது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வழக்கிற்கு மூலமாக காட்டப்படுகிறது. ஆக வெளிப்படையாக ஒரு மத அறிஞராகவும், முசுலீம் மக்களுக்கு உதவவேண்டுமெனவும் பாடுபட்ட ஒரு அப்பாவி, பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டு இன்று சிறையில் வாடுகிறார். கடை வருமானத்தை இழந்த அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. குஜராத் போலிசோ குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியைக் கண்டுபிடித்ததாக ஊடகங்களை நம்ப வைக்கிறது.

ஹலீமின் கதையோடு இந்த நாடகம் முடிந்து விடவில்லை. இவரைப் போன்ற பல இசுலாமிய அப்பாவிகள், குறிப்பாக இளைஞர்கள் இந்தியாவெங்கும் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுவதை தெகல்கா ஏடு அம்பலப்படுத்தியிருக்கிறது.

அனாதை என்பதன் பொருளை பெற்றோர், உற்றார், உறவினரோடு வாழும் ஒருவர் அவ்வளவு ஆழமாகப் புரிந்து கொள்ள முடியாது. இந்த உலகில் எந்த உறவுமின்றி ஆதரவற்ற நிலையில் வாழும் ஒரு அனாதையின் உளவியலை சகஜ வாழ்க்கையில் இருக்கும் நம்போன்றோர் அறிவதில்லை. இது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல சமூக வாழ்க்கைக்கும் பொருந்தும். சொல்லப்போனால் சமூக வாழ்க்கையில் அனாதைகளாக்கப்படும் நபர்கள்தான் சொல்லணாத் துயரத்தைச் சந்திக்கின்றனர். இந்து மதவெறியர்களின் அடக்குமுறைக் கலவரங்களின் எதிர் விளைவால் தோன்றும் இசுலாமிய பயங்கரவாதம் உண்மையில் பல அப்பாவி இசுலாமிய மக்களையே பலி கொள்கிறது.

தொப்பியும், தாடியும் வைத்திருக்கும் ஒரு இசலாமிய இளைஞன் எந்த வித முகாந்திரமுமின்றி பயங்கரவாதியக இருக்கலாம் என்று சமூக அமைப்புக்களால் நினைக்கப்படுகிறான். எங்கெல்லாம் குண்டு வெடிக்கிறதோ அங்கெல்லாம் கேட்பார் கேள்வியின்றி இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். பல ஆண்டு வழக்கு விசாரணைக்குப் பிறகே இவர்கள் அப்பாவிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர். எந்தக் குற்றமும் செய்யாத தம்மை இந்த சமூக அமைப்பு கிரிமனல் போன்று நடத்தப்படுவதை வைத்துத்தான் தங்களை எந்த உதவியுமின்றி துன்பப்படும் அனாதைகளாக இவர்கள் உணர்கின்றனர். இந்தியாவில் இத்தகைய இசுலாமிய அனாதைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது ஆரோக்கியமான போக்கு அல்ல. சமூக அளவில் தன்னை அனாதையாக்கும் இந்த அமைப்பு குறித்து அவர்களிடம் எழும் கோபத்தை எவரும் தணிக்க இயலாது.

பயங்கரவாத்த்திற்கெதிராக இந்திய அரசு தொடுத்திருக்கும் இந்தப்போரின் விளைவு பல தீவிரவாதிகளை உருவாக்கவே உதவி செய்யும். மதசார்பற்ற சக்திகள் இந்த அப்பாவி இசுலாமிய இளைஞர்களைக் காப்பாற்றும் முயற்சியில் வெற்றியடைவது ஒன்றே அவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்ற ஆறுதலைச் சிறிதேனும் தரும். இல்லையென்றால் அதன் விளைவை எல்லோரும் சந்திக்கவேண்டும்.

ஒரிசாவில் இடித்து நொறுக்கப்பட்ட ஒரு தேவாலயம்.

ஒரிசாவில் இடித்து நொறுக்கப்பட்ட ஒரு தேவாலயம்.

ஒரிசாவில் கிறித்தவ மக்கள் மீது கட்டவழ்த்து விடப்பட்டிருக்கும் இந்து மதவெறியர்களின் பயங்கரவாதத்தை இந்த அரசியல் அமைப்பு கேள்வி கேட்பதில்லை. லட்சுமணானந்தா சரஸ்வதி என்ற விசுவ இந்து பரிசத்தின் தலைவரும், அவ்வட்டாரத்தில் பிரபலமான இந்து மதவெறியராகவும் இருந்த இவர் கொலை செய்யப்பட்டதை வைத்து இந்து மதவெறியர்கள் இந்தக் கொலைக்குத் தொடர்பில்லாத கிறித்தவ மக்களை வேட்டையாடுகின்றனர். குஜராத்தில் முசுலீம்களுக்குப் பாடம் கற்பித்து விட்டோம், ஒரிசாவில் கிறித்தவர்களுக்கு பாடம் கற்பிப்போம் என்று சங்க பரிவாரங்கள் வெளிப்படையாகவே வெறியைப் பரப்பி கலவரம் செய்து வருகின்றனர். ஒரிசாவே பற்றி எரியுமளவுக்கு பல தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 2000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் கொளுத்தப்பட்டு, 25பேர் வரை கொல்லப்பட்டும் இருக்கின்றனர்.

1999 ஆம் ஆண்டு ஒரிசாவில் கிரகாம் ஸ்டேன்ஸ் எனும் ஆஸ்திரேலியப் பாதிரியார் இரு மகன்களுடன் ஒரு காரில் உயிருடன் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்து மதவெறியர்களின் இந்த கொடூரச் செயலுக்குப் பிறகு கூட அவர்களின் நடவடிக்கைகள் தடை செய்யப்படவில்லை. அதனால்தான் இன்றும் அரசு ஆதரவோடு அவர்களது பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை காரணமாக கிறித்தவ மத்த்திற்கு மதம்மாறிய தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களெல்லாம் அன்றாடம் இந்து பயங்கரவாதத்தைக் கண்டு நடுங்கியபடியேதான் வாழ நேரிட்டது. கடந்த பத்தாண்டுகளாக இந்த ஒடுக்கப்பட்ட கிறித்தவ மக்கள் பல தாக்குதல்களை சந்தித்திருக்கின்றனர். அதன் தொடர் விளைவாகத்தான் இன்றைய கலவரங்கள் இந்துமதவெறியர்களால் நடத்தப்படுகின்றன.

குண்டு வெடிப்புக்காக அப்பாவி முசுலீம்களைக் கைது செய்யும் போலீசோ ஒரிசாவில் இந்துமதவெறியர்களின் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றது. கிறித்தவ மக்கள் உயிருடன் கொளுத்த்தப்படும் போதுகூட போலிசின் துப்பாக்கிகள் சுடாமல் அமைதி காத்தன. பா.ஜ.கவின் இளைய பங்காளியான நவீன் பட்நாயக் அரசோ மோடியின் அரசுபோல இந்து மதவெறியர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது. தொகாடியா போன்ற இந்து மதவெறியர்களின் பேச்சும் நடவடிக்கையும் எந்த தடையுமின்றி ஒரிசாவில் வலம் வருகின்றன.

இந்த நாட்டின் அரசியல் அதிகார அமைப்புகள் இந்து மதவெறிக்கு ஆதரவாக இயங்கிவரும்போது இதன் பயங்கரவாதத்தை எவரும் சட்டபூர்வமாக ஒழிக்க முடியாது. மறுகாலனியாதிக்கத்தின் அங்கமாக ஒரிசாவை பன்னாட்டு நிறுவனங்கள் வேட்டையாடி வரும் நிலையில், அதை எதிர்த்து போராடும் பழங்குடி மக்களின் போராட்டத்தை இந்து மதவெறியர்கள் திசை திருப்பி ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்கின்றனர். பெரும்பான்மை, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றாக அணிதிரண்டு இந்து மதவெறியர்களை கருவறுக்கும்வரை எவருக்கும் விடுதலை இல்லை.

பயங்கரவாதத்தின் பெயரில் நூற்றுக்கணக்கான அப்பாவி இசுலாமிய மக்கள் சிறையில் வாடும்போது, உண்மையான பயங்கரவாதிகளான இந்து மதவெறியர்கள் சமூகத்தில் வெளிப்படையாக இயங்கி வருகின்றனர். இந்த முரண்பாடு சரிசெய்யப்படும் வரை இந்தியாவில் அமைதி என்பது பிடிபடாத மாயமானைப் போல ஓடிக்கொண்டே இருக்கும்.

 

http://tinyurl.com/5a8zqr

நன்றி வினவு

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails