|
|
இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது போல,பாகிஸ்தான்-சீனா இடையேயும் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.இது தொடர்பாக சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத்கான் கூறியதாவது: சிவில் அணுசக்தியை அமைதி வழிக்குப் பயன்படுத்துவதில் பாகிஸ்தானும் சீனாவும் எப்போதும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.அதனால்,இரு நாடுகள் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் தற்போதைய சீன பயணத்தின் போது கையெழுத்தாகும். தொழில்நுட்பம், விவசாயம், தாதுவளங்கள் என பல துறைகளில் இரு நாடுகள் இடையே ஏற்கனவே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில், அது தொடர்பான விதிமுறைகளிலும் இருநாடுகளின் தலைவர்களும் கையெழுத்திடுவர். சர்தாரியின் பயணத்திட்டத்தில் முக்கிய அம்சமாக அணுசக்தி ஒப்பந்தம் இடம் பெற்றுள்ளது. அதில் மாற்றம் இல்லை. பாகிஸ்தானில் புதிய அணு உலைகள் அமைக்க சீனாவின் உதவி அவசியம். அதற்காகவே ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இது தொடர் பான எங்களின் விருப்பத் தை சீன அரசிடம் தெரிவித்து விட்டோம். அவர்கள் எங்களை அதிருப்தி அடைய வைக்கமாட்டார்கள். இவ்வாறு மசூத்கான் கூறினார். அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதால், அதேபோன்ற ஒப்பந்தத்தை பாகிஸ்தானும் போட வேண்டும் என்ற நிர்பந்தம் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதனால் தான், சீனாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் அணுத்துறை வளர்ச்சியில் சீனாவின் ஆதரவும் அரவணைப்பும் உண்டு. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தால் ஏற்பட்ட நெருக்கத்தை சீனாவும் முழுமனதுடன் அங்கீகரிக்கவில்லை. இப்பகுதியில் பாகிஸ்தானுடன் நெருக்கம் கொண்டிருக்க சீனா மிகவும் விரும்புகிறது. அது, அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சம். |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1224085568&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment