ஈராக்கில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு
3 ஆயிரம் பேர் ஊரை விட்டு ஓட்டம்
பாக்தாத், அக்.13-
ஈராக்கில் உள்ள மோசூல் நகரில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து உள்ளது. இதனால் கிட்டத்தட்ட 3 ஆயிரம் கிறிஸ்தவர்கள் ஊரை விட்டு தப்பி ஓடினார்கள்.
கிறிஸ்தவர்களை கடத்தி பணம் பறிப்பது
ஈராக்கில் முஸ்லிம்கள்தான் அதிக அளவில் வசித்து வருகிற போதிலும், கிறிஸ்தவர்களும் கணிசமாக வசிக்கிறார்கள். ஈராக்கின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 60 லட்சம் ஆகும். அவர்களில் 3 சதவீதம் பேர் அதாவது 8 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள் ஆவார்கள். ஈராக்கின் வடபகுதியில் உள்ள நினேவா மாநிலத்தில் கணிசமாக கிறிஸ்தவர்கள் வசிக்கிறார்கள். இந்த மாநிலத்தில் உள்ளதும், ஈராக்கின் 3-வது பெரிய நகரமுமான மோசூலில் 1800 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் பல்வேறு வகையில் சித்ரவதை செய்யப்பட்டு வருகிறார்கள். தொடக்கத்தில் கிறிஸ்தவர்களை கடத்தி அவர்களிடம் இருந்து பணம் சம்பாதித்து வந்தனர்.
இப்போது அவர்கள் கிறிஸ்தவர்களை கொலை செய்வது, அவர்களை விரட்டி அடித்து விட்டு அவர்களின் வசிப்பிடங்களை கைப்பற்றிக் கொள்வது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த செயல்களை அல்கொய்தா ஆதரவு பெற்ற சன்னி தீவிரவாதிகள் தான் செய்து வருகிறார்கள்.
குண்டு துளைக்கப்பட்ட உடல்கள்
மோசூல் நகரில் குண்டு துளைக்கப்பட்ட 7 கிறிஸ்தவர்களின் உடல்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் பற்றி மார் அப்ரம் சர்ச்சின் பங்குத்தந்தை பொலிஸ் ஜேக்கப் கூறுகையில், "கிறிஸ்தவர்கள் சமீபகாலமாக கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. எங்களை ஏன் தாக்குகிறார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் இஸ்லாமிய மதத்தையும், இஸ்லாமிய மதகுருக்களையும் மதிக்கிறோம்'' என்று குறிப்பிட்டார்.
தப்பி ஓட்டம்
மோசூல் நகரை கைப்பற்றுவதற்காக ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நடக்கும் யுத்தத்தை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது. இதனால் மோசூல் நகரை விட்டு கிறிஸ்தவர்கள் தப்பி ஓட்டம் பிடித்து உள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 3 ஆயிரம் கிறிஸ்தவர்கள் மோசூலை விட்டு தப்பி ஓடினார்கள். இந்த தகவலை இந்த மாநில கவர்னர் முகமது கஷ்மூலா தெரிவித்தார். அவர்கள் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்து உள்ளனர். சிலர் பக்கத்து நகரங்களில் உள்ள உறவினர்கள் வீடுகளில் அடைக்கலம் புகுந்து உள்ளனர் என்றும் கவர்னர் தெரிவித்தார்.
பாதியாக குறைந்தது
மோசூல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ஜோசப் ஜேக்கப் கூறுகையில், "யுத்தத்துக்கு முன்பு அதாவது 2003-ம் ஆண்டுக்கு முன்பு மோசூலில் 20 ஆயிரம் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். இப்போது அவர்களில் பாதிப்பேர் கூட இப்போது மோசூலில் இல்லை'' என்று தெரிவிக்கிறார்.
இஸ்லாமிய தீவிரவாதிகள், நூர் பகுதியில் உள்ள என் வீட்டுக்கு வந்து ஊரை காலி செய்து விட்டு ஓடிவிடு என்று துப்பாக்கி முனையில் என்னை மிரட்டினார்கள் என்று பஷீர் அசோஸ் என்ற 45 வயது தச்சர் தெரிவித்தார். இதுபோன்ற குற்றங்களை பார்க்கும்போது, அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறதா? ராணுவம் எங்கே இருக்கிறது என்று கேட்கத்தோன்றுகிறது என்கிறார் பஷீர்.
அவர் ஊரை காலிசெய்து விட்டு அங்கு இருந்து 40 கி.மீ.தொலைவில் உள்ள குவார்கோஷ் நகரில் மனைவி, குழந்தைகளுடன் தங்கி இருக்கிறார். இந்த நகரம் கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக உள்ளதாகும்.
மோசூல் நகரில் கிறிஸ்தவர்கள் காலி செய்த வீடுகளை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்ததாக போலீசார் கூறினார்கள்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=444074&disdate=10/13/2008
No comments:
Post a Comment