Tuesday, October 14, 2008

டிரா‌வி‌ல் முடி‌ந்தது முத‌ல் டெஸ்ட்!

 
lankasri.comஆஸ்ட்ரேலிய-இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

போட்டியின் கடைசி நாளான இன்று தனது 2வது இன்னிங்சைத் தொடர்ந்த ஆஸ்ட்ரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஷேன் வாட்ஸன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிராட் ஹட்டின் 35 ரன்கள், வொய்ட் 18 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்து வீச்சாளர்களில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், ஹர்பஜன் 2 விக்கெட்டுகளும், ஜாகீர்கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து 299 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்திய அணி 2வது இன்னிங்சை துவக்கியது. அதிரடியாக விளையாடி ஆஸ்ட்ரேலிய பந்துவீச்சாளர்களை திணறடிப்பார் என்று இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துவக்க வீரர் சேவாக் 6 ரன்கள் எடுத்த நிலையில், கிளார்க் பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த ஹைடனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய டிராவிட் 5 ரன்கள் எடுத்த நிலையில் பிரெட்லீ பந்தில் பாண்டிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய சச்சின் பொறுப்பாக விளையாடினாலும், கம்பீர் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

எனினும் அடுத்து களமிறங்கிய லஷ்மணுடன் இணைந்த சச்சின் விக்கெட் சரிவு ஏற்படாத வண்ணம் மிகவும் கவனமாக விளையாடினார். 45 ரன்களை எட்டிய பின்னர் ஆமை வேகத்தில் ரன் சேகரித்த சச்சின், ஒரு கட்டத்தில் 49 ரன்களை எட்டினார்.

விரைவில் அரைசதத்தை பூர்த்தி செய்து, வெஸ்ட்இண்டீஸ் வீரர் பிரையன் லாராவின் அதிக டெஸ்ட் ரன் சாதனையை முறியடிப்பார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், கேமரூன் வொய்ட் பந்தில், ஸ்டூவர்ட் கிளார்க்கிடம் கேட்ச் கொடுத்து சச்சின் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது போதிய வெளிச்சமும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து லஷ்மணுடன், கங்கூலி இணைந்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சுமார் 35 நிமிடங்கள் கழித்து மீண்டும் போட்டி துவங்கிய போது மீண்டும் களமிறங்கிய லஷ்மண்-கங்கூலி இணை, ஆஸ்ட்ரேலிய பந்துவீச்சை சமாளித்து விக்கெட் இழப்பின்றி முன்னெறியது.

இன்னிங்சின் 73வது ஓவர் முடிவில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்ட‌ம் நிறுத்தப்படுவதாக நடுவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, ஆஸ்ட்ரேலிய அணியும் போட்டியை டிரா செய்ய ஒப்புக் கொண்டது. அப்போது லஷ்மண் 42 ரன்களுட‌னு‌ம், கங்கூலி 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளர்களில் பிரெட்லீ, ஸ்டூவர்ட் கிளார்க், மிட்செல் ஜான்சன், கேமரூன் வொய்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இப்போட்டியின் 2 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜாகீர்கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1223909542&archive=&start_from=&ucat=4&

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails