Tuesday, October 28, 2008

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாலினச் சிக்கல்களும்


இந்து ராஷ்டிரத்தை அடையப் புறப்பட்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரங்கள், ஏன் ஆண்களை மட்டுமே கொண்ட அமைப்புகளாக உள்ளன என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் உமாபாரதி, சுஷ்மா சுவராஜ் போன்ற சில பேர்களை நாம் அறிவோம், அண்மையில் விஜய ராஜே சிந்தியா, சாத்வி ரீதம்பரா போன்ற சில பெயர்களை கேள்விப்படுகிறோம். இவர்களில் எவராலும் இந்துத்துவ கொள்கைகளை உருவாக்கும் இதயமான ஆர்.எஸ்.எஸ். பக்கம் எட்டிக் கூட பார்க்க முடியவில்லை. இவை குறித்து ஆர்.எஸ்.எஸ். இன் தலைமை சர்வாதிகாரி சுதர்சன் உரையை அண்மையில் கேட்க முடிந்தது.

மார்ச் 31, 2005 அன்று 'ராஷ்டிர சேவிக்கா சமிதி'யின் நிறுவன உறுப்பினர் லட்சுமிபாய் கேல்கர் குறித்த குறுந்தகடை வெளியிட்டு சுதர்சன் உரையாற்றினார்: ஆர்.எஸ்.எஸ்.இல் பெண்களை இணைத்துக் கொள்ள இயலாது. ஏனெனில் இந்திய சமூகம் அதனை அனுமதிப்பதில்லை. ஆண்களும், பெண்களும் இணைந்து பணியாற்றினால், அது சமூகத்தில் தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார். எந்த இந்திய சமூகம் குறித்து சுதர்சன் பேசுகிறார் என்று நமக்குப் புரியவில்லை. நாடெங்கிலும் இரு பாலரும் இணைந்து படிக்கும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. பெண்கள் பணிபுரியாத வேலைத்தளமே இல்லை எனலாம். என்ன விளைவை இவர் கண்டுவிட்டார் என்று புரியவில்லை. பெண்களை ஆர்.எஸ்.எஸ்.இல் இணைக்காதது ஏதோ சிறு விஷயமல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தந்தை வழி விழுமியங்களைக் கொண்டது.

1936 இல் லட்சுமிபாய் கேல்கர், அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவரிடம் சென்று தன்னை ஆர்.எஸ்.எஸ்.இல் இணைக்கும்படி கேட்டுள்ளார். கம்பை கையில் ஏந்தி பெண்களுக்கான சுய பாதுகாப்பை கற்றுக் கொள்ளவும் அவர் விரும்பினார். பெரும் குழப்பத்தில் சிக்கிக்கொண்ட ஆர்.எஸ்.எஸ்., தனது கொள்கைகளுக்கு இது ஒவ்வாது என முடிவெடுத்தது. உடனே லட்சுமிபாயை அழைத்து ராஷ்டிர சேவிக்கா சமிதியை தொடங்கும்படி கூறியது. ஆர்.எஸ்.எஸ். அய் பொறுத்தவரை அதன் உண்மையான நெருக்கடி எதுவெனில், அதன் தலைவர்களாக இருப்பவர்கள் பிரம்மச்சாரிகளாக சபதம் ஏற்க வேண்டும். அப்படி பிரம்மச்சாரிகள் இருக்கும் இடத்தில் எப்படி பெண்களை அனுமதிப்பது? இந்த விளைவு குறித்து தான் ஹெட்கேவர் முதல் சுதர்சன் வரை பேசுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.இன் தத்துவம் ஆண் சிந்தனை மரபை மய்யமாகக் கொண்டது. அது பாலினப் படிநிலையை -ஆணாதிக்கத்தையே கோருகிறது. ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ இயக்கத்தை கட்டுப்படுத்துகிற அமைப்பு என்கிற பொழுது, அதில் ஆண்கள் மட்டும் தான் இருக்க இயலும். அந்த அமைப்பின் பெயர்களைப் பார்த்தாலே இது தெரியும். ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் மற்றும் ராஷ்டிர சேவிகா சமிதி. இரண்டாவதாக வரும் அமைப்பின் பெயரில் 'ஸ்வயம்' (சுயம்) காணாமல் போகிறது. ஏனெனில் பெண்களுக்கு சுயம் என்பது கிடையாது. அவர்கள் ஆண்களின் அடிமைகளே என்கிற இந்து மதக் கோட்பாடு தான் இங்கு முன்னுரிமை பெறுகிறது.

தேசிய இயக்கங்களில் பெண்கள் பல தளங்களிலும் ஆண்களுக்கு இணையான செயல்பாடுகளில் மிளிர்கிறார்கள். ஆனால் இன்று முஸ்லிம் லீக், இந்து மகாசபையில் பெண்கள் அனுமதிக்கப்படõதது ஒரு கேள்வியாகவே இருக்கிறது. மனுஸ்மிருதியை எரிக்கும்பொழுது அம்பேத்கர் கூட, சூத்திரர்கள், பெண்கள் அடிமையாக இருப்பதை வேரறுக்க வேண்டும் என முழங்கினார். மறுபுறம் மனுவின் சட்டங்களை, மனுஸ்மிருதியை இந்துத்துவ அறிவுஜீவிகள் புகழாரம் பாடினார்கள்.பெண்களின் சமத்துவம் நோக்கிய செயல்பாடுகளுக்கு எதிராக துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன.

அதில், "மேற்கத்திய தாக்கத்தால் பெண்கள் சரிசமமான உரிமை, பொருளாதாரச் சுதந்திரம் என போராடத் தொடங்கியுள்ளனர். இது பெரும் ஆபத்து, அன்பு, தியாகம், தொண்டு ஆகியவைக்கு உட்படாமல் பெண்கள் விலகிச் செல்ல நேரிடும். பெண்களின் சுதந்திரம் குடும்பத்தை சிதைத்துவிடும். குடும்பம் தான் நல்லொழுக்கத்தை போதிப்பதற்கான அடிப்படை அமைப்பு '' (இந்து தேசத்தில் பாலினம், பவுலா பசேத்தா, பக்.8) இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தான் சங்பரிவாரங்கள் விதவிதமான மொழிகளில் பேசி வருகிறார்கள். குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை போதிப்பது என்றால், குழந்தைகளுக்கு பார்ப்பனிய விழுமியங்களை கற்றுத்தருவது என்று பொருள். 'சங்'கின் வேறு சில துணை அமைப்புகளில் பெண்கள் இணைக்கப்பட்டார்கள். பா.ஜ.க., மகிளா மோர்ச்சா, துர்கா வாகினி அதில் முதன்மையானவை. ஆனாலும் இவர்களின் கருத்தாக்கத்தின் முகமூடிகள் பல சந்தர்ப்பங்களில் வெளிச்சத்திற்கு வருகின்றன.

ரூப் கன்வர் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, 'சதி'யை தடை செய்ய சட்டம் இயற்றுவது பற்றி ஆலோசனை நடந்து வந்தது. அந்த நேரம் பா.ஜ.க.வின் துணைத் தலைவர் விஜயராஜே சிந்தியா நாடாளுமன்றம் நோக்கி கண்டனப் பேரணியை நடத்தினார். அவர், உடன்கட்டை ஏறுவது இந்து மதத்தின், இந்து மரபின் பெருமை. கணவருடன் உடன் கட்டை ஏற பெண்களுக்கு உரிமையுள்ளது என்றார். இங்கு நமக்கு எழும் முக்கியக் கேள்வி: தனது கணவர் இறந்தபோது விஜயராஜே சிந்தியா ஏன் உடன்கட்டை ஏறவில்லை?

அதே போல் பா.ஜ.க.வின் மகிளா மோர்ச்சாவின் தலைவி மிருதுளா சின்ஹாவின் பேட்டியும் இதே சிந்தனைத் தளத்தில் வெளிவந்தது. (குச்திதிதூ, ஏப்ரல் 1994). அதில் அவர் வரதட்சணையை ஆதரிக்கிறார், பெண்களை கணவர்கள் அடிப்பது சரி என்கிறார். மிகவும் அவசியமான இக்கட்டான பொருளாதாரத் தேவை ஏற்படாதவரை, பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது என பேசிக்கொண்டே செல்கிறார். பெண்கள் சம உரிமை கோருவது முட்டாள்தனமானது என முடித்தார் பேட்டியை.

பெண்கள் குறித்த ஆர்.எஸ்.எஸ்.இன் நிலைப்பாட்டுக்கும் தாலிபான், இஸ்லாமிய அமைப்புகளின் நிலைப்பாடுகளுக்கும் வேறுபாடுகள் கிடையாது. மறுபுறம் ஹிட்லரும் இதே குரலில் தான் பெண்கள் குறித்துப் பேசுகிறார். முஸ்லிம்கள் பெண்களை வேலைக்கு அனுமதிப்பதில்லை. அவர்களை கட்டுப்படுத்த ஷரியத் சட்டங்களை முன்வைக்கிறார்கள். 'பெண்கள் -தேவாலயம், குழந்தைகள், சமையல் அறையைத் தான் சுற்றி வர வேண்டும்; தாய்மையே மேன்மையானது' என்றார் ஹிட்லர்.

மிகத் தந்திரமான மொழிகளில் பெண்களைப் போற்றிக் கொண்டே ஆணாதிக்கத்தை மீண்டும் நிறுவுவதுதான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் புகழ்ப்பெற்ற பிரச்சாரகர்களின் அடிப்படை நோக்கம். இருப்பினும் பெண்களின் சமத்துவத்திற்கான இயக்கம், இந்துத்துவத்தின் உண்மையான நோக்கங்களை வெளிப்படுத்தி, அதை நிராகரித்தும் வருகின்றது.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails