"குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பெண் சாமியார் பாஜகவில் இல்லை" |
திகதி : Monday, 27 Oct 2008, [Sindhu] |
மகாராஷ்டிர மாநிலம் மலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் தற்போது பாஜகவில் இல்லை என்று அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் கூறினார்.இது தொடர்பாக பாரதிய ஜனசக்தி தலைவர் உமா பாரதி கூறியுள்ள குற்றச்சாட்டை அவர் மறுத்தார். பெண் சாமியார் பிரக்யா சிங்கை பாஜக கைவிட்டுவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை.பாஜகவின் துணை அமைப்பான ஏபிவிபியிலிருந்து அவர் 1995-96-ம் ஆண்டிலேயே வெளியேறிவிட்டார் என்று ரவிசங்கர் கூறினார். இருப்பினும்,குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் உரிய ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலை. குண்டு வெடிப்புக்கு அவர் காரணமாக இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவரது தந்தையே கூறியுள்ளார் என்றார் ரவிசங்கர். பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை.அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் அவர்.மாலேகாவ் குண்டு வெடிப்பில் பிரக்யா சிங்குக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டது.இதை பாஜக மறுத்தது. ஆனால் பாஜகவில் இருந்து பிரிந்து பாரதிய ஜனசக்தி கட்சியைத் தொடங்கி உள்ள உமா பாரதியோ இதற்கு கண்டனம் தெரிவித்தார். பிரக்யா சிங் தன்னுடன் இணைந்து பாஜகவுக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.அதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் தற்போது பதிலளித்துள்ளார். |
No comments:
Post a Comment